பெண் இன்று

பாராட்டுக்குக் காத்திருப்பேன்! | ஆண்கள் ஸ்பெஷல்

Guest Author

நாம் நினைப்பதுபோல் சமையல் வேலை என்பது சுலபமானது அல்ல. என் அம்மா ஆசிரியராகப் பணியாற்றியபோதே எனது ஆர்வத்தால் அவர்களுடன் சேர்ந்து சில வேலைகளைச் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்கள் விளையாட வந்தால் அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுவேன். எனவே, அம்மா என்னைச் சமையலறைக்குள் வரக் கூடாது எனக் தடை போட்டுவிட்டார்கள். ஆனாலும், மதியம் அவர் தூங்கும்போது சுண்டல், உப்புமா போன்றவற்றை எனக்குத் தெரிந்த வகையில் செய்துவிட்டு அவருக்குத் தெரியக் கூடாது என்பதால் பாத்திரங்களைச் சுத்தமாகக் கழுவித் துடைத்து அதனதன் இடத்தில் வைத்துவிடுவேன்.

திருமணம் ஆனபின் நானும் என் மனைவியும் பணிக்குச் செல்லவேண்டி இருந்ததால் காலை ஐந்து மணிக்கே எழுந்து பரபரப்பாகச் சமைப்போம். காபி தயாரிப்பது, காய்கறி - வெங்காயம் நறுக்குவது, இட்லி - தோசை சுடுவது என அனைத்தையும் என் பொறுப்பாக எடுத்துக்கொண்டேன். என் மனைவிக்கு அல்சர் வந்தபோது தினமும் கேரட், நெல்லிக்காய், வாழைத்தண்டு ஜுஸ்களைத் தயாரித்துத் தருவேன். அதில் அவ்வப்போது புதினா, கொத்தமல்லி இலைகளைப் போட்டு வித்தியாசமான சுவையை ஏற்படுத்துவேன். எந்தச் சட்னி செய்தாலும் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்தால் சுவை கூடும் என்பதைக் கண்டறிந்தேன்.

இப்போது நாங்கள் இருவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டோம். ஆனாலும், என் மனைவிக்கு எனது உதவி தொடர்கிறது. நான் செய்யும் ‘மாங்காய் நெல்லிக்காய் தொக்கு’ என் மனைவிக்கும் பிள்ளை களுக்கும் மிகவும் விருப்பம்.

அதன் செய்முறை: மாங்காயையும் நெல்லிக் காயையும் பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, அரைத்த விழுதைச் சேருங்கள். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, எண்ணெய் பிரிந்து வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்குங்கள். என் மனைவி வீட்டில் இல்லாதபோது இதை ரகசியமாகச் செய்து வைத்துவிடுவேன். வந்து பார்த்ததும் அகமகிழ்ந்து அவர் அளிக்கும் பாராட்டு எனக்கு மிகவும் உற்சாகம் தரும்.- நேசராஜ் செல்வம், கிருஷ்ணகிரி.

SCROLL FOR NEXT