நீண்ட காலமாகப் பெண்களை வீட்டுக்குள் சிறைபிடித்திருந்த ஆட்டுக்கல்லையும் அம்மிக்கல்லையும் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் மூலமாக மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். பலகாலமாக வழிவழியாகச் சொல்லப்பட்டுத் தற்போது, ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் அறிவியல் உண்மையற்ற மூடநம்பிக்கைகள், அண்மைக்காலமாகத் திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் திணிக்கப்படுவது வேதனையானது. விறகடுப்பின் மகத்துவம், வீட்டிலேயே பிரசவம் என்று தொடங்கிய ‘அந்தக் காலத்துல...’ பட்டியலில், கையால் மாவரைத்துச் சுடும் இட்லியின் சுவையும் தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறது.
சிறு வயதில் அனுபவித்த சுவையை நினைவில் வைத்திருந்து, அதற்காக ஏங்குவதிலேயே சராசரி இந்திய ஆண்களில் பலர் பாதி வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். ‘இட்லி கடை’ படத்திலும் அதே கதைதான். வெளிநாட்டில் இருக்கும் ஒரு பன்னாட்டு உணவகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன் தனுஷுக்கு, அங்கே ‘பர்கரை’ப் பார்க்கும் போது தன்னுடைய அப்பா கையால் மாவரைத்துச் சுடும் இட்லியின் சுவை நினைவுக்கு வருகிறது.
பெண்கள் தியாகிகள்: ஆட்டுக்கல்லில் ஆட்டப்படும் இட்லி மாவும் அம்மியில் அரைக்கப்படும் சட்னியும்தான் சுவையானவை என்று சப்புக்கொட்டும் ஆண் களுக்கு, காலங்காலமாக வீட்டின் பின்புறத்தில் வேலைசெய்த பெண்களின் வலிகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், திறமைகள் என அவ்வளவையும் இந்த இட்லிகள் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கின்றன என்பது தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்தாலும், அவர்களின் ‘கலைடாஸ்கோப்’ பார்வையில் அவையெல்லாம் பெண்களின் கடமைதானே என்பதாக நியாயப்படுத்தப்படும்.
‘இட்லி கடை’ படத்தில் இரண்டு வகையான பெண்கள் வருகிறார்கள். இருவருமே தனுஷைக் காதலிக்கிறார்கள். ஒருவர், ‘அன்பு, தியாகம்’ ஆகியவற்றோடு சாணியள்ளுவது, தனுஷின் பெற்றோரைப் பார்த்துக்கொள்வது, அம்மியில் சட்னி அரைப்பது என்றிருக்கிறார். இன்னொருவரோ படித்த, தொழிலதிபராகத் தடம்பதித் திருக்கும் பெண். சராசரி இந்திய ஆணான ஹீரோ, யாரைத் தேர்ந்தெடுப்பார் என்கிற கேள்விக்கே வாய்ப்புத் தராமல், தன் பெற்றோரைப் பார்த்துக்கொண்டு, தனக்கு இட்லி சுடவும் மாவாட்டவும் உதவும் பெண்ணைத்தான் அவருக்குப் பிடித்திருக்கிறது. படித்து, தன்னையும் தன் குடும்பத்தையும் உயர்த்தும் பெண் அவருக்குத் தேவையில்லை. இதை, ‘கையால் அரைத்த மாவின் சுவை’யும் ஆதரிக்கிறது.
பழமைக்குள் தள்ளும் தந்திரம்: படித்து, சொந்தக் காலில் நிற்கிற நவீனப்பெண் தனக்குத் தோதுப்பட மாட்டார் என்று ஏன் ஒரு ஆண் நினைக்கிறான்? தன்னைவிடச் சகலவிதத்திலும் உயர்ந்த பெண், ஏன் அவனுக்குப் பயத்தை ஏற்படுத்துகிறாள்? இந்தக் கேள்விகள் எல்லாம் விவாதமாக்கப்பட்டுவரும் இந்நாளில், அவ்வளவையும் சடாரென உடைத்து, மனதளவில் கொஞ்சமாவது மாறியிருந்த ஆண்களை மீண்டும் பழமைக்குள் இழுத்துச்செல்லப் பார்க்கிறார் இயக்குநர்.
மக்களைக் கவர்ந்த கதாநாயகர்களின் திரைப்படங்களில் ஏன் ஆண்களின் உலகம் மட்டுமே முதன்மையாக இருக்கிறது? பெண் கதாபாத்திரங்கள் ஏன் இப்படி கிளிஷேவாக, எதிர்மறையாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன? அப்பாவின் காலடியைத் தொடரும் அம்மா, தனுஷின் காலடியைத் தொடரும் நித்யா என ஏன் பெண்களுக்கு என்று எந்தவொரு தனித்துவத்தையும் பரிமாணத்தையும் யோசிக்க மறுக்கிறார்கள்?
கையால் அரைத்த மாவில் செய்த இட்லி என்பது காலச்சக்கரம் சுழல்வதை நிறுத்த நினைக்கும் ஒரு தந்திரம். ‘பெண்கள் தன்னைப் பார்த்துக்கொள்ள மட்டுமே’ என்று கற்பனையில் திளைக்கும் ஆண்களுக்கு வலுசேர்க்கும் உளவியல் உத்தி. இன்னும் அந்த பழமையும் சௌகரியமும் நீண்ட காலத்துக்குக் கிடைக்காதா என்கிற ஏக்கத்தின் வெளிப்பாடு. திரைப்படத்தில் தனுஷ் தன்னுடைய அப்பா தன் முன்னால் தோன்றுவதைப் போன்ற மனக்குழப்பத்துக்கு அடிக்கடி ஆளாகிறார். அதேபோலத்தான் சிலர் தற்காலத்துக்கு ஒத்துப்போகாத அவர்களது முன்னோர்களின் காலக்கட்டத்தைக் கற்பனையாக நிகழ்த்திப் பார்க்கிறார்கள். ‘இட்லி கடை’ அதற்குத் துணைபோகிறது.
நீங்களும் எழுதுங்கள்: அன்பு வாசகர்களே, வீட்டு வேலைகளில் உங்கள் பங்களிப்பு என்ன என்பதை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். ஆண்களுக்கான சமையல் குறிப்புகளையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளலாம். அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை-600002.மின்னஞ்சல்: penindru@hindutamil.co.in