பட்டப் படிப்பை முடித்த பிறகு, வேலை தேடி முதல் முறையாகப் பலவித எதிர்பார்ப்புகளோடும் பயத்தோடும் சென்னைக்கு வந்தேன். ஒரு பிரபலமான துணிக்கடையில் நண்பன் வேலைக்குச் சேர்த்து விட்டான். விடுதியில் இருந்த பலரும் சென்னையின் புகழ்பெற்ற இடங்களைக் குறித்துச் சொல்லச்சொல்ல, எனக்கும் அவற்றை எல்லாம் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது.
ஒரு விடுமுறை நாளில் மாம்பலத்தில் ரயில் ஏறினேன். சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களுக்குச் செல்வதில், ஏனோ ஒரு தயக்கம் இருந்தது. வேறு எங்கே செல்வது என்று யோசித்தேன். மாநிலக் கல்லூரியில் என் சீனியர் ஒருவர் படிப்பது அப்போது நினைவுக்கு வந்தது. அவரைத் தொடர்புகொண்டு பார்க்க வருவதாகச் சொன்னேன். அவரும் எப்படி அவர் இருக்கும் இடத்தை வந்தடைய வேண்டும் என்று கூறினார்.
அதற்காக ரயிலில் சென்றபோது பத்திரமாகப் பொருள் களை வைத்துக்கொள்ளுங்கள் என்று வெளியான குரல் அறிவிப்பு என் பயத்தை மேலும் அதிகரித்தது. சக பயணி ஒருவரிடம் வழி கேட்டபோது, அவர் ’சென்னைக்குப் புதுசா’ என்று கேட்டுவிட்டு, அதன் பிறகே வழியைச் சொன்னார்.
என் சீனியரைப் பார்த்துவிட்டுப் புறப்படுவதற்கு இரவாகிவிட்டது. வெகுதூரம் நடந்து சென்றதால் சற்றுச் சோர்வாக இருந்தேன். பேருந்தில் உட்கார இடமில்லை. கூட்ட நெரிசல் வேறு. அப்போது பெண்கள் இருக்கையில் இருந்து ஒருவர் எழுந்திருப்பதைப் பார்த்து, அதில் ஓர் ஆண் அமரப் போனார். நான் அவரிடம் அது பெண்கள் இருக்கை என்றேன்.
அதைக் கவனித்த பாட்டி ஒருவர், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பெண் இருக்கை ஒன்று காலியாவதைச் சுட்டிக்காட்டி, ’தம்பி உட்காரு அந்த சீட்ல, உன்ன யாரும் எதுவும் சொல்ல மாட்டங்க’ என்று கரிசனத்தோடு சொன் னார். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் பயணம் சென்னையின் மீது எனக்கு இருந்த பயத்தையும் என் பார்வையையும் மாற்றியது. திரைப்படங்கள் ஓர் ஊரை, ஓர் இடத்தை எவ்வளவு மோசமாகச் சித்தரிக்கின்றன என்பதையும் இந்தப் பயணம் எனக்குக் காட்டியது.
- கொ. தீனேஷ்வர், பயிற்சி இதழாளர்