பெண் இன்று

பார்க்க பார்க்க காசு | டிஜிட்டல் பெண்ணே

பிருந்தா சீனிவாசன்

இன்ஸ்டகிராம் ரீல்களும் சின்னத்திரை நெடுந்தொடர்களும் பல பெண்களின் நேரத்தை விழுங்கிக்கொண்டிருக்க, திருநெல்வேலியைச் சேர்ந்த சத்யா கோமணியோ இன்ஸ்டகிராம் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பாதித்திருக்கிறார்!

பாபநாசம் அருகில் உள்ள விக்கிரம சிங்கபுரத்தைச் சேர்ந்த சத்யா, பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பணி ஒப்பந்தம் முடிந்ததும் ஊருக்குத் திரும்பியவர், அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றினார். பத்து ஆண்டுகளாகக் காதலித்துவந்த கோமணியை இருவீட்டினர் சம்மதத்துடன் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு மதுரைக்குக் குடியேறிய சத்யாவுக்கு அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை.

அப்பா காட்டிய வழி: சத்யாவின் அப்பா சிறிய அளவில் ஜவுளிக்கடை நடத்திவந்தார். அதனால், மகளைத் தையல் கற்றுக்கொள்ளும்படி சொன்னார். தலையணை உறை, பாவாடை போன்ற வற்றைத் தைக்க மட்டும் சத்யா கற்று வைத்திருந்தார். மதுரை வந்த பிறகு ஃபேஷன் டிசைனிங் கற்றுக்கொள்ளலாம் என நினைத்து இரண்டு மாதப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், அந்தப் பயிற்சியில் இவருக்குத் திருப்தியில்லை. அதனால், யூடியூப் வீடியோக்கள் மூலம் தையல் கலையில் நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார்.

"பெரியவ பிறந்து ஒண்ணேகால் வருஷமாச்சு. இன்ஸ்டகிராம் அக்கவுன்ட் தொடங்கினேன். தெரிந்தவர்களும் நண்பர் களும் சப்ஸ்கிரைப் செய்தாங்க. வீடியோக் களை நானே எடிட் செய்து அப்லோடு செய்வேன். 2023 நவம்பர் மாசம் தஞ்சாவூர்ல இருந்து வினோதினிங்கறவங்க குர்தி, மேக்ஸி தைக்கக் கற்றுத்தர முடியுமான்னு கேட்டாங்க. அவங்கதான் என் முதல் மாணவி. அது தந்த நிறைவுல அடுத்த மாதமே பயிற்சி வகுப்பு தொடங்கிவிட்டேன். முதல்ல 15 பேர் சேர்ந்தாங்க. படிப்படியா சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை அதிகமாச்சு. இப்ப லைவ் போட்டா இரண்டாயிரம் பேர் பார்ப்பாங்க” என்று சத்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே சப்ஸ்கிரை பர்கள் எண்ணிக்கை நம் கண் முன்னே ஒவ்வொன்றாகக் கூடுகிறது.

இன்ஸ்டகிராமில் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்துக்கு அதிகமானோரும் யூடியூபில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரும் சத்யாவைப் பின்தொடர்கிறார்கள். “ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க முடியாததால் ஒரு அகாடமியைத் தொடங்கி ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனி வீடியோவைத் தருகிறோம். 25 ரூபாயில் தொடங்கி 70 ஆயிரம் ரூபாய்வரை எங்களிடம் பயிற்சி வீடியோக்கள் இருக்கின்றன. இந்த வருஷம் மே மாதம் 100 விதமான ஆடைகளைக் கற்றுத்தரும் பயிற்சியைத் தொடங்கினோம். வாடிக்கையாளர்கள் வருவார்களா என யோசித்தேன். ஆனால், முதல் செட்டிலேயே 100 பேர் சேர்ந்துவிட்டனர்” என்கிறார் சத்யா.

இரண்டு ஊழியர்களோடு தொடங்கப்பட்ட இவரது நிறுவனத்தில் தற்போது 15 பெண்கள் வேலைசெய்கின்றனர். அவர்களில் நான்கு பேர், வாடிக்கையாளர்களின் சந்தேகங் களுக்குப் பதில் அளிக்கிறார்கள் மூன்றரை வயதிலும் ஒன்றரை வயதிலும் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு பம்பர மாகச் சுற்றி வேலை செய்கிறார் சத்யா. புதிது புதிதாகக் கற்றுக்கொள்கிறார். அதன் பலன் அவரது வங்கிக் கணக்கில் எதிரொலிக்கிறது.

இன்ஸ்டகிராம் இணைப்பு: https://shorturl.at/0obOQ

SCROLL FOR NEXT