வேளாண் பல்கலைக்கழகங்கள் செய்யாததை, வேளாண் விஞ்ஞானிகள் செய்யாததை, 6ஆம் வகுப்பைக் கூடத்தாண்டாத ஒரு கிராமத்து விவசாயி செய்துகாட்டி, சாதனை புரிந்திருக்கிறார். ஆனால், தனது கண்டுபிடிப்புக்காக தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் அந்த ஏழை விவசாயி பரிதவித்து வருகிறார்.
வெறும் கால் கிலோ விதை நெல்லை மட்டுமே விதைத்து, ஒரு ஏக்கரில் ஒற்றை நாற்று நடவு செய்து, உயர் விளைச்சல் எடுத்து வருவதே ஆலங்குடி பெருமாள் என்ற அந்த விவசாயியின் சாதனை. இவர், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடியைச் சேர்ந்தவர். தனது கண்டுபிடிப்புக்கான அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் ஏக்கத்தில் தவித்து வருகிறார்.
இது குறித்து ‘நிலமும் வளமும்' வாசகர்களுக்காக, அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 1980ஆம் ஆண்டு நாற்று விட்ட நேரத்தில் கனமழை பெய்து, நாற்று சரியாக முளைக்கவில்லை.
அன்றைய சூழ்நிலையில் வேறு வழி எதுவும் இல்லாததால், வயலை தரிசாகப் போட மனமின்றி, கிடைத்த நாற்றுக்களை ஒரு அடி, ஒன்றரை அடி இடைவெளிக்கு ஒன்று நடவு செய்து வைத்தேன். ஆனால், எதிர்பாராத வகையில், ஒரு பயிருக்கு 100 தூர்களுக்கு மேல் செழித்து வளர்ந்தது. வழக்கமான மகசூலைவிட அந்த ஆண்டு அதிக மகசூல் கிடைத்தது.
இதனால் உற்சாகமடைந்த நான், அடுத்தடுத்த ஆண்டுகளில் 30 செ.மீ. 40 செ.மீ. 50 செ.மீ. என பயிர்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரித்துக் கொண்டே வந்தேன். மேலும், ஏக்கருக்கு 10 கிலோ, 5 கிலோ, 2 கிலோ, 1 கிலோ என விதை நெல் அளவையும் குறைத்துக்கொண்டே வந்தேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு 2003இல், திருந்திய நெல் சாகுபடி பற்றி வேளாண் அதிகாரிகள் பிரச்சாரம் செய்தார்கள். 2 கிலோ விதை நெல்லில், நாற்று விட்ட 14 நாளில், 22 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார்கள். அந்த தருணத்தில் நான் ஏக்கருக்கு அரை கிலோ விதை நெல் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.
இந்நிலையில், 2003ஆம் ஆண்டு ஆடுதுறை 47 என்ற புதிய நெல் ரகம் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள், எனக்கு 2 கிலோ விதை நெல் கொடுத்தார்கள். அதில், கால் கிலோ விதை நெல்லை மட்டும் விதைத்த நான், 50 செ.மீ. இடைவெளிக்கு ஒரு நாற்று என, ஒரு ஏக்கரில் 16,000 நாற்றுக்களை மட்டுமே நடவு செய்தேன்.
ஒவ்வொரு நாற்றில் இருந்தும் 100 முதல் 120 தூர்கள் வளர்ந்தன. ஒரு நெற்கதிரில் சுமார் 400 நெல் மணிகள் இருந்தன. ஏக்கருக்கு 4 டன் மகசூல் கிடைத்தது. ஒரு நெல்லில் இருந்து கிளைத்து வளர்ந்த 120 தூர்களைக் கொண்ட முழு பயிரையும் வேரோடு ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்துக்கு எடுத்துச் சென்றேன். அங்கிருந்த பேராசிரியர்கள் ஒரு நாற்றில் இவ்வளவு தூர் இருப்பதைக் கண்டு அதிசயத்துப் போனார்கள். மேலும் ஒரு நெற்கதிரில் 400 நெல்மணிகளை இதுவரை நாங்கள் பார்த்தது இல்லை என்று சில பேராசிரியர்கள் கூறினர்.
இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய எனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்த தகவலை தெரிந்துகொண்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், 2004ஆம் ஆண்டு எனது வயலுக்கு வந்துவிட்டார். எனது சாகுபடியை நேரில் ஆய்வு செய்தார். “கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் சாகுபடி என்பதுஉலகத்தில் இதுவரை யாரும் செய்திடாத சாதனை” என்று என்னை அவர் பாராட்டினார். அன்று முதல் அவர் செல்லும் இடங்களிலெல்லாம் எனது சாகுபடி முறைப் பற்றி பேசத் தொடங்கினார்.
இதற்கிடையே, எனது சாதனையை அங்கீகரிக்கக் கோரி 2007ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு கடிதம் எழுதினேன். அதனைத் தொடர்ந்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் என்னைத் தேடி வந்தனர். அவர்கள் முன்னிலையில் சாகுபடி செய்ய வேண்டும் என்று கூறினர். அதன்படி கால்கிலோ மட்டும் கொண்டு, விதை தெளிப்பது முதல் அறுவடை வரை அனைத்தையும் அதிகாரிகள் நேரில் பதிவு செய்தனர்.
அந்த ஆண்டு 3 டன் மகசூல் கிடைத்தது. ஆனால், 3 டன்னுக்கு மேல் மகசூல் எடுத்த விவசாயிகள் இருப்பதால், இது சாதனை ஆகாது என்று கூறிவிட்டனர். எனினும், நான் எனது சாதனை சாகுபடியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். மீண்டும் 2011-இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன்.
இதனைத் தொடர்ந்து, சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் எனது வயலுக்கு வந்தனர். வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், நூற்றுக்கணக்கான விவசாயிகள் முன்னிலையில், விதைத் தெளிப்பு முதல் அறுவடை வரை அந்த ஆண்டு சாகுபடி செய்தேன்.
4 டன் மகசூல்கிடைத்தது. “உண்மையிலேயே சாதனைதான்” என்று அதிகாரிகள் கூறினர். ஆனாலும், அரசிடமிருந்து எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், எனது சாகுபடி முறை பற்றி அறிந்த புதுச்சேரியில் அமைச்சராக இருந்த கமலக்கண்ணன், அந்த மாநில அதிகாரிகளோடு எனது வயலுக்கு அடுத்தடுத்து வருகை தந்து ஆய்வு செய்தார். எனது சாகுபடி முறை தனித்துவம் மிக்கது என்பதை உறுதி செய்த பின்னர், புதுச்சேரிக்கு என்னை வரவழைத்து, அந்த மாநில அரசின் சார்பில் பாராட்டினார்.
இதற்கிடையே, சிவகங்கையில் ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்த நம்மாழ்வார், என்னைப் பாராட்டி கவுரப்படுத்தினார். “அரசு அங்கீகாரம் கிடைக்காவிட்டால் பரவாயில்லை; ஊர் ஊராகச் சென்று விவசாயிகளுக்கு உங்கள் சாகுபடி பற்றிக் கற்றுக் கொடுங்கள்.
விவசாயிகள் தரும் அங்கீகாரம்தான் பெரிய விருது” என்று என்னை அவர் ஊக்கப்படுத்தினார். தமிழ்நாடெங்கும் அழைத்துச் சென்று விவசாயிகளிடம் பேச வைத்தார். அதேபோல், காலஞ்சென்ற நெல் ஜெயராமன், எனது சாகுபடி முறைக்கு அரசு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்தார்.
தமிழ்நாடு மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று எனது சாகுபடி முறை அங்கெல்லாம் பரவச் செய்தார். தமிழ்நாட்டில் பல மாவட்ட ஆட்சியர்கள், என்னை அவர்கள் மாவட்டங்களுக்கு வரவழைத்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கச் செய்திருக்கிறார்கள். பல வேளாண் கல்லூரிகளுக்குச் சென்று, மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறேன். ஏராளமான வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் நேரடியாக எனது வயலுக்கு வந்து, கற்றுச் சென்றிருக்கிறார்கள்.
‘ஆலங்குடி பெருமாள் சாகுபடி முறை' என்று தேடினால், யூ டியூப் சேனல்களில் நூற்றுக்கணக்கான வீடியோக்களைக் காணலாம். கால் கிலோ விதை நெல் என்பதால், நாற்றங்கால் செலவு, நாற்று பறிக்கும் செலவு குறைகிறது. 30 செ.மீ. முதல் 50 செ.மீ. வரை இடைவெளி விட்ட நடவு முறை என்பதால் நடவு ஆட்கள் எண்ணிக்கையும் குறைகிறது. நன்கு இடைவெளி விட்டு நடவு செய்வதால், புயல், மழை என எந்த சூழலிலும் பயிர் கீழே சாயாமல் இருக்கிறது. பூச்சித் தாக்குதல், எலியால் பாதிப்பு போன்றவை குறைவு.
வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்யும் எந்த நெல் ரகமும், ஏக்கருக்கு 3 டன் மகசூல் கிடைக்கும் என்று அவர்களே சொல்வதில்லை. ஆனால், இந்த நடவு முறையில் நான் 3 டன் முதல் 4 டன் வரை மகசூல் எடுத்திருக்கும்போது, அங்கீகாரம் கிடைக்காதது வருத்தம் தருகிறது. இயற்கை விவசாயம் இன்று வெற்றிகரமாக நடைபெறுவதற்கு, எனது சாகுபடி தொழில்நுட்பம் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
எனது சாகுபடி முறையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்போதைய தமிழ்நாடுவேளாண் அமைச்சருக்கும் தெரிவித்திருக்கிறேன். இந்த ஆண்டும் வேளாண் அதிகாரிகள் எனது சாகுபடி முறையை பதிவு செய்தனர். சமீபத்தில் அறுவடை முடிந்த குறுவை சாகுபடியில் ஏக்கருக்கு 3 டன் மகசூல் எடுத்திருக்கிறேன். இவ்வாறு ஆலங்குடி பெருமாள் கூறினார்.
ஆயிரக்கணக்கான விவசாயிகளின் ஆவல்: ஆலங்குடி பெருமாள் சாகுபடி முறையை அங்கீகரிப்பதன் மூலம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான நெல் விவசாயிகளிடம் இந்த முறையை கொண்டு செல்ல முடியும். இதனால் சாகுபடி செலவுகணிசமாகக் குறைவதோடு, அதிக உற்பத்தியும் சாத்தியம் என்பதை ஒருமுறை அல்ல; பலமுறை அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். ‘சிறந்த விவசாயியாக தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு, முதலமைச்சர் கையால் விருது பெற வேண்டும்' என்பது ஆலங்குடிபெருமாளின் பெரும் ஏக்கமாக நீடித்து வரு கிறது.
நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகி யோரது பணிகளை தமிழ்நாடு அரசு அங்கீ கரித்துள்ளது. அவர்களால் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயேயும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட, தற்போது 70 வயது ஆகும் ஆலங்குடி பெருமாளை தமிழ்நாடு அரசும் அங்கீகரிக்க வேண்டும். இது அவரது கோரிக்கை மட்டுமல்ல; அவரைப்பற்றி அறிந்த தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெரும் ஆவல்.
(தொடர்புக்கு: 94868 35547)
- devadasan.v@hindutamil.co.in