அறிவியல் என்றவுடன் என் நினைவில் சட்டென்று தோன்றும் பண்டைய கண்டுபிடிப்புகள் சக்கரமும், நெருப்பை உருவாக்கக் கற்றதும்தான். மனிதர்கள் நாகரிகமடைந்ததில் பெரும் திருப்பத்தை உருவாக்கியவை இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள்தான்.
அது கண்டறியப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து மின்சாரம் கண்டறியப்பட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை சக்கரம் என்பது வேலைகளை எளிதாகச் செய்யும் வகையில் மாற்றியமைத்த புரட்சிக் கருவி. சக்கரத்தின் அறிவியல் பின்புலம் குறித்து எளிய மொழிநடையில், நகைச்சுவை ததும்பும் ஓவியங்களுடன் எழுதப்பட்ட நூல் சட்டென்று நினைவில் தட்டுப்படுகிறது.
அது மீர் நஜாபத் அலி எழுதி அகமத் என்பவர் ஓவியங்கள் வரைந்த ‘உலகை மாற்றிய புதுப் புனைவுகள்’ என்கிற நூல். இந்த நூல் நேஷனல் புக் டிரஸ்ட்டின் நேரு குழந்தைகள் புத்தகாலயம் மூலம் இளையோர் நூலாக 1974இல் வெளிவந்தது. வெளியாகி 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றைக்கு வாசித்தாலும் சுவாரசியமாக இருக்கிறது. காரணம், மீர் நஜாபத் அலியின் மொழிநடையும் அகமத்தின் ஓவியங்களுமே.
இரண்டு பாகங்களாக வெளியான இந்த நூலின் முதல் பாகத்தை வைத்தண்ணா என்கிற சி.ந.வைத்தீஸ்வரனும், இரண்டாவது பாகத்தை ருத்ர.துளசிதாஸும் (இளம்பாரதி என்கிற பெயரில் படைப்பிலக்கியங்களை மொழிபெயர்ப்பவர்) மொழிபெயர்த்துள்ளனர்.
இளம்பாரதி வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தற்போது 92 வயது. 30-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களைத் தந்தவர். இவற்றில் பெரும்பாலானவை படைப்பிலக்கிய நூல்கள். 1998இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி பரிசை இவர் பெற்றிருக்கிறார்.
அரிய பார்வை: இந்த நூல் சக்கரம், நீராவி இயந்திரம், நுண்ணோக்கி, அச்சு இயந்திரம், டைனமோ, தந்தி, அணுசக்தி, மின்னணுவியல் என்று அறிவியல் துறைகளின் முக்கியப் பிரிவுகள் குறித்து இளையோருக்கு அறிமுகப்படுத்தும் சொற்சித்திரங்களைத் தருகிறது. கட்டுரைகளுக்கு இடையே நம் மனதை இலகுவாக்கும் வகையில் உள்ள ஓவியங்கள் புன்னகையை வரவழைக்கக்கூடியவை.
இன்றைக்கு மனிதர்களைப் பதிலீடு செய்துவிடும் செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகள் குறித்து நாம் பேசிக்கொண்டிருப்பதை, அந்தக் காலத்திலேயே இந்த நூல் பேசியுள்ளது. ஆளில்லா கார்கள், போர்களில் செயற்கை நுண்ணறிவு, எதிரி ஏவுகணைகளைத் தாக்கி அழித்தல், செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அப்போதே குறிப்பிடப்பட்டுள்ளது ஆச்சரியம்தான்.
போக்குவரத்து வாகனங்களின் முன்னேற்றத்தில் எக்காலத்திலும் சாதிக்கப்படாத கண்டுபிடிப்பு சக்கரம் என்று கூறும் ஆசிரியர், நாம் இன்றைக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் காற்று நிறைந்த டயரைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து கால்நடை மருத்துவர் ஜான் பாய்டு டன்லப் குறித்தும் கூறியுள்ளார். இந்த அத்தியாயத்தில் மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தியுள்ள மொழிபெயர்ப்புச் சொற்களான இருசு (Axile), ஆரக் கால்கள் (spokes), நிலக்கீல் (தார்) ஆச்சரியப்படுத்துகின்றன.
இன்றைக்கு உள்ள எந்த வசதியும் இல்லாத காலத்தில் எழுதப்பட்ட இந்த நூல்களைத் தனித்துவம் ஆக்குவது அவற்றின் உள்ளடக்கம், மொழிநடை, சொல்லப்பட்ட முறை போன்ற அம்சங்களே. அன்றைய எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள் இதுபோன்ற சிறிய நூல்களையும் மிகுந்த அக்கறை, கவனம், நேர்த்தியுடன் உருவாக்கியிருப்பதைப் பார்க்கும்போது எழுத்தை அவர்கள் மதித்த விதம் புலப்படுகிறது.
அறிவியல் எழுத்தாளர்: முதல் பாகத்தை மொழிபெயர்த்த வைத்தண்ணா, மரியா மாண்டிசோரியின் ‘குழந்தைமை ரகசியம்’, ‘உட்கவர் மனம்’ ஆகிய கல்வியியல் நூல்களை சி.ந.வைத்தீஸ்வரன் என்கிற தனது இயற்பெயரில் மொழிபெயர்த்தவர். குழந்தைகளுக்கான அறிவியல் நூல்களை வைத்தண்ணா என்கிற பெயரில் எழுதினார்.
‘செய்துபாருங்கள் விஞ்ஞானி ஆகலாம்’, ‘இயந்திரத்துடன் விளையாட்டு’, ‘காந்தத்துடன் விளையாட்டு’, ‘தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்’, ‘காற்றுடன் குட்டிப் பரிசோதனைகள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.
இந்த நூல்களை பள்ளிக் காலத்தில் நான் வாசித்திருக்கிறேன். அறிவியல் குறித்து இவ்வளவு எழுதிய அவர் யார், அவருடைய பின்னணி, படைப்புகள் குறித்து நாம் அறிந்தது சொற்பமே. காரணம், தமிழ் எழுத்துலகில் ஆவணப்படுத்துதல், ஒருவரைக் குறித்த தகவல்களைப் பதிவுசெய்தல் என்கிற பழக்கம் மிகக் குறைவாக இருந்திருக்கிறது.
- valliappan.k@hindutamil.co.in