உலக அளவில் மென் பொருள் புரட்சியில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. ஆனாலும் வன்பொருள் கட்டமைப்புக்கு (hardware) பின்புலமாக இருக்கும் செமிகண்டக்டர் சிப் (சில்லு) உற்பத்தியில் பல ஒளி ஆண்டுகள் இந்தியா பின்தங்கி இருப்பதாக இத்துறையை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்குத் தேவையான 19 பில்லியன் செமி கண்டக்டர் சிப்களில் சுமார் 95 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த இறக்குமதியின் மதிப்பு ஏறக்குறைய ரூ.1.71 லட்சம் கோடியாகும். இந்த சிப்களில் அப்படி என்ன இருக்கிறது? இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் பெரும்பாலான பொருள்களுக்கும் சேவைகளுக்கும் மையமாக இருப்பது இந்த சில மில்லிமீட்டர் அளவே கொண்ட சிப்கள்தான்.
சிறிய மொபைல் போனிலிருந்து பல்லாயிரம் சதுர அடிகள் பரவிக் கிடக்கும் தரவு மையங்கள் (Data Centres), வாகன தொழிற்சாலைகளில இருந்து ரோபோக்கள் வரை, தானியங்கி கார்கள் முதல் கப்பல்கள், விமானங்கள், ராக்கெட்டுகள், விண்கலங்கள் வரை, ஸ்மார்ட் டி.வி. முதல் வை-பை ரவுட்டர் வரை, எம்ஆர்ஐ ஸ்கேனர் முதல் க்ளவுட் சேவை வரை எங்கும் வியாபித்து இருப்பது இந்த சிப்தான்.
நவீன போர்க்கருவிகளிலும் இந்த சிப்பின் பங்கு முக்கியம் என்பதை ஆபரேஷன் சிந்தூர் (தானியங்கு நுண்ணறிவு ட்ரோன்கள், துல்லியமாக வழி நடத்தப்பட்ட ஏவுகணைகள் அல்லது ரேடார் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவற்றிலும் இந்தச் சிப்கள் பயன்படுத்தப்பட்டன) வெளிப்படுத்தியது. நான்காம் தொழில் புரட்சியின் முக்கியமான பொருளாக விளங்குவது இந்த சிப்தான் என்று சொன்னால் அது மிகையில்லை.
இந்தியா இந்தச் சிப்களை உற்பத்தி செய்யாததன் பலனை கரோனா பெருந்தொற்று காலத்தின்போது அனுபவிக்க நேர்ந்தது. அப்போது விநியோக சங்கிலி பெருமளவு பாதிப்புக்கு உள்ளானதால், செமிகண்டக்டர் சிப்கள் கிடைக்காமல் பல தொழில் துறைகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. என்னதான் சிப் வடிவமைப்பிலும், புத்தாக்கத்திலும், உற்பத்தியிலும் அமெரிக்காவின் பங்கு 12 சதவீதம் இருந்தாலும், இந்த நெருக்கடியிலிருந்து அதனாலும் தப்பிக்க முடியவில்லை.
கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தைவான், தென்கொரியா, மற்றும் ஓரளவுக்கு சீனா ஆகிய நாடுகள்தான் இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. இதன் காரணமாக, 2022-ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜோ பைடன், ‘சிப்ஸ் அண்ட் சைன்ஸ்’ சட்டத்தின் கீழ் இதன் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், இத்துறைக்கென 52.7 பில்லியன் டாலரை ஒதுக்கினார்.
செமிகண்டக்டர் மிஷன்: செமிகண்டக்டர் சிப்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திய அரசு, கடந்த 2021-ம் ஆண்டு ‘செமிகண்டக்டர் மிஷன்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களை ஈர்க்கும் பொருட்டு ரூ.76,000 கோடியை முதலீடு செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழான சலுகை இந்தச் சிப்களை வடிவமைத்தல், செய்துருவாக்கம் செய்வது (Fabrication) முதல் உள்நாட்டிலேயே ஒன்றிணைத்தல் (Assembling), சோதனை செய்தல் மற்றும் பேக்கிங் செய்தல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சிப்களைத் தயாரிப்பது எளிதான காரியம் இல்லை. தற்சமயம் ஒரு சில நாடுகள் மட்டுமே இதன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சிப் தயாரிப்புக்கு 99.5 சதவீதம் வரை துல்லியம் தேவைப்படுகிறது. அதோடு இது அதிக மூலதனம் தேவைப்படும் துறை என்பதோடு குறைவான வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கக் கூடியதாக இருந்து வருகிறது.
அதோடு இதன் உற்பத்திக்கு தடையில்லா மின்சாரம், தண்ணீர் மற்றும் அரிதான வேதிப் பொருள்களும் தேவைப்படுகின்றன. இதனால், இத்தொழில் துறையில் அதிக முதலீடு செய்வதை மேனாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் விமர்சனம் செய்தாலும், மத்திய அரசு இதை நிறைவேற்றுவதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ரூ.1.6 லட்சம் கோடி முதலீடு: இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் செமிகண்டக்டர் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் சிப்பை (விக்ரம் 32) மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோடியிடம் வழங்கினார். இது இஸ்ரோவின் செமிகண்டக்டர் ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டது.
இத்துறையில் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.1.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டாலும் இதன் முழு பலனையும் அனுபவிக்க சுமார் ஒரு தசாப்த காலம் காத்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இருந்தாலும் இது ஒரு துணிச்சலான, ஆபத்தான மற்றும் மூலதனம் அதிகம் தேவைப்படும் திட்டம் ஆகும்.
செமிகண்டக்டர் தயாரிப்புக்கென புதிதாக உருவாகியிருக்கும் மையம் குஜராத்தில் இருக்கும் சனாந்த் (Sanand) ஆகும். இங்குதான் ரூ.7,600 கோடி முதலீட்டில் முருகப்பா குழுமத்தின் சிஜி பவர் நிறுவனம் தனது பரிட்சார்த்த உற்பத்தியை தொடங்க இருக்கிறது. இத் தொழிற்சாலையானது ஆண்டுக்கு சுமார் 4,044 மில்லியன் சிப்களை உற்பத்தி செய்யும் எனத் தெரிய வருகிறது. இதன் மூலம் மின்னணு, வாகனம் மற்றும் மின்சார உற்பத்தித் துறைகள் பயனடையக் கூடும்.
* 2023-ம் ஆண்டு செமி கண்டக்டர்களின் சந்தை ரூ.3.37 லட்சம் கோடியாக இருந்தது. 2025-ம் ஆண்டில் ரூ.4.43 லட்சம் கோடியாக அதிகரித்து, 2030-ம் ஆண்டு ரூ.9 லட்சம் கோடியைத் தொடும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
* 2022-ம் நிதியாண்டில் இந்தியா இறக்குமதி செய்த சிப்களின் எண்ணிக்கை 17.9 பில்லியன், 2023-ம் ஆண்டு 14.6 பில்லியன், 2024-ம் ஆண்டு 18.4 பில்லியன். இதன் மதிப்பு முறையே ரூ.1.07 லட்சம் கோடி, ரூ.1.29 லட்சம் கோடி மற்றும் ரூ.1.71 லட்சம் கோடியாகும்.
10 நிறுவனங்களுக்கு அனுமதி
* இண்டியா செமி கண்டக்டர்ஸ் மிஷன் (ISM) திட்டத்தின் கீழ் பஞ்சாப், உத்தர பிரதேசம், குஜராத், அசாம், ஒடிசா, ஆந்திரா ஆகிய ஆறு மாநிலங்களில் 10 நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது.
* எதில் எல்லாம் இந்தச் சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன? மைக்ரோப்ராசசர்ஸ், ஜிபியு (GPU), மெமரி சிப்கள், க்ரிப்டோ கரன்சி மைனிங், நெட்வொர்க் செயலாக்கம் அல்லது தொழில் துறை ஆட்டோமேஷன் போன்ற துறைகளில் பிரத்யேகமான வேலைகளைச் செய்யக்கூடியவை. அதாவது, Application Specific Integrated Circuit (ASIC), சிக்னல் கன்வெர்ஷன் சிப், பவர் மேனேஜ்மென்ட் சிப், சென்சார் சிப் என பல துறைகளில் பல்வேறு விதமான வேலைகளைச் செய்ய இவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டங்கள் எல்லாம் வெற்றிகரமாகச் செயல்படும்பட்சத்தில் பத்தாண்டுகளில் நம் நாட்டுக்குத் தேவையான சிப்களின் எண்ணிக்கையில் சுமார் 35 சதவீத அளவை இதன் மூலம் பெற முடியும். இப்போதைய நிலையுடன் ஒப்பிடும்போது இது மிகப் பெரிய வளர்ச்சியும் எண்ணிக்கையும் ஆகும்.
இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “உலகில் உள்ள ஒவ்வொரு சாதனத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் இருக்க வேண்டும் என்பது நம்முடைய கனவு” என்று கூறியிருந்தார். கனவு மெய்ப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியாவில் 2 நானோ மீட்டர் சிப்: மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் கூறும்போது, "ஒரு காலத்தில் 7 நானோ மீட்டர், 5 நானோ மீட்டர் செமி கண்டக்டர் சிப்கள் ஆதிக்கம் செலுத்தின. தற்போது 2 நானோ மீட்டர் செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
நம் நாட்டிலும் 2 நானோ மீட்டர் சிப் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதை நுண்ணோக்கி மூலம் கூட பார்க்க முடியாது. இது மனிதனின் முடியில் 10,000-த்தில் ஒரு பங்கை விடச் சிறியதாகும். இந்த சிப் உலக சந்தையை புரட்டிப் போடும். உலகத்தின் ஒட்டுமொத்த சிப் வடிவமைப்பாளர்களில் 20% பேர் இந்தியர்கள் ஆவர். எனவே இந்தத் துறையில் இந்தியா நிச்சயமாக சாதனை படைக்கும்" என்றார்.
- sidvigh@gmail.com