வானில் சற்றே பெரிதாக, மிகப்பிரகாசமாக முழுநிலவு தோன்றுவதைப் ‘பெருநிலவு’ (super moon) என்று கொண்டாடுகின்றனர் அறிவியலாளர்கள். பூமி, நிலவு, சூரியன் மூன்றும் ஒரே வரிசையில் அமைவதால் உருவாகும் இந்நிகழ்வு, ஓராண்டில் 3 அல்லது 4 முறை நிகழும்.
பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, அன்றைய தினம் ‘பெரிகீ’ (perigee) எனும் புள்ளியில் பூமிக்கு அருகே 3,63,300 கி.மீ. தொலைவில் இருப்பதால் வழக்கத்தைவிட 14% பெரிதாக, 30% பிரகாசமாகத் தோற்றமளிக்கிறது. அக்டோபர் 6 அன்று பெருநிலவைக் காணத் தவறியவர்கள், நவம்பர் 5 அன்று மீண்டும் இதைக் காண முடியும்.
ஸ்டார்ஷிப்பின் வெற்றி! - உலகின் மிகப்பெரிய ராக்கெட் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார்ஷிப்’. ஆரம்பக்கட்டச் சோதனை முயற்சிகளில் தோல்வியுற்ற இது, அக்டோபர் 13 அன்று டெக்சாஸில் இருந்து 11ஆவது முறையாக விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
\திட்டமிடப்பட்டபடி ஒரு மணி நேரம் விண்ணில் பறந்த ஸ்டார்ஷிப், இந்தியப் பெருங்கடலில் பின்னர் விழுந்தது. இதற்கு முன்னர் அமெரிக்காவால் ஏவப்பட்ட ஸ்பேஸ் ஷட்டில், ஃபால்கன் ஹெவி, ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம், சாட்டர்ன் வி, ரஷ்யாவின் என்1 ஆகியவற்றைக் காட்டிலும் ஸ்டார்ஷிப் மிகப் பெரியது. 403 அடி உயரம் கொண்டது. 150 டன் வரை எடையைத் தாங்கவல்லது.
குளோனிங் நுட்பத்திற்கு வித்திட்டவர்: குளோனிங், ஸ்டெம் செல் உயிரியல், சோதனைக்குழாய் கருத்தரிப்பு போன்ற பல உயிரி மருத்துவத்துறைக் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கெர்டன். தவளையின் செல்களில் கருப்பரிமாற்றம் (nuclear transfer) நிகழும்போது, முந்தையதில் இருந்த மரபார்ந்த தகவல்கள் கடத்தப்படுகின்றனவா அல்லது இழப்பைச் சந்திக்கின்றனவா என்பதற்கு விடையளித்தது அவரது ஆய்வு. முதிர்ந்த செல்களைக் கரு ஸ்டெம் செல் (embryonic stem cell) நிலைக்கு மாற்ற முடியும் என்றது.
இந்த ஆய்வே, 2012ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை ஷின்யா யமனகா உடன் ஜானைப் பகிர்ந்துகொள்ள வைத்தது. அக்டோபர் 7அன்று ஜான் கெர்டன் காலமானார்.
மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! - ஆர்டிமிஸ் 2 திட்டம் மூலமாக, ஓரையன் விண்கலத்தில் 4 பேரை நிலவுக்குப் பத்து நாள் பயணமாக அனுப்ப இருக்கிறது நாசா. அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 முதல் ஏப்ரல் 26க்குள் ஏவுதல் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஓரையனைச் சுமந்துசெல்லும் ஸ்பேஸ் லாஞ்ச் ஏவூர்தி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையாமல் அல்லது தரையிறங்காமல், அதன் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி 5,000 நாட்டிகல் மைல் வரை அதைத் தாண்டிப் பயணித்து பின்னர் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
2022இல் நாசா மேற்கொண்ட ‘ஆர்டிமிஸ் 1’ திட்டம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்து, பின்னர் பூமிக்குத் திரும்புகையில் அதன் வெப்பக்கவசம் எரிந்துபோனது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்புகிற காரணத்தால், இந்த ஏவுதலை மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு வருகிறது நாசா. - உதய்