பெண் இன்று

போர்முனையில் ஒரு  பெண்! | வானமே எல்லை

ப்ரதிமா

அமெரிக்க ஒளிப்படப் பத்திரிகையாளர் லின்சே அடாரியோ. பெண்களையும் குழந்தைகளையும் போர்முனைக்கு அனுப்பக் கூடாது என்கிற மனிதநேயச் சிந்தனைகள் எல்லாம் மரத்துப்போய் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் போர்களில் பெண்களும் குழந்தைகளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும் இந்தக் காலத்தில் போர்முனைக் காட்சிகளைப் படமெடுப்பதுதான் லின்சேவின் பணி. ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘நேஷனல் ஜியாகிரஃபிக்’ இதழ்களுக்காகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றிவருகிறார். ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, லெபனான், தெற்கு சூடான், சோமாலியா, காங்கோ குடியரசு, ஏமன், சிரியா எனப் பல நாடுகள் தொடங்கி தற்போதைய உக்ரைன் போர்வரைக்கும் லின்சே படமெடுத்திருக்கிறார்.

தனது பணிகளுக்காகப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளான லின்சே, போர்களைப் படமெடுத்ததற்காக இரண்டு முறை கடத்தப்பட்டிருக்கிறார். 2015இல் ‘அமெரிக்கன் ஃபோட்டோ மேகசின்’, லின்சேவைக் கடந்த 25 ஆண்டுகளில் தாக்கம் செலுத்திய ஐந்து பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. போர்களை இந்த உலகம் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை லின்சேவின் படங்கள் உணர்த்தியதாக அது குறிப்பிட்டது. மெக்ஆர்தர் ஃபெல்லோஷிப், ஆப்கானிஸ்தான் போரைப் படமெடுத்ததற்காக புலிட்சர் விருது என ஏராளமான அங்கீகாரங்களை இவர் பெற்றிருக்கிறார்.

லின்சேவைப் பற்றிய ஆவணப் படத்தை (Love + War) நேஷனல் ஜியாகிரஃபிக் தயாரித்துள்ளது. இது அக்டோபர் இறுதியில் திரையரங்குகளிலும் நவம்பர் 6 முதல் டிஸ்னி பிளஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகவிருக்கிறது. “நான் ஒரு போர்முனை ஒளிப்படக் கலைஞர். நாங்கள் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று மிகச் சிலருக்கே தெரியும். நான் போர்முனையில் இருந்தாலும் என் நினைவு என் மகன்களிடம்தான் இருக்கும். சமரசமற்ற என் பணிக்காக நான் வாழ்க்கையில் பெரிதும் நேசிக்கும் விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது” என்று அந்த ஆவணப் படத்தில் சொல்லியிருக்கும் லின்சே, “போரின் கொடூரத்தை இந்த உலகுக்குச் சொல்லத்தான் வேண்டும்” என்கிறார்.

அற்புதமான பல தருணங்களை ஒளிப்படங்களால் உறையவைத்திருக்கும் இவர், தாயும் சின்னஞ்சிறு மகளும் அணைத்துக்கொள்ளும் காட்சியைக் கண்ணீரைத் துடைத்தபடியே படமெடுத்திருக்கிறார். “பெண்கள் பிரச்சினைகளிலும் அரசாங்கங்களின் கொள்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதே என் நோக்கம்” என்று சொல்லும் லின்சேயின் கண்களில் அசாத்திய துணிச்சல்!

SCROLL FOR NEXT