வணிக வீதி

எத்தனால் கலந்த பெட்ரோல் விவசாயத்துக்கு சாதகமா?

முனைவர் செ.சரத் 

எத்தனால் கலந்த பெட்ரோல் தற்போது வாகன ஓட்டிகளிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம் வாகன ஓட்டிகள் பலரும் E-20 எனப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை நிரப்புவதால் வாகனங்களில் பிரச்சினை ஏற்படுவதாகவும், மைலேஜ் குறைவ தாகவும் புகார் கூறி வருகின்றனர்.

அதிலும் 2023-ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் முழுதாக 20% எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கக்கூடிய திறன் பெற்றவை அல்ல. அதற்கு பொருத்தமான ஒன்றாக தயாரிக்கப்படவும் இல்லை. இதற்கிடையில் வாகனங்களுக்கு 20% எத்தனால் கலந்த பெட்ரோலை மட்டுமே விநியோகிக்கும் அரசின் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எத்தனால் கலந்த பெட்ரோல் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

1970-களில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அதை இறக்குமதி செய்ய முடியாமல் பல நாடுகளும் சிரமத்துக்கு உள்ளாயின. சிரமத்தை சீர்படுத்தும் பொருட்டு மாற்றுவழியைக் கண்டறிய சில நாடுகள் யோசித்துக் கொண்டிருந்தபோது, பிரேசில் ‘ப்ரோல்கூல்' என்னும் திட்டத்தின் கீழ் 1975-ம் ஆண்டு கரும்பிலிருந்து கிடைக்கும் துணைப்பொருளான ‘மொலாசஸ்' வழியே பெறப்படும் எத்தனாலைக் கண்டறிந்தது.

மேலும் பிரேசில் இயல்பாகவே கரும்பு உற்பத்திக்கு பெயர்போன நாடாகும். அதனால் எத்தனால் அங்கு தங்குதடையின்றி கிடைத்ததோடு அங்குள்ள சர்க்கரை ஆலைகளுக்கும் இதன் மூலம் அரசின் மானியம் மற்றும் வரிச்சலுகை கிடைத்தது.

பிரேசிலில் கரும்பு: ஆரம்பத்தில் 10 முதல் 20% மட்டுமே பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டது. பின்னர் 1980-களில் 100% எத்தனால் மூலம் இயங்கும் கார்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. இதற்கிடையில் 1990-களில் கரும்பு சாகுபடி குறைந்த காரணத்தால் எத்தனால் உற்பத்தியிலும் மந்தநிலை ஏற்பட்டது.

அதற்கு ஏற்றவாறு கச்சா எண்ணெய் விலை அப்போது குறைந்த காரணத்தால் பெட்ரோல் விலையும் குறைந்தது. அதனால் மக்கள் பலரும் பெட்ரோல் மூலம் இயங்கும் கார்களை தேர்வு செய்ய ஆரம்பித்தனர். இதனால் எத்தனால் மூலம் மட்டுமே இயங்கும் கார்களின் விற்பனை குறைய ஆரம்பித்தது. இதை கவனித்த கார் உற்பத்தியாளர்கள் 2003-ம் ஆண்டு முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் இயங்கும் கார்கள் முதல் 100% எத்தனால் மூலம் இயங்கும் கார்கள் வரை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

இதன் பொருட்டு மக்களும் அப்போதைக்கு எந்த வகையான எரிபொருளின் விலை குறைவாக இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு வாகனங்களை தேர்வு செய்து கொண்டனர். அதனால் பிரேசில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பிற நாட்டை நம்பியிருக்க வேண்டிய நிலை மாறியதுடன், கார்பன் வாயு உமிழ்வு குறைந்து கரும்பு சாகுபடியாளர்களின் வருமானமும் உயர்ந்தது.

இதுபோல சோயா எண்ணெய் மற்றும் இன்ன பிற பொருள்களில் இருந்து பிரிக்கப்படும் பயோடீசலை 12% அளவுக்கு டீசலுடன் கலந்து விற்பனை செய்கின்றனர். இப்படித்தான் படிப்படியாக எத்தனால் கலந்த பெட்ரோல் பல நாடுகளிலும் நுழைய ஆரம்பித்தது.

அமெரிக்காவில் மக்காச்சோளம்: பிரேசிலைப் போல் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் மக்காச்சோளத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் பத்து மற்றும் பதினைந்து என இரண்டு வகையான சதவீதங்களில் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் மட்டும் சாகுபடி செய்யப்படும் சோளத்தில் சரிபாதி எத்தனால் உற்பத்திக்குத் தான் செல்கிறது.

2001-ல் இந்தியாவில்.. இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2001-ம் ஆண்டிலேயே எத்தனாலில் பெட்ரோல் கலக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சோதனை அடிப்படையில் 5% எத்தனால் கலந்த பெட்ரோலை குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்தனர். பின்னர் 2003-ம் ஆண்டு முதல் எத்தனால் கலந்த பெட்ரோல் 9 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் விற்பனைக்கு வந்தது.

படிப்படியாக பிற மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு 2018-ம் ஆண்டு தேசிய உயிரி எரிபொருள் கொள்கை மற்றும் 2022-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி 2030-ம் ஆண்டுக்குள் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு ஏதுவாக 2023-ம் ஆண்டே குறிப்பிட்ட மாநிலங்களில் சோதனைக் கண்ணோட்டம் நடந்தது.

மேலும் எத்தனால் கலப்பு 2022-23-ம் ஆண்டில் 12.06% ஆகவும், 2023-24-ம் ஆண்டில் தோராயமாக 14.6% ஆகவும் அதிகரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் கிடைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த பத்தாண்டுகளில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் விளைவாக, கடந்த ஆண்டு நிலவரப்படி சுமார் ரூ.1,08,655 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிலும் தமிழ்நாடு 2023-ம் ஆண்டே தமிழ்நாடு எத்தனால் கலவை கொள்கையை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கைப்படி கரும்பு, மக்காச்சோளம் மற்றும் அரிசி போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரித்துக் கொள்ளலாம். அத்தோடு அது தொடர்பாக ஆலைகளை நிறுவுவதற்கு தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஊக்கத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போதைக்கு தமிழ்நாட்டிலும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது.

வேளாண்மையில் ஏற்படும் தாக்கம்: பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.35,000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் எத்தனால் உற்பத்தியில் முக்கியப்பங்கு வகிக்கும் சோளம், கரும்பு மற்றும் நெல் போன்ற பயிர்களுக்கு போதிய தேவை மற்றும் விலை இருப்பதால் அதன் சாகுபடி பரப்பளவு மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சோயாபீன், பருத்தி மற்றும் தானிய பயிர் வகைகளின் சாகுபடி குறையும் அபாயம் எழுந்துள்ளது.

2025-ம் ஆண்டின் காரிப் பட்டத்தில் மட்டும் சோளத்தின் சாகுபடி பரப்பளவு 9.4 மில்லியன் ஹெக்டர் ஆகும். இது கடந்த ஐந்து வருட சராசரியைக் காட்டிலும் 19% அதிகம். அதேபோல் கரும்பு சாகுபடி 9% நெல் சாகுபடி 7% உயர்ந்துள்ளது. இதனால் 2020-ல் குவிண்டால் ரூ.1,400 ஆக இருந்த சோளத்தின் விலை தற்போது 50% அதிகரித்து ரூ.2,200-ஐ கடந்துள்ளது.

விவசாயிகளும் சோயாவில் இருந்து சோளத்துக்கு மாறியதால் ஏக்கருக்கு ரூ.10,000 வரை கூடுதல் லாபம் பெறுவதாக கூறுகின்றனர். அதேபோல் எத்தனால் தேவைக்கு கரும்பு பயன்படுவதால் ஆலைகளில் நிலவிவரும் நிலுவைத்தொகை பிரச்சினையும் ஓரளவுக்கு குறைந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய்க்கு மாற்று, அந்நியச்செலாவணி சேமிப்பு, டன் கணக்கில் கரியமில வாயு குறைப்பு என பல்வேறு நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக எத்தனால் இருக்கிறது.

இவை ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் நெல், கரும்பு மற்றும் சோளத்தின் சாகுபடி மட்டும் அதிகரிப்ப தோடு அவற்றுக்கான பாசன நீர் தேவை அதிகரித்து நிலத்தடி நீர் குறையும். அத்துடன் பிற பயிர்களின் சாகுபடி குறைவதுடன் குறிப்பாக குறைந்து வரும் எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி மேலும் பெருமளவில் பாதிக்கப்படும். ஒரு கட்டத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டால் உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

இதற்கிடையில் 2 ஆண்டுகளுக்கு இந்திய உணவுக் கழகம் வைத்திருக்கும் உபரியான அரிசியில் இருந்து 52 லட்சம் மெட்ரிக்டன்னை எத்தனால் தயாரிப்புக்காக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு 40 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையையும் எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 14 மில்லியன் டன் சோளமும் எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டுக்குள் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் தேவைக்காக சுமார் 7.7 மில்லியன் ஹெக்டரில் பயிர் சாகுபடி செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதாவது இது பிஹார் மாநிலத்தின் மொத்த பயிர் சாகுபடி பரப்பளவுக்கு சமம் ஆகும். அதுவே 2029-30-ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் ஹெக்டேரைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் ஒரு பக்கம் நன்மையும் இருக்கிறது மற்றொரு பக்கம் அபாயமும் உள்ளது. எனவே மத்திய அரசு பிரேசில் நாட்டைப் போல் எத்தனால் கலந்த பெட்ரோலை வெவ்வேறு சதவீத அளவில் விநியோகம் செய்து, வாகன ஓட்டிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும். முக்கியமாக நெல், சோளம் மற்றும் கரும்பு போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தியையும் கூர்ந்து கவனித்து அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT