வணிக வீதி

உழைத்து வாழ வேண்டும் | சம்பளம் பத்தலையா? - 2

செய்திப்பிரிவு

பணம் என்பது செல்வம். ஆனால் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல பணம் மட்டுமே செல்வம் இல்லை. அது, செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வடிவம் மட்டும்தான். அதை ஈட்டுவதற்கு வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.  வளம் என்றால், மனித வளம், கனிம வளம், நீர் வளம்,நில வளம் என்பது இன்னும் சில. இப்படிப்பட்ட வளங்களை வைத்துப் பணம் உருவாக்க முடியும்.

மனித வளத்தை இரு பிரிவுகளாகப் பார்க்கலாம். ஒன்று உடல் உழைப்பு மற்றொன்று சிந்தனைத் திறன். உடல் உழைப்பை வைத்து பணம் சம்பாதிப்பது மிக எளிமையான, எவரும் செய்யக்கூடிய வழி. ’மூட்டைத் தூக்கியாவது பிழைத்துக் கொள்வேன்’ என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம்.

சில தசமங்களுக்கு முன்பு கை ரிக்‌ஷா இருந்தது. வீடுகளில், ஹோட்டல்களில் சிலர் ஆட்டுக்கல்லில் மாவரைப்பார்கள். நாற்று நடுவது, மரம் ஏறுவது, அறுவடை செய்வதெல்லாம் உடலுழைப்புதான். இன்னமும் பலர் கட்டுமான நிறுவனங்களில் அதை செய்து, கூலி வாங்கிக்கொள்கிறார்கள்.

படிப்பு, பெரிய அனுபவம், முதலீடு போன்றவை இல்லாதவர்களுக்கு இதுதான் சம்பாதிக்கும் வழி. அல்லது அவை இருந்தும், அவற்றுக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்களுக்கு உடல் உழைப்புதான் ஆரம்ப வழி. கை ரிக்‌ஷாவுக்கு பதில் சைக்கிள் ரிக்‌ஷா. ஆட்டுக் கல்லுக்குப் பதில், வெட் கிரைண்டர் போல, உழைப்புடன் கொஞ்சம் திறன் சேர்ந்தால், அது அடுத்த நிலை. அப்படி செய்யும் ஓரளவு உடல் உழைப்பிற்கே அதிக வருமானம் கிடைக்கும்.

மாவரைத்துக் கொடுப்பதா! இதெல்லாம் ஒரு வேலையா என்று சிலர் வியப்படையலாம். செய்யும் வேலையில் ஏன் வேறுபாடு பார்க்க வேண்டும்? அமெரிக்காவுக்கு படிக்கப்போன ஒரு சென்னைப் பையன், அங்கே எம்எஸ் படித்து முடித்து, அங்கேயே ஒரு வேலைக்குச் சேர்ந்தபின், சென்னை வந்து, திருமணம் செய்துகொண்டான். பிறகு, மனைவியை அமெரிக்கா அழைத்துப் போனான்.  

சில மாதங்கள் கழித்து அவனுடைய பெற்றோர் அவனைப் பார்க்க அமெரிக்கா போனார்கள். போய்விட்டு வந்து அவர்கள் வியந்து சொன்னது, “எப்படிச் சொல்றதுன்னு தெரியல. அவன் வேலைக்குப் போவது தவிர, அங்க உள்ள சில ஹோட்டல்களுக்கு இட்லி, தோ சை மாவு அரைத்துக் கொடுக்கிறான்.

சில்லறை வணிகமாக அல்ல. பெரிய பெரிய ஓட்டல்களுக்கு. மொத்தமாக, பெரிய பெரிய பாத்திரங்களில் எடுத்துப்போய் கொடுக்கிறான்” எந்த வேலை செய்தால் என்ன? அரிசி மற்றும் உளுந்து ஊறவைத்து, வீட்டிலேயே கிரைண்டரில் அரைத்து, கேட்கும் உணவு நிறுவனங்களுக்கு நேரில் போய் கொடுத்து விட்டு வருகிறார்கள்.

கணவனும் மனைவியுமாக. எல்லாம் அவர்களது உபரி நேரத்தில். நேரம் இருக்கிறது. வாய்ப்புத் தெரிகிறது. செய்தால் நல்ல வருமானம். ஏன் விட வேண்டும்? வேலையில் என்ன உயர்வு தாழ்ச்சி? பலருக்கும் தெரிந்ததுதான். பல ஆண்டுகளாக நடப்பதுதான். படிக்க, வேலை செய்ய, வெளிநாடுகள் போகும் நம் பிள்ளைகள் பலரும், உணவு விடுதிகளிலும், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும், இன்னும் வேறு பல நிறுவனங்களிலும் பகுதிநேர வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். 

அவர்கள் கொடுப்பது, அவர்கள் உழைப்பையும் நேரத்தையும்.  வருமானப் பற்றாக்குறை உள்ளவர்கள் மட்டுமல்ல. போதுமான அளவு உள்ளவர்கள் கூட, கூடுதலாகச் சம்பாதித்து, அது சிறிய அளவோ பெரிய அளவோ, அந்தப் பணத்தை முதலீடு செய்யலாம். சின்னச் சின்ன முதலீடுகள். அவை மட்டும் வளராதா என்ன? வளரும், பெருகும். 

அவற்றில் கிடைக்கும் பணத்தை செலவு செய்யாமல் தனியாகச் சேர்த்து சீட்டுக் கட்டலாம், ரெக்கரிங் டெப்பாசிட் போடலாம், பரஸ்பரநிதி, தங்கம், வெள்ளி போன்ற எக்ஸ்சேஞ் டிரேடட் பண்டு (ETF) களில் எஸ்.ஐ.பி. செய்யலாம். நேர்மையான உழைப்பு பெருமைக்குரியது. தன்னம்பிக்கை கொடுக்கும். மனதோடு உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, நேரமும் வாய்ப்பும் கிடைக்கிற போதெல்லாம் தனக்கும் பிறருக்கும் பயனுள்ள வகையில் வேலைகள் செய்யலாம்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல. இப்போது பல இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களிலும், உணவையும் பிற பொருட்களையும் ‘ஆன் லைன்’ ல் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். சுலபமாக, விரைவாக வீட்டுக்கு அவை வருகின்றன. சரி. அவற்றைக் கொண்டு வருவது யார்? முழு நேர ஊழியர்கள் மட்டுமல்ல. பலர் பகுதிநேர ஊழியர்கள்தான். கல்லூரியில் படிப்பவர்கள், சிறிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். கிக் வொர்க்கர்ஸ் (GIG Workers) என்று அழைக்கப்படும் இவர்கள் யார்? செய்வதென்ன? சம்பாதிப்பதென்ன? இவர்களால் யாருக்கு லாபம்? இரண்டு அத்தியாயங்கள் தள்ளி அதுகுறித்து பார்க்கலாம்.

- தொடரும்

SCROLL FOR NEXT