உயிர் மூச்சு

ஜப்பானியக் காடை... லாபத்தில் ஜமாய்க்கலாம்... | பண்ணைத் தொழில்

பா. டென்சிங் ஞானராஜ்

சமீப காலமாக, தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பண்ணை தொழில்களில் ஜப்பானியக் காடை வளர்ப்பானது, அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில், குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பில் அதிக வருவாய் ஈட்ட முடிகிறது.

அதிக நோய் எதிர்ப்புத் தன்மை, ஒரு மாத கால வளர்ப்பிலேயே விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு வளர்ச்சி போன்ற காரணங்களால் காடை வளர்ப்பு, சிறந்த தொழில் வாய்ப்பாக உள்ளது. ஜப்பானியக் காடை என்பது சுமார் 200 முதல் 250 கிராம் எடை கொண்ட ஒரு சிறிய பறவையாகும். இக்காடை வளர்ப்பதற்கு மிக
அதிகமான இடம் தேவைப்படுவதில்லை.

ஒரு சதுர அடி இடத்தில் 4 காடைகள் வளர்க்கலாம். இறைச்சி வகைக் காடையானது 4 முதல் 5 வாரங்களில் சராசரியாக 230 கிராம் உடல் எடையை அடைகிறது. முட்டை வகைக் காடையானது, தினமும் ஒரு முட்டையிடும் திறன் கொண்டது. குறிப்பாக, ஒரு ஆண்டில், 250 முதல் 280 முட்டையிடும் தன்மையுடையது.

காடைகளைக் கூண்டுகளில் வளர்க்கலாம். முதன்முறையாக காடை தொழிலை தொடங்குபவர்கள், காடைக் குஞ்சுகளை விற்பனை செய்பவர்களிடமிருந்து ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை வாங்கி வளர்க்கலாம். ஒரு நாள் வயதுடைய குஞ்சுகள் சுமார் 7 முதல் 9 கிராம் எடையுடையதாக இருக்கும். அவை மிகச்சிறிய அளவில் இருப்பதால், அவற்றிற்கு முதல் 14 நாட்கள் போதிய அளவு வெப்பம் தொடர்ச்சியாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

காடை வளர்ப்புக்கு மிகவும் இன்றியமையாத தீவனமும் தண்ணீரும் நோய்த்தொற்று இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். இதன் மூலம் காடைகளுக்கு வரும் பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும். காடைகளில் வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க, முறையான சமச்சீர் தீவனத்தை அளிக்க வேண்டும். காடைகள் இரண்டாவது வாரத்தில் சுமார் 90 கிராம் உடல் எடையையும், மூன்றாவது வாரத்தல் சுமார் 160 கிராம் எடையையும், நான்கு மற்றும் ஐந்தாவது வாரங்களில் 230 கிராம், 250 கிராம் எடையுடையதாகவும் இருக்கும்.

நான்கு அல்லது ஐந்தாவது வாரத்தில் காடைகளை விற்பனை செய்ய வேண்டும். காடைகளை ஒரு மாதத்தில் விற்பனை செய்தால் அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாக இருக்கும். காடைகளில் அதிக நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதால், எந்தவித தடுப்பூசியும் அளிக்கத் தேவையில்லை.

தற்போது, இறைச்சிக்காக விற்கப்படும் ஒரு காடைக்குஞ்சு ரூ.9 வரையில் விற்கப்படுகிறது. காடை தீவனமானது ஒரு கிலோ ரூ.40 வரை கிடைக்கிறது. ஒரு காடை அதன் விற்பனை வயதை அடையும் வரை சுமார் 500 கிராம் தீவனம் உட்கொள்ளும்.

இதனால் ஒரு காடை உற்பத்திச் செய்ய சுமார் ரூ.28 செலவாகிறது. ஓர் இறைச்சிக் காடை, சந்தையில் ரூ.50 வரை விற்பனை ஆகிறது. எனவே, காடை வளர்ப்பில் அதிக லாபம் பெறலாம்.காடை வளர்ப்பை, 100 காடைகளுடன் தொடங்கினால் மாதம் சுமார் ரூ.5000 வரை வருமானம் கிடைக்கக்கூடும்.

இதனை விரிவாக்கம் செய்தால், லாபத்தை 2 முதல் 3 மடங்கு அதிகரிக்க முடியும். காடை இறைச்சி சுவைமிக்க உணவாக விளங்குகிறது. கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஒப்பிடும்போது, காடையில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே, எல்லா வயது மக்களுக்கும் ஏற்ற உணவாக இவை விளங்குகின்றன.

திருப்பூரைச் சேர்ந்த ஒரு காடை உற்பத்தியாளர், ஞாயிற்றுக்கிழமைதோறும் சென்னை அண்ணா நகர் பகுதிக்கும், புதுச்சேரிக்கும் ஒரு லட்சம் காடை பறவைகளை விற்பனைக்காக அனுப்பி வருகிறார். “சென்னை மாநகரின் ஒருநாள் தேவை என்பது பல லட்சம் காடைகள் ஆகும்.

எனினும், என்னால் சென்னையின் அண்ணா நகர் பகுதிக்கு மட்டும்தான், வாரத்தில் ஒரேயொரு நாள் காடைகளை அனுப்ப முடிகிறது” என்கிறார். இவர் கூறுவதில் இருந்து காடைக்கான சந்தை நிலவரம் பற்றியும், காடை வளர்ப்புத் தொழிலில் இருக்கும் ஏராளமான வாய்ப்புகள் பற்றியும் புரிந்துகொள்ள முடியும்.

(கட்டுரையாளர், சென்னை காட்டுப்பாக்கம் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர்; தொடர்புக்கு: 9940590238)

SCROLL FOR NEXT