அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரலாற்றை ஆராய்ந்தால் அதில் பெண்களுக்கென்று எந்தச் சிறப்பு இடமும் இருக்காது. மிகச் சிறிய இடத்தினைப் பெறுவதற்குக்கூட அறிவியல் களத்தில் பெண்கள் பெருமளவு போராட வேண்டியிருந்தது.
அறிவியல் ஆய்வுகளில் வெளிப்படுத்தப்படும் உண்மைகளும் கண்டுபிடிப்புகளும் எவ்வளவு பெரிதாகப் பேசப்பட்டாலும் பல சிரமங்களுக்கு இடையில் கடுமையாக உழைத்து அதனை நிகழ்த்திக்காட்டிய அறிவியலாளர்களின் பெயர்கள் பெரும்பாலும் மறக்கப் பட்டுவிடும். அவர்கள் பெண்களாக இருந்துவிட்டால், இன்னமும் வேதனையான புறக்கணிப்பே கிடைக்கும்.
புரட்டிப்போட்ட ஆராய்ச்சி: 1985களின் இறுதிப்பகுதியில் இந்தியாவில் முதன்முதலாக எய்ட்ஸ் நோய்த்தொற்று கண்டறியப் பட்டது. அதற்கு முன் இந்தியாவில் எய்ட்ஸ் பரவ வாய்ப்பே இல்லை என்றும், பாலியல் ஒழுக்கமற்றவர்களுக்கு வரக்கூடிய நோய் எய்ட்ஸ், இந்தியர்களைப் போன்று திருமண உறவுகளில் வாழும், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இந்நோய் தாக்க வாய்ப்பில்லை என்றும் நம்பப்பட்ட சூழலே நிலவியது.
இந்நிலையில் உலகைத் திரும்பிப்பார்க்க வைத்த, அதிர்ச்சியான ஒரு கண்டறிதலை ஒரு பெண் நிகழ்த்தினார். இந்தியாவில் எய்ட்ஸ் பரவிவிட்டது என்னும் அறிவிப்பே அது. அதனைச் செய்தவர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுனிதி சாலமன். ஆனால், அவரது பின்னணியில் களத்தில் கடுமையாக உழைத்த டாக்டர் நிர்மலாவைப் பலருக்கும் தெரியாது.
ஏன் நிர்மலாவின் கண்டறிதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றால், வெகு ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுவிட்டதால் விரைவாகத் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வுப் பரப்புரைகள் போன்றவை உருவாக்கப்பட்டு நிலவரம் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மாறாக இந்தியச்சூழலுக்கு எய்ட்ஸ் வராது என்கிற போலி நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இயங்கியிருந்தால், நாட்டின் சுகாதார நிலை மிக மோசமான நிலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கலாம்.
எதிர்கொண்ட சவால்கள்: மேற்கண்ட ஆய்வுக்காக நிர்மலா சந்தித்த சவால்கள் ஏராளம். முதலில் அந்தக் காலக்கட்டத்தில் ஹெச்.ஐ.வி. பற்றிய எந்தப் புரிதலும் தரவுகளும் இல்லை. சிவப்பு விளக்குப் பகுதிகள் போன்ற பாலியல் தொடர்பான பிரத்யேகமான இடங்கள் தமிழ்நாட்டில் அப்போது இல்லை. பாலியல் தொழிலாளர்ளை, தன்பாலின ஈர்ப்பாளர்களை எங்கு தேடுவது என்பதில் தொடங்கி ஏராளமான சவால்கள் அவரது ஆய்வுக்குக் காத்திருந்தன.
வி ஹோம் எனப்படும் விஜிலென்ஸ் இல்லங்களில் பாலியல் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்பதை அரசு மருத்துவமனைப் பதிவேடு மூலம் அறிந்து, அங்கு சென்று ரத்தமாதிரிகளைச் சேகரித்து வந்திருக்கிறார். அவற்றை உரிய வெப்பநிலையில் பராமரிக்கப் போதிய வசதிகள் இல்லாமல், தனது வீட்டின் குளிர்பதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்திருக்கிறார்.
அப்போது ELISA பரிசோதனைக்கூடம் சென்னையில் இல்லை. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மட்டுமே ELISA பரிசோதனை மேற்கொள்ள வசதி இருந்திருக்கிறது. அங்கு சென்று பரிசோதித்திருக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இன்று அனைத்து மருத்துவ ஆய்வகங்களில் வெகு சாதாரணமாக நிகழ்த்தப்படும் Western blotting பரிசோதனையை, இந்தியாவில் அன்றைக்கு எங்குமே மேற்கொள்ள வழியின்றி அமெரிக்காவிற்கு எடுத்துச்சென்று மறுபரிசோதனை செய்யப்பட்டே இந்தியாவில் எய்ட்ஸ் பரவியிருக்கிறது என்பது உறுதிசெய்யப்பட்டது.
நிர்மலாவிற்கு முனைவர் பட்ட ஆய்வுக்காக இந்தத் தலைப்பைத் தந்து வழிகாட்டியவர் மருத்துவர் சுனிதி சாலமன். இன்றளவும் வரலாற்றில் சுனிதி சாலமனின் பெயரே நிலைத்துள்ளது. நிர்மலாவைப் பற்றி அன்றைய ஒன்றிரண்டு பத்திரிகைச் செய்திகளைத் தவிர வேறெதுவும் இல்லை. முனைவர் பட்டம் மட்டுமன்றி பெரும்பாலான ஆய்வுகளில் ஆய்வுக்குழுத் தலைவரின் பெயர் மட்டுமே புகழடையும் நிலை இன்றளவும் உள்ளது.
நீளும் பட்டியல்: இதுபோன்ற எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னணியில் உள்ள பெண்களின் பெயர் வெளிச்சத்திற்கு வராமல் இருப்பது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலுமே நிகழ்ந்துள்ளன. DNA கண்டுபிடிப்பில் மிக முக்கியப் பங்காற்றிய ரோசலிண்ட் ஃபிராங்க்ளினின் பெயர் பாடநூல்களில் இருக்காது. பெண் என்கிற காரணத்தினால் மேரி கியூரி முதலில் நோபலுக்குப் பரிந்துரைக்கப்படவே இல்லை.
நோபல் அளிக்கப்பட்ட போதும் பிரெஞ்சு அறிவியல் அகாடமியில் அவருக்கு இருக்கை அளிக்கப்படவில்லை. இதுபோன்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அறிவியல் களத்தில் பெண்களின் நிலை என்னவாக உள்ளது என்று பார்த்தால், இன்றைக்கும்கூட அது எளிதான பாதையாக இல்லை.
முனைவர் பட்டம் பெற எடுத்துக்கொள்ளும் கால அளவு இந்தியச் சூழலில் பெண்களுக்குச் சவாலான ஒன்று. பல்வேறு கடினமான நுழைவுத்தேர்வுகள் இந்தக் காலக்கெடுவை அதிகரிக்கின்றன. திருமணம், குழந்தைப்பேறு மிக நீண்ட இடைவெளியை ஏற்படுத்திவிடுகின்றன. இந்தப் பின்னணியில் பலரும் கல்விச் சூழலில் இருந்து விலகிவிட்டதுபோல் உணர்ந்து, மீண்டும் ஆய்வுக்குத் திரும்பத் தயக்கம் காட்டுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் மருத்துவர், பொறியாளர், பட்டயக் கணக்கர், அரசு ஊழியர் போன்ற பணிகளைப் புரிந்துகொண்டு, அவற்றை மேற்கொள்ள அனுமதிப்பதைப் போல அறிவியல் ஆய்வுப்பணியை மேற்கொள்ளக் குடும்ப உறுப்பினர்களும் போதிய ஆதரவு தருவதில்லை, ஆர்வம் காட்டுவதில்லை.
இந்திய அறிவியல் சூழலில் உதவித்தொகையோ, திட்ட உதவியாளர் ஊதியங்களோ மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் கிடைக்கும் ஊதியத்திற்கு இணையாக இல்லை. முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும் சாதாரணப் பணிகளைவிட ஆய்வுப்பணியிடங்கள் குறைந்த எண்ணிக்கையிலும் ஊதிய விகிதம் உழைப்பிற்கு ஈடானதாகவும் இல்லாத சூழலே உள்ளது. இவ்வளவு சிரமங்களைக் கொண்ட ஆய்வுப்பணிகளைவிட எளிதான, பிற பணிகளை மேற்கொள்வதைப் பல பெண்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
மேலும் அறிவியல் ஆய்வுகளுக்குத் தேவைப்படும் உழைப்பு, அர்ப்பணிப்பு, நிதிவசதி, நேரம், அறிவியல் மனப்பான்மை உள்ளிட்ட அனைத்துமே ஆண்களுக்கே சவாலாக உள்ள சூழ்நிலையில் பெண்களுக்குப் பிரசவம், குடும்பச் சூழல், வாழ்நாள் முழுவதுமான குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட சிக்கல்கள் நடைமுறை வாழ்க்கையை மேலும் கடினமாக்குகின்றன.
இவ்வளவு இடர்பாடுகளையும் தாண்டித்தான் இந்திய அறிவியல் வெளிக்குப் பெண்கள் தங்களது அர்ப்பணிப்புமிக்க உழைப்பின் மூலம் சிறப்பான பங்களிப்பை வழங்கிவருகின்றனர். அவர்களுக்கான பாதை இன்னமும் எளிமைப்படுத்தப்பட்டால் உலக அளவில் இந்திய அறிவியல் ஆய்வுகளுக்குத் தனிமதிப்பும் உயர்வும் ஏற்படும் என்பது உறுதி.
- கட்டுரையாளர், அறிவியல் செயல்பாட்டாளர்; shobanaicdic@gmail.com