பெண் இன்று

எல்லாமே செயற்கைதானா? | பெண் கோணம்

மா

அன்று காலை திறன்பேசியைத் திறந்தவுடன் ஒரு வாட்ஸ்அப் குழுவில் என் பெயர் இணைக்கப்பட்டு இருந்தது. நந்தகோபால் மகன் திருமணம் என்று குழுவுக்குப் பெயரிடப்பட்டு, அதில் ஒரு திருமணப் பத்திரிகை பகிர்ந்துகொள்ளப்பட்டு இருந்தது. கீழே பலரும் வாழ்த்துகளை விதவிதமான உணர்ச்சிப் பொம்மைகள் போட்டுத் தெரிவித்திருந்தனர். நந்தகோபால் யார் என்பது பிடிபடவில்லை. பத்திரிகையைப் பெரிதாக்கிப் பார்த்தேன். இறந்துபோன என்னுடைய பெரியப்பாவின் பெயரைப் பார்த்ததும் புரிந்தது, அது பெரியப்பா மகன் கோபாலுடைய மகனின் திருமணம் என்று. நந்தகோபாலை கோபால் என்றே எனக்குத் தெரியும்.

திருமணத்துக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன. அந்தக் குழுவில் புதிதுபுதிதாகப் பலர் சேர்க்கப்பட்டனர், வாழ்த்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. நானும் என் வாழ்த்துகளைப் பகிர்ந்தேன். திருமணத்துக்குப் போவதா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது. போனில் அழைப்பு வந்தால் போகலாம் என்று நினைத்தேன். பத்து நாட்களுக்குப் பிறகு திருமண போட்டோக்கள் சில பகிர்ந்துகொள்ளப்பட்டன. அடுத்த இரண்டு நாட்களில் குழு கலைக்கப்பட்டுவிட்டது.

திருமண அழைப்பு மட்டுமல்ல; வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்றவற்றில் பிறந்தநாள் வாழ்த்துகள், பிற தருணங்களுக்கான வாழ்த்துகள் எல்லாமே இப்படித்தான் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. துயர நிகழ்வுகளின்போதும் இதேதான். இறந்தவர் எவ்வளவு உன்னதமானவர், மனிதகுல மாணிக்கம், அவர்தம் இறப்பு மாபெரும் இழப்பு என்றெல்லாம் பதிவிடுவார்கள். தான் இப்படியெல்லாம் புகழப் படுவோம் என்று இறந்தவரே நினைத்திருக்க மாட்டார்!

ஆட்டுவிக்கும் சுயமோகம்: தனி மனித வாழ்வின் நிகழ்வுகளைக்கூடச் சிலர்விட்டு வைப்பதில்லை. இளம் வயதில் சிலர் கடையில் பொருள்களைத் திருடுவதும் அதைப் பெருமையாக நினைத்துக்கொள்வதும், தெரியாமல் எதையாவது உடைப்பதும் பொய்சொல்வதும் இயல்புதான். இதற்காகப் பெரியவர்கள் அவர்களைக் கோபிப்பார்கள், தவறைச் சுட்டிக்காட்டி வழிநடத்துவார்கள். அதுதானே பெரியவர்களின் இயல்பு? ஆனால், தவறு செய்த மகனை/மகளை, தான் எப்படிச் ‘சரியாகக்’ கையாண்டேன் என்று ஃபேஸ்புக்கில் எழுதுவது அவர்களின் தற்பெருமையைப் பறைசாற்றிக் கொள்வதற்குத்தானே. விவரம் புரியும் வயதில், அதைப் படிக்க நேரும் அந்தக் குழந்தையின் மனம் அவமானத்தால் சுருங்காதா?

மனைவி உப்புமா செய்து அதைப் படமெடுத்து ஃபேஸ்புக்கில் போடுகிறார். கணவர், ‘உப்புமா பிரமாதம்’ என்று பின்னூட்டமிடுகிறார். இருவரும் ஒரே வீட்டில்தான் வாழ்கிறார்கள். தினமும் சமூக ஊடகங்களில் எதையாவது பதிவிட்டுவிட வேண்டும், இல்லாவிட்டால் தான் அடையாளம் இல்லாமல் போய்விடுவோமோ என்கிற பதற்றம். எதையாவது பகிர்ந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்துக்குள் பலரும் தாங்களே போய் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். பதிந்துவிட்டு அடிக்கொருதரம் யாரெல்லாம் பின்னூட்டம் இடுகிறார்கள் என்று வேறு ஆராய்கிறார்கள்.

எங்கேயும் எப்போதும்எழுந்ததிலிருந்து இரவு தூங்கப்போகும் வரை திறன்பேசியோடுதான் பலருக்கும் வாழ்க்கை ஓடுகிறது. சாப்பிடும்போது போன், படுக்கை பக்கத்தில் போன். ஏன், கழிவறைக்குக்கூட திறன்பேசியைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். ஒரு காரில் பயணப்படும் நான்கு பேரும் ஒருவருடன் ஒருவர் பேசுவதைவிடத் திறன்பேசியிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். தனக்குத் தானே சிரிக்கிறார்கள், உச்சுக் கொட்டுகிறார்கள், அடுத்த நபர் என்னவென்று கேட்டால் பார்த்ததை ஃபார்வேர்டு செய்கிறார்கள். இருவரும் சேர்ந்து திறன்பேசியைப் பிடித்தபடி பார்ப்பதுகூட இல்லை.

இதேபோல் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை ஒட்டி உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அவை பெரும்பாலும் மிகை உணர்வுகளாகவே இருக்கின்றன. பாட்டுப் பாடி வரும் பதிவுக்கு, அதுவும் பாடியவர் பெண்ணாக இருந்தால், ‘நீங்கள்தான் குயில், கானசரஸ்வதி’ என்கிறார்கள். உண்மையில் அப்படி ஸ்வரம் தப்பிப் பாடும் பாடலை, ஒரு இசைக் கச்சேரியில் உட்கார்ந்து முழுமையாகக் கேட்போமா என்பது கேள்வியே.

சமூக ஊடகப் பயன்பாட்டால் உறவுகள் மேம்பட்டு உள்ளதா அல்லது மேம்போக்கானதாகிவிட்டதா? சமூக ஊடகங்கள் நமக்குத் தந்துகொண்டிருப்பது இயல்பான உறவின் தளங்களையா உண்மையான உணர்வுப் பகிர்வுகளையா அல்லது மேம்போக்கான உறவு - உணர்வு வெளிப்பாடுகளையா? இது இப்படியே தொடர்ந்தால் நாளடைவில் ஆழமான உறவின் பொருளைத் தொலைத்துவிடுவோமா? எல்லா உணர்வுகளும் செயற்கைப்பூச்சுகள் ஆகிவிடுமா?

தவறவிடும் தருணங்கள்: நேரில் பார்ப்பதும் துயரத்தில் கைகளைப் பிடித்து, தோளை அணைத்து ஆறுதல் சொல்வதும் அரிதாகிவிடுமா? மனிதத் தொடுதல் என்பது இல்லாமல் அனைவரும் ரோபாட் மாதிரி இந்தப் பகிர்வுக்கு இந்த உணர்வுஎன்று பட்டனை மட்டும் தட்டிவிடுவோமா? நேரில் பார்க்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கைபேசியிலாவது பேசலாம். நாள்தோறும் கடமைக்குக்காலை வணக்கம் அனுப்புவதைவிட அந்த நண்பர்/உறவினரோடு வாரம் ஒரு முறையாவது குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது பேசிவிட முடியாதா? சிறு தொடுதலில், புன்னகை போர்த்திய முக வெளிப்பாட்டில், உன் மேல் எனக்கு அன்பும் பரிவும் இருக்கிறது என்பதை எப்போது உணர்த்தப்போகிறோம்?

நாம் சரியான பாதையில் பயணிக்க ஆரம்பிக்க, ஒரு சிறு பயிற்சி செய்து பார்ப்போமா? உங்களுக்கு மிகவும் நெருக்கமான 20 பேரின்பெயர்களைப் பட்டியலிடுங்கள். அவர்கள் நண்பர்களாகவோ உறவினர்களாகவோ இருக்கலாம்.பிறகு இவர்களோடு கடைசியாக எப்போது போனில் பேசினீர்கள் என்றும் பேச நேர்ந்ததற்கான தருணத்தைப்பற்றியும் குறிப்பிடுங்கள். அடுத்ததாக, இந்த 20 பேரையும் கடைசியாக எப்போது, எந்தத் தருணத்தில் சந்தித்தீர்கள் என்று குறிப்பிடுங்கள். அவர்களை அவர்களுக்காகவே சந்தித்த தருணத்தை மட்டுமே குறிப்பிட வேண்டும். எழுதிப் பார்க்கும்போதுதான் தெரியும், நாம் எந்த அளவில் மற்றவர்களோடு நேரடித் தொடர்பில் இருக்கிறோம், எவற்றையெல்லாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்று.

மா, மானசி, கண்ணம்மா, நந்தினி, ஊசா என்று பல பெயர்களில் கடந்த 35 ஆண்டுகளாக எழுதிவருபவர் ஏ.எஸ்.பத்மாவதி. நாடகம், சிறுகதை, கட்டுரை, காணொளி என்று வெவ்வேறு வடிவங்களில் குழந்தைகள், பெண்களின் வாழ்க்கை குறித்துப் பதிவுசெய்து வருகிறார்.

SCROLL FOR NEXT