மரங்கள் மனிதர்களுக்கும், விலங் குகளுக்கும், பறவைகளுக்கும் உணவளிக் கின்றன. கார்பன் வாயுவை உறிஞ்சி, நாம் சுவாசிப்பதற்கான வாயுவை மரங்கள் வெளியிடுகின்றன. அப்படி நன்மை செய்யும் மரங்களைத்தான் நாம் அழித்து வருகிறோம். நாம் வாகனங்களில் வேகமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக, சாலையோரங்களில் உள்ள மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்துக்கொண்டே இருக்கிறோம். மரங்களை வெட்டி வீழ்த்தும் இந்தத் தவறை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குதான் நாம் செய்துகொண்டிருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.
வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையில் உள்ள கரியை உறிஞ்சுவதற்காவது நாம் மரங்களை விட்டுவைக்க வேண்டும். மரங்களை அழித்ததால் பருவ நிலைகள் மாறிவிட்டன. தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் வளம் குறைந்த மாநிலம். ஆகவே, மரங்களை அழிப்பதால் தமிழ்நாட்டுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படும்.
அதேபோல், இமயமலையில் பனி உருகுவது அதிகமாகிக் கொண்டே வருகிறது. பனி உருகுவது அதிகமானால், கடல்மட்டம் உயரும். இதனால் கடலோரம் இருக்கும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி போன்ற ஊர்கள் பேரழிவைச் சந்திக்கும். இந்தப் பேரழிவைத் தடுக்க வேண்டுமானால், மரங்களை வெட்டுவதை, காடுகளை அழிப்பதை நிறுத்த வேண்டும்; அதிக அளவில் மரங்களை வளர்க்கவேண்டும்.