பண்டிகைகளை ஆச்சி, தாத்தாக்கள் எல்லாம் `பண்டியல்’ என்பார்கள். `ஏல தீபாவளிப் பண்டியல் வருதுல்லா, சட்டைத் துணிமணி எடுத்துட்டானா உங்க அப்பா’ என்று கேட்பார் சுந்தரத்தாச்சி. அவர் அப்பாவுக்கு அத்தை. சிறு வயதிலேயே கணவனை இழந்து வீட்டோடு வந்துவிட்டார். ஆனால், அப்பா தன் அம்மாவுக்கும் மேலாகத்தான் அவரைப் பார்த்துக்கொண்டார் என்பார்கள்.
நாங்கள் விளையாட்டு மும்முரத்தில் இருக்கையில், `பேராண்டிகளா, படிக்க வேண்டாமா, பொழுதன்னிக்கும் விளையாட்டுதானா’ என்று அவர் அறிவுரை சொல்லும்போது, `உனக்கு வேற வேலையில்லை, செவனேன்னு இரேன்’ என்று நாங்கள் சொன்னால் அவர், `உங்க அப்பா நான் சொன்ன பேச்சுக்கு மறுபேச்சு சொல்லாம, என்னை உள்ளங்கையில வச்சுத்தான் தாங்குவான், நீங்க எடுத்தெறிஞ்சு பேசுதீங்களே’ என்பார். அவர் சட்டையை மறந்து கொள் ளைக் காலம் ஆகியிருக்கும்.
எங்க ளுக்குத் தீபாவளி, பொங்கல் பண்டியலுக்குச் சட்டைத் துணிமணி எடுக்கும் போது அவருக்கும் ஒரு சேலை எடுத்துவிடுவார் அப்பா. அதுவும் வெள்ளைச் சேலைதான். அப்பா எத்தனையோ தடவை சொல்லிவிட்டார், `நீ கலர் சேலை உடுத்திக்கோ. இப்ப எதுக்குப் பழைய சாஸ்திரமெல்லாம் பாத்துக்கிட்டு இருக்கே, நீ மட்டும் வெள்ளையைக் கட்டிக்கிட்டா மனசுக்கு என்னவோ போல இருக்கு அத்தை’ என்பார்.
அப்படியும் ஒரு பொங்கலுக்குக் கண்ணுக்கே தெரியாத நீல வண்ண பார்டர் வைத்த வெண்பட்டு ஒன்றை எடுத்துவந்தார். அதைக் கட்டிக்கொள்ளவே மாட்டேன் என்று மறுத்து, தன் டிரங்குப் பெட்டிக்குள் அவர் வைத்துக்கொண்டார். அந்த டிரங்குப் பெட்டிக்குள் வெள்ளைச் சேலைகள் தவிர, அவர் கணவரின் பூஜைப் பாத்திரங்கள், காசி விஸ்வநாதர் படம், ஸ்படிக லிங்கம், ருத்ராட்ச மாலை போன்றவை இருக்கும். ஏதாவது அமாவாசை, பௌர்ணமி அன்று அந்தப் பாத்திரங்களை வைத்து ஸ்படிக லிங்கத்திற்குப் பூஜை செய்வார். அது போக ஒரு சின்னப் பெருங்காய டப்பாவில் கொஞ்சம் காசு வைத்திருப்பார்.
அந்தக் காசு அவர் தவிடு கொழித்து (புடைத்து) விற்ற காசு. ஒவ்வொரு முறை நெல் அரிசியாகக் குத்தி வரும்போது, முக்கால் மூடை உமியும் வரும். முந்தானையால் முகத்தை மூக்குவரை மூடிக்கொண்டு, உமியைச் சொள கில் போட்டுக் கொழித்து, உமி வேறு தவிடு வேறாகப் பிரித்தெடுப்பார்.
அந்தத் தவிடை கோழி களுக்கு, மாடுகளுக்குப் போட வாங்கிப் போவார்கள். ஒரு பக்கா (படி) ஓரணா (ஆறு நயா பைசா) என்று கொடுப்பார். அந்தக் காசையும் நாங்கள் திருவிழாத் துட்டு, பண்டியல் காசு என்று வாங்கிவிடுவோம். அவராகச் செலவழித்தால் அரைக்கட்டி சன்லைட் சோப்பும் நீலம் சோப்பும் வாங்கிவரச் சொல்வார். பண்டியலுக்குப் பண்டம், பலகாரம் செய்ய ஆச்சி ரொம்பவும் ஒத்தாசையாக இருப்பார். அவ்வளவு நெருக்கமாகத் திருகாணி நெளிவுபோல முறுக்கு சுற்றுவார். துளி மாவு சிந்தாது, சிதறாது. அப்பாவுக்குப் பிடிக்கு மென்று பாதி வெந்த முறுக்கினைக் கொடுத்துவிடுவார்.
ஓர் ஈடு வேகுவதற்குள் ஒரு சொளவு பூராவும் முறுக்குகளைச் சுற்றி விடு வார். அடுப்பை எட்டிப் பார்க்காமலே, முறுக்கு வேகும் சலசலப்பை வைத்தே, அவையெல்லாம் வெந்துவிட்டனவா இல்லையா என்று சொல்லி விடுவார். முறுக்குக்குத் தேவையான உளுந்த மாவை அவரே `திருவை’யில் திரித்துத் தருவார். அரிசி மாவை யாராவது கல் உரலில் அரைக்கையில், உளுந்த மாவைத் திரித்துவிடுவார். தீபாவளிக்கு அதிரசம் சுடுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே பக்குவமாக மாவை வெல்லப் பாகில் கலந்து வைத்துவிடுவார்.
தீபாவளி அன்றும் எண்ணெய்ச் சட்டி முன்னால் காத்துக் கிடப்பதும் அவர்தான். உளுந்த வடை, ஆமவடை, கார வடை என்று மூன்று தினுசுகள். அது போக பஜ்ஜி. வாழைக்காய், உருளைக் கிழங்கு, கத்தரிக்காய் என்று அதிலும் மூன்று வகை. இனிப்பிலும் முந்திரிக்கொத்து, சுசியம் என்று நாலு வகை. `நீங்க குளிச்சு முழுகி சாமி கும்பிட்டு புது ட்ரெஸ் போடுங்க. அடுப்பை நான் பாத்துக்கிடுதேன்’ என்று அம்மாவையோ அக்காவையோ அடுப்புப் பக்கமே வரவிடமாட்டார். எல்லாரும் விழிக்கும் முன்பே எழுந்து வெந்நீர் போட்டுக் குளித்து மற்றவர்களுக்கும் பெரிய வெந்நீர்த் தவலையில் வெந்நீரைப் போட்டு வைத்துவிடுவார்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சுக்கு, மிளகு, ஓமம், சீரகம் என்று ஏதேதோ சேர்மானங்கள் சேர்த்து தீபாவளி லேகியம் என்று உருண்டை யாகச் செய்து வைப்பார். எண்ணெய்ப் பலகாரம் தின்ற பித்தத்திற்கு மருந்து. பண்டங்களையும் மாதிரிக்கு ஒவ்வொன்றிலும் ஒன்றை மட்டுமே சாப்பிடுவார். அவரால் ஒருத்தருக்கும் ஓர் இடைஞ்சலும் கிடையாது. மண்டையிடி, காய்ச்சல் என்று அவர் படுத்ததே கிடையாது.
ஒரு பண்டியல் கழிந்த மறுநாள் அம்மாவிடம், `எனக்கு ஒருபடியா நெஞ்சைக் கரிச்சிக்கிட்டு வருது. கொஞ்சம் இளஞ்சூடா வெந்நி வச்சு இம்புட்டுக் காயத்தைக் கரைச்சுத் தாறியா’ என்று கேட்டுவிட்டுப் படுத்தார். அப்போதுகூட வழக்கமாகப் படுக்கும் கட்டிலில் படுக்காமல் தரையில் படுத்தார். அம்மா காயத்தைக் கரைத்து எடுத்து வரும்முன் போய்விட்டார்.
எல்லாரும், `போய்ச் சேர்ந்துட்டா புண்ணியவதி, நல்ல சாவு, கஷ்டப்படவும் இல்லை, கஷ்டப்படுத்தவும் இல்லை’ என்று பேசிக்கொண்டார்கள். அப்பா மட்டும், `அவங்க ஊதா பார்டர் வச்ச சேலை கட்டியிருக்காங்க பார்த்தியா’ என்று அம்மாவிடம் சொன்னார். அம்மா பொங்கிப்பொங்கி அழுதார்.
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com