பெண் இன்று

அகிலன் என்ன சொன்னார்? | வாசிப்பை நேசிப்போம்

Guest Author

என் அப்பா ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் தினமனி, மஞ்சரி, சோவியத் ரஷ்யா போன்ற இதழ்களை வாசிப்பார். என் வாசிப்புப் பழக்கம் அப்பாவிடம் இருந்துதான் தொடங்கியது. முதலில் பெரிய எழுத்தாக உள்ள தலைப்புச் செய்திகளை மட்டும் வாசித்தேன். பிறகு ‘அம்புலிமாமா’ உள்ளிட்ட சிறார் இதழ்களை வாசித்தேன். பள்ளி நாட்களில் இறைவணக்கத்தின்போது நாளிதழ் செய்திகளைத் தேர்ந்தெடுத்து வாசிக்க என் தமிழாசிரியர் உதவினார்.

வார இதழ்களில் வந்த சிறுகதை, தொடர்கதைகளை வாசித்தபோது எழுத்தாளர்களின் நடையை அறிந்துகொண்டேன். குறிப்பாக,சுஜாதாவின் நாவல்கள், கட்டுரைகள். அவருடைய அறிவியல் புனைகதைகள் புதுமையாக இருந்தன.

ஹென்றி ஷாரியரின் ‘பட்டாம்பூச்சி’ நாவல் (தமிழில்: ரா.கி.ரங்கராஜன்) சராசரி மனிதனின் நிராசைகளைக் கூறுகிறது. கல்கியின் புதினங்களைக் கையில் எடுத்தால் விடிய விடியப் படிப்பேன். நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலில் இடம்பெற்ற கார்த்தியாயினியையும் அவரது அவலம் நிறைந்த வாழ்க்கையையும் இன்றுவரை மறக்க முடியவில்லை.அகிலனின் ‘சித்திரப்பாவை’ நாவலில் இடம்பெற்ற, ‘உலகம் ஏற்கெனவே அழகாகப் படைக்கப்பட்டுள்ளது. முடிந்தால் அதை மேலும் அழகுபடுத்து; முடியாவிட்டால் அசிங்கப்படுத்தாமலாவது இரு’ என்கிற வரிகள் இன்றைக்கும் நமக்கெல்லாம் நல்லதொரு பாடம். மருத்துவம் படித்து மக்கள் சேவகனாக உயர்ந்த சேகுவேராவின் ‘மோட்டார்சைக்கிள் டைரி’ புத்தகம், பொதுவுடைமைக் கருத்துகளை அறிய உதவியது.

இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ நாவல் கொடுத்த அதிர்வு அடங்கப் பல நாள்கள் ஆயின. இன்றும் வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’, சு.வெங்கடேசனின் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’, அ.வெண்ணிலாவின் ‘நீரதிகாரம்’ போன்ற நூல்கள் எனக்குப் பெரும் சிந்தனைத் தெளிவை ஏற்படுத்தின. நான் அரசுப் பணியாளராகப் பொறுப்பேற்றபோது, பல துறை சார்ந்தும் பேச வாசிப்புதான் உதவியது. - சியாமளா ராஜேந்திரன், மாத்தூர், புதுக்கோட்டை.

SCROLL FOR NEXT