நெய்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட எச்.சலீம் (54), தற்போது சென்னையில் வசித்து வருகிறார். எம்.எஸ்.சி. மண்ணியல் பயின்ற இவர், தன் துறை சார்ந்த பணிகளுக்காகக் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 25 நாடுகளில் பணியாற்றியுள்ளார். இவர் 2018ஆம் செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அருகேயுள்ள காதிரப்பாக்கம் கிராமத்தில் மூன்றரை ஏக்கர் நிலம் வாங்கினார்.
கோவிட் பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு சென்னையிலேயே நிரந்தரமாக தங்கிவிட்ட இவர், இந்த இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை ஏற்படுத்தியிருக்கிறார். கொய்யா, நெல்லி, மா, தென்னை உட்பட ஏராளமான மரப் பயிர்களை சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வருகிறார். இந்தத் தோட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டுக் கோழி பண்ணையொன்றைத் தொடங்கினார். அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து…
உங்கள் பண்ணை அமைப்புப் பற்றி சொல்லுங்கள்
ஒரு மாதம் வயதுள்ள 200 சோனாலி வகைக் கோழிகளை வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். 50 ஆண், 150 பெண் பறவைகள் இருந்தன. ரூ.2 லட்சத்தில் 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட கொட்டகை அமைத்தேன். கோழிக்குஞ்சுகள் வாங்க ரூ.20 ஆயிரம், பிற பணிகளுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் என செலவானது.
பண்ணை தொடங்கிய நான்கரை மாதத்தில் இருந்து முட்டைகள் கிடைக்கத் தொடங்கின. ஆறாவது மாதத்துக்குப் பிறகு அதிக முட்டைகள் கிடைத்தன. ஒரு பகுதி முட்டையை விற்பனைக்கும், இன்னொரு பகுதியை குஞ்சுகள் பொறிக்கவும் பிரித்துக் கொண்டேன். குஞ்சுகள் பெருகியதால் ஏற்கெனவே இருந்த கொட்டகையை விரிவுபடுத்தினேன். இப்படியே பெருகிப் பெருகி, தொடக்கத்தில் இருந்தது போல நான்கு மடங்கு அளவுக்கு இப்போது கொட்டகை அமைத்திருக்கிறேன். இப்போது சுமார் 600 கோழிகள் இருக்கின்றன
சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது?
பொதுவாகவே நாட்டுக் கோழி முட்டைக்கு அதிக தேவை உள்ளதால், எளிதில் விற்பனை ஆகிவிடும். எங்கள் பண்ணையில் தினமும் சராசரியாக 100 முட்டைகள் கிடைக்கும். நான் சோழிங்க நல்லூரில் 1200 வீடுகளைக் கொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறேன். வாரம் இரண்டு முறை இங்கு முட்டைகளை எடுத்து வருவேன்.
எங்கள் குடியிருப்பு வாசிகளுக்கான வாட்ஸ் அப் குழுவில் என்னிடம் உள்ள முட்டைகள் இருப்பு பற்றி பதிவிடுவேன். அடுத்த அரை மணி நேரத்துக்குள் எல்லா முட்டைகளுக்கும் ஆர்டர் கிடைத்துவிடும். எனது குடியிருப்பு பகுதியின் தினசரி தேவையில் மிகவும் சொற்பமான அளவுக்கே என்னால் சப்ளை செய்ய முடிகிறது.
இது தவிர, ஏராளமான பொதுமக்கள் பண்ணைக்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள். ஒரு முட்டைக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை கிடைக்கிறது. எங்கள் கோழிகள் பகல் முழுவதும் பண்ணை நிலத்தில் மேய்ச்சலில் இருப்பதால் மிகவும் ஆரோக்கியமாக உள்ளன. ஆகவே, முட்டை மட்டுமன்றி, இறைச்சிக்காகவும் கோழிகளை வாங்கிச் செல்கிறார்கள்.
இறைச்சிக்காவும் விற்பனை செய்கிறீர்களா?
ஆமாம். சோனாலி ரக கோழிகளை முட்டைக் கோழியாகவும், இறைச்சிக் கோழியாகவும் வளர்க்கலாம். இவை அதிகமாக முட்டையிடும். கறி சுவையாக இருக்கும். ஆகவே, ஒன்றரை கிலோவுக்கு மேல் எடையுள்ள கோழிகளை அவ்வப்போது விற்பனை செய்து வருகிறோம். எல்லா செலவும் போக குறைந்தபட்சம் ஒரு கோழிக்கு ரூ.200 நிகர லாபமாகக் கிடைக்கிறது. முட்டையில் இருந்து கிடைக்கும் வருமானம் தனி.
இறைச்சிக்காக விற்பனை செய்தால் கோழிகளின் எண்ணிக்கைக் குறைந்து விடுமே… ?
இன்குபேட்டர் கருவி மூலம் முட்டையில் இருந்து குஞ்சுகளை பெருமளவில் உற்பத்தி செய்து வருகிறோம். அதனால் புதிய பறவைகள் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருப்பதால், பண்ணையில் மொத்தப் பறவைகளின் எண்ணிக்கையை குறையாமல் பராமரித்து வருகிறோம்.
எங்களது தேவைக்கும் அதிகமாவே குஞ்சுகள் உற்பத்தி ஆகின்றன. ஆகவே, கோழிக்குஞ்சு விற்பனையும் செய்கிறோம். மூன்று நாள் வயதுள்ள குஞ்சு ஒன்று ரூ.35 என்ற விலையில் விற்பனையாகின்றன. கோழிக்கறிக் கடைவைத்திருப்பவர்கள் வாங்கிச் சென்று, இரண்டு, மூன்று மாதகாலம் வளர்த்து, கறியாக விற்பனை செய்து விடுவார்கள்.
பொதுவாகவே, கோழி வளர்ப்பில் நோய்களை சமாளிப்பது பெரும் சவாலானது என்று சொல்கிறார்களே…
உண்மைதான். எனினும் நல்ல மேய்ச்சலில் ஈடுபடும் கோழிகளுக்கு பெரும்பாலும் நோய்த்தோற்று ஏற்படுவது இல்லை. எங்கள் பண்ணை திறந்தவெளியில், ஆரோக்கியமான சூழலியல் அமைப்பில் அமைந்திருப்பதால் இதுவரை பெருமளவில் நோய்த்தாக்குதல் ஏற்படவில்லை.
எனினும் நாங்கள் எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்போம். மேலும், சென்னை, காட்டுப்பாக்கத்தில் உள்ள கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் டாக்டர் டென்சிங் ஞானராஜ் அவ்வப்போது எங்கள் பண்ணைக்கு வருகை தருகிறார். அவரது ஆலோசனைகளைப் பெற்று ஆரோக்கியமான முறையில் பண்ணையை நடத்தி வருகிறோம்.
பிற விவசாயிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனைகள் என்ன?
நாட்டுக் கோழி வளர்ப்பில் நல்ல வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பறவைகளோடு முதலில் சிறிய அளவில் பண்ணையைத் தொடங்க வேண்டும். பண்ணைத் தொடங்கியவுடன் நிச்சயமாக இதுவரை யாரும் உங்களுக்கு சொல்லாத பல பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை விரைவிலேயே கற்றுக் கொள்வீர்கள்.
அனுபவங்களைப் பெற்ற பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக உங்கள் பண்ணையை விரிவுபடுத்த வேண்டும். விரைவாக லாபம் ஈட்டுவதைப் பற்றி எண்ணாமல், சிறந்த முறையில் ஆரோக்கியமான பண்ணையை மேலாண்மை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். இதனால் விரைவிலேயே வெற்றிகரமான பண்ணையாளராக உருவாக முடியும்.
மேலும் தகவல்களுக்கு: 9500003793
- தொடர்புக்கு: devadasan.v@hindutamil.co.in