“ஆண்டவன் கொடுத்த கை, கால்கள் இருக்கு. நான் எங்கேயாவது போய், எப்படியாவது பிழைத்துக் கொள்கிறேன்” என்று தன்மானம் இருப்பவர்கள் சொல்லக் கேட்டிருக்கலாம். ”உழைப்பை ஒளித்து வைத்துத் துருப்பிடிப்பதை விட, உழைத்துத் தேய்ந்து போவதே மேல்” என்றார் சுவாமி விவேகானந்தர்.
இந்த உலகம், எல்லா திறமையாளர்களையும் உடனே அடையாளம் காண்பதில்லை. அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கு வேலைகள், வாய்ப்புகள் கொடுப்பதில்லை. அப்படி ஒன்று கிடைக்கும் வரை அவர்கள் என்ன செய்ய? தவிர, எவ்வளவு காலத்துக்குத்தான் பெற்றோரை எதிர்பார்ப்பது? அவர்களுக்கு ஏன் சுமையாக இருக்க வேண்டும்? என் தேவைகளுக்கு, நானே சம்பாதித்துக் கொள்வதுதானே சரி! என்று நினைக்கும் பொறுப்பான பிள்ளைகள் எவ்வளவோ பேர்.
பகுதி நேர வேலைகள் என்பது பல வகைகளில் லாபகரமானது. தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் செய்ய வேண்டியது. படிப்பு மட்டுமே ஒருவரை திறமையாளராக ஆக்கிவிடாது. தேவை, முன் அனுபவம். வேலை கிடைத்தால்தானே செய்து, அனுபவம் பெற முடியும்? வேலையே கிடைக்காதவனிடம் அனுபவம் எதிர்பார்த்தால் என்ன நியாயம்? என்று கேள்வி கேட்கலாம்.
பதில் என்ன தெரியுமா? வேலைக்குப் போகாமலே, படிப்பை முடிக்கும் முன்னரே, பகுதி நேர ஊழியராக அல்லது பயில்பவராக (அப்ரெண்டிஸ் அல்லது டிரெயினி) நிறுவனங்களுக்குள் நுழைய முடியும். வேலையிடத்தையும் வேலை செய்பவர்களையும் பார்க்க, அவர்களுடன் பழக, கேட்டுப் புரிந்துகொள்ள முடியும்.
அங்கே பயில்வது அந்த நிறுவனத்தின் உற்பத்தி முறையையோ, சேவை முறையையோ மட்டுமில்லை. அவற்றைக் காட்டிலும் முக்கியமாக அங்கே ஊழியர்கள், மேலதிகாரிகள், வாடிக்கையாளர்கள், ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள் போன்ற மனிதர்களைப் பார்ப்பது, அவர்களுடன் பேசுவது, அவர்களிடமிருந்தும் தெரிந்துகொள்வது.
அனுபவம் கிடைக்கும்: அதற்கெல்லாம் ஊதியம் இருக்காது. உபகாரச் சம்பளங்கள் (ஸ்டைபண்ட்) போல சிறிய தொகைதான் கொடுப்பார்கள். சில சமயங்களில் அது போக்குவரத்து மற்றும் சிறு கைச் செலவுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதனால் என்ன? அங்கே வேலை செய்யவில்லை. செய்தவர்களைப் பார்க்கும் மற்றும் நாமே தட்டுத் தடுமாறி செய்து பார்க்கும் அனுபவம் பெறுகிறோம்.
இதையெல்லாம் நான் ஏன் செய்ய வேண்டும்? ஏன் எவர் எவரிடமோ பேச்சுக் கேட்க வேண்டும்? இந்த சிறிய தொகைக்கு ஏன் சிரமப்பட வேண்டும்? என்றெல்லாம் யோசிக்கவே கூடாது. இவையெல்லாம் கற்றுக்கொள்ள கிடைக்கும் அரிதான சந்தர்ப்பங்கள். முழு நேர, பெரிய ஊதிய வேலைகளில், தவறு செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். தவறின் தீவிரத்தைப் பொருத்து, வேலையே கூட பறிபோகலாம்.
``அனுபவம் இல்லாமல் வேலைகள் செய்தால் தவறு வரத்தானே செய்யும்?” ”வரத்தான் செய்யும். அதைத் தவிர்க்கத்தான் இந்த பகுதி நேர அல்லது பயில்பவர் வேலைகள்.” பகுதி நேர வேலைகளில் தவறு நேர்ந்தால், அந்த வேலைதான் போகும். அது நிரந்தர மற்றும் ஒரே வேலை அல்ல. அதனால் வேலை பழக, அனுபவம் பெற அவை லாபகரமானவை.
பெரும்பாலும் அனைத்து தொழில்முறைப் படிப்புகளிலும் கல்லூரி காலத்திலேயே, ’இண்டர்ன்’, ’டிரெயினி’ யாக, ’பிராஜெக்ட் ஒர்க்’ செய்ய என்று நிறுவனங்களுக்கு அனுப்புகிறார்கள். அவை விடுமுறை அல்ல. அவை ஊர் சுற்றக் கிடைத்த நேரமல்ல. முன் அனுபவம்பெற, இயன்றால் அந்நிறுவனத்தினரை நம் மீது மதிப்பு கொள்ள வைக்க கிடைக்கும் அரிய வாய்ப்புகள். அதைப் பின்னால் பார்க்கலாம். பகுதி நேர வேலை செய்ய, வருமானமும் அனுபவமும் பெற கல்லூரி காலம் வரை பொருத்திருக்க வேண்டாம்.
கொக்கோ கோலா விற்ற பப்பெட்: பெரும் வெற்றியாளர்கள் சிலர் எப்போதிலிருந்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள் என்று தெரியவந்தால் வியப்பாக இருக்கும். உலகப் பணக்காரர்களில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ள வாரன் பப்பெட், மொத்தமாகக் கிடைக்கும் முழு கிரேடு கொக்கோ கோலா பாட்டில்களை வாங்கி, அவற்றை தனித்தனி பாட்டில்களாக, கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்திருக்கிறார்.
எப்போது தெரியுமா? அவரது ஆறாவது வயதில், பள்ளிக்குப் போக ஆரம்பித்த போது!! அது மட்டுமல்ல அவர் நியூஸ்பேப்பர் போட்டு சம்பாதித்திருக்கிறார். சலூன்களில் பின்பால் மேச்சஸ் என்பதை வைத்து பணம் சம்பாதித்திருக்கிறார். இப்படி, பல வேலைகள் செய்து பணம் சேர்த்திருக்கிறார். மொத்தம் எவ்வளவு தெரியுமா? பள்ளிப் படிப்பு முடித்தபோது அவரிடம் பத்தாயிரம் டாலர் இருந்திருக்கிறது. தற்போதைய மதிப்பில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர்கள்.
பக்கோடா விற்ற திருபாய் அம்பானி: `பஃபெட் அமெரிக்கர். அங்கே, அப்படி போல’ என்று சிலர் நினைக்கலாம். அதனால், ’இந்தியர் எவரேனும்?’ என்று கேட்கலாம். அவர்களுக்கான பதில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் தந்தை, திருபாய் அம்பானியும் அப்படி செய்திருக்கிறார் என்பது.. திருபாய் அம்பானி பள்ளி மாணவனாக இருந்தபோது ஆன்மிக சுற்றுலா வருபவர்களிடம் பக்கோடா போன்ற தின்பண்டங்கள் விற்று, பணம் சம்பாதித்திருக்கிறார். பின்பு, ஏமன் நாட்டில் ஓர் நிறுவனத்தில் வேலை செய்தபோது, பகுதி நேர கூடுதல் வேலையாக, பெட்ரோல் பம்ப்பிலும் வேலை செய்திருக்கிறார்.
`அவர் வடநாட்டவர். எடுத்துக்காட்டாக எவரேனும் தமிழர்கள்?” என்று விடாமல் கேட்பவர்களுக்கு, சென்னை ’அபிராமி மால்’ உரிமையாளர் அபிராமி ராமநாதன் அவர்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மாணவராக இருந்தபோது, ஹாஸ்டலில் கடலை உருண்டைகள் போன்றவற்றை வாங்கி வைத்திருந்து, விடுதி மாணவர்களுக்குத் தேவைப்படும் நேரம், கூடுதல் விலைக்கு விற்று சம்பாதித்திருக்கிறார், சேமித்திருக்கிறார். நேர்மையாக செய்யும் எந்த வேலையும் இழுக்கில்லை. வியாபாரம் செய்ய எந்த வயதும் குறைவானதில்லை. கூடுதல் வருவாய்க்கு பகுதி நேர வேலைகள் ஒரு நிச்சய வழி.
அப்படிப்பட்ட வேலைகளில் சிலதான் ’கிஃக் எக்கானமி’ வேலைகளும். ஒரே ஒரு நிரந்தர வேலையைச் செய்வதற்குப் பதிலாக, சிறு சிறு வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கும் வேலைமுறை. எடுத்துக்காட்டு சொல்வதென்றால், உபர் (Uber) ஓட்டுநராக வாகனம் ஓட்டுவது, சோமாட்டோவில் உணவு டெலிவரி செய்வது, ஆன்லைனில் லோகோ வடிவமைப்பது அல்லது கட்டுரைகள் எழுதுவது போன்றவை.
- தொடரும்