பெண் இன்று

மனதைக் காலியாக வைத்திருப்போம் | சேர்ந்தே சிந்திப்போம் 2

சிவசங்கரி

ஒருகாலத்தில் மேம்பட்ட நிலையில் இருந்த பெண்களுக்குக் காலப்போக்கில் பல விஷயங்கள் மறுக்கப்பட்டு அவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்பட்டது கொடுமை. மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணை அசிங்கப்படுத்தினார்கள். குழந்தைப் பிறப்புக்கு ஒரு பெண் தயாராக இருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்கு அறிகுறியாக இருக்கும் விஷயம் அசிங்கப்படுத்தப்பட்டு, கொச்சைப்படுத்தப்பட்டது. ஒரு பெண் கணவனை இழந்தபோது அபசகுனம் என்று கருதப்பட்டாள். அவள் உணர்ச்சியே இல்லாத ஜடம் என்கிற அளவுக்கு ஒதுக்கப்பட்டுவந்தது நிஜம்.

பொதுவாக, ‘பொம்பளை சிரிச்சா போச்சு. புகையிலை விரிச்சா போச்சு’ என்று சொல்வார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். சிரித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? முகத்தைச் சுருக்கிக்கொண்டு சிடுசிடுவென்று இருந்தால் சிடுமூஞ்சி என்றுதானே சொல்வோம்? அப்படி இருக்க, ஏன் பெண்கள் சிரிக்கக் கூடாது? பெண்கள் அதிர நடக்கக் கூடாது, விளையாடக் கூடாது. இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் கேட்கிறபோது நீலவானத்தில் அழகாகச் சிறகு விரித்துப் பறக்கும் அற்புதமான பறவையைப் பிடித்து அதன் இறக்கைகளை முறித்து உட்காரவைப்பதைப் போலத் தோன்றுகிறது. இவையெல்லாம் மூளைச்சலவை என்று சொல்லக்கூடிய அளவுக்குத் தெரிந்தோ தெரியாமலோ கடைப்பிடிக்கப் பட்டுவந்த காலக்கட்டம் இருந்தது உண்மை. இன்னும் பல இடங்களில் இருப்பதும் உண்மை. ஆனால், இதையெல்லாம் நாம் கடந்து வருவதும் உண்மை.

திணிக்கப்படும் கருத்துகள்: மூளைச்சலவை குறித்து நாம் பேசியே ஆகவேண்டும். இது பெண்களுக்குப் பெரிய அளவிலும் ஓரளவுக்கு ஆண்களுக்கும் செய்யப்பட்டது. பெண் பிறக்கும்போதே அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எல்லாம், ‘ஐயோ நாங்க பாழாய்போன பொட்ட ஜென்மங்க, பொம்பளை ஜென்மங்க’ என்று மனப்பூர்வமாக வருத்தப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். ‘என்னால் என்ன முடியும், கேவலம் நான் பெண்தானே’ என்று சொல்வதை இயல்பாக நினைத்துக்கொள்கின்றனர். இந்த மூளைச்சலவை பல நூற்றாண்டுகளாகச் செய்யப்பட்டதில், ‘நான் ஒரு ஜடம்தான்’ என்று பெண்ணே திடமாக நம்பும் காலக்கட்டம் வந்தது பரிதாபத்திலும் பரிதாபம்.

இன்று அனைவரது வீடுகளிலும் ஃபிரிட்ஜ் இருக்கிறது. அதில் இறைச்சியையோ பாலையோ வைத்தால் சில மணிநேரங்களில் இறுகிப்போய் உறைந்துவிடும். அதைப் பயன்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்வோம்? வெளியே எடுத்துவைத்து அறைவெப்ப நிலைக்குத் திரும்பும்வரை காத்திருந்து பிறகுதானே பயன்படுத்துவோம். ஏன் அப்படிச் செய்கிறோம்? காரணம், இறுகிப்போய் கட்டியாக உறைந்திருப்பதை வைத்து எதுவும் செய்ய முடியாது. அப்படித்தான் இன்று பலரது மனங்களும் பலகாலமாக ஃபிரீசரில் வைத்ததுபோல இறுகிப்போய் பாறாங்கல்லாகிவிட்டன. இப்படி இறுகிப்போன மனங்களை சகஜநிலைக்குக் கொண்டுவருவது மிகமிக அவசியம்.

இயல்புநிலைக்குத் திரும்புவோம்: மேல்நாட்டு அறிஞர் ஒருவர் சொன்னதை இங்கே சொன்னால் பொருத்தமாக இருக்கும். ‘மிகச் சூடாக ஒரு கப் டீயோ காபியோ வேண்டும் என்றால் முதலில் கப் காலியாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்’ என்றார். ஒரு கப் நிறைய ஆறிப்போன பானத்தை வைத்துக்கொண்டு அதில் சூடாக எதை ஊற்றினாலும் வழிந்து ஓடுமே தவிர, உள்ளிருக்கும் ஆறிப்போன காபியும் டீயும் அப்படியேதான் இருக்கும். அதுபோல் நம் மனதில், சிந்தனையில் காளான்களாக, சங்கிலிகளாக, விலங்குகளாக, முள்புதர்களாகப் போட்டு நிரப்பி எதையெல்லாம் வைத்திருக்கிறோமோ அவற்றை எல்லாம் வெட்டியெறிந்து சீர்செய்ய வேண்டும். வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டுமென்றால் அங்கிருக்கும் வேண்டாத கல்லையும் களைகளையும் நீக்கிவிட்டு மண்ணைப் பதப்படுத்திவிட்டுத்தானே வேலையைத் தொடங்குவோம்?

இதைப் போன்றதுதான் மனதைப் பக்குவப்படுத்துவதும் நண்பர்களே. காலங்காலமாக இறுகிப்போன கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பெயரால் தவறான பல விஷயங்கள் நமக்குள் புகுத்தப்பட்டுவிட்டன. சங்கிலியால் கட்டிவைத்து நம் வளர்ச்சிகளுக்குத் தடைபோடும் விஷயங்களை உடைத்துக்கொண்டு மெதுவாக வெளியே வர வேண்டும். காலிக் கோப்பையாக மனதைத் தயாராக வைத்துக்கொண்டால்தான் வரப்போகும் வாரங்களில் நான் சொல்வதைக் கேட்க நம் மனம் தயாராக இருக்கும்.

நண்பர்களே, இது அறிவுரையல்ல. யாரையும் பழிக்கும் நோக்கமும் அல்ல. யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் தொடரில் இவற்றை நான் சொல்லவில்லை. ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அம்மா, மனைவி, சகோதரி, சிநேகிதி அனைவரும் தமக்கு உரிய இடத்தைச் சுயமரியாதை, தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ்ந்து, அந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும். இந்தச் சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் இரண்டு கண்கள் போலச் செயல்படுவது அவசியம். இருவரும் ஏரில் பூட்டிய மாடுகள் போல ஒருவருக்கு இன்னொருவர் உதவியாக இருந்து வாழ்க்கையைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி பிறக்கும்.

(சிந்திப்போம்)

SCROLL FOR NEXT