பெண் இன்று

சேர்ந்தே சிந்திப்போம் - புதிய தொடர்

சிவசங்கரி

சில நல்ல சிந்தனைகளை, வாழ்க்கையில் நமக்கு உதவும் சிந்தனைகளைப்பற்றி இந்தத் தொடர் மூலம் பேசுவது அவசியம். யாருக்கும் தெரியாத விஷயத்தை நான் சொல்லப்போவதில்லை. ஆனால், நமக்கு நன்றாகத் தெரிந்ததை அடிக்கடி நினைவூட்டிக்கொள்வது அவசியம். பெண்கள் எப்படி இருந்தார்கள், இப்போது எப்படி இருக்கிறார்கள், எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பற்றி நாம் தெளிவாகச் சிந்தித்தால்தான் நாம் போகிற பாதை சரியா, நம் இலக்கு சரியா, இலக்கிலிருந்து விலகாமல் இருக்கிறோமா என்பது தெரியும்.

20 ஆண்டுகளுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசினேன். பெண்களுக்கு அரசியலில் 33% இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்பதைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். இதுவே 60 ஆண்டுகளுக்கு முன் ஒரு கருத்தரங்கு நடைபெற்றி ருந்தால், 'பெண்களுக்குக் கல்வி அவசியமா இல்லையா? என்பது தலைப்பாக இருந்திருக்கும். 40 ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தால், 'பெண்கள் வேலைக்குப் போகலாமா கூடாதா' என்பது தலைப்பாக இருந்திருக்கும். பெண்கள் எங்கே இருந்து பயணப்பட்டு இந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

எது பெண் விடுதலை? - 'பெண்களுக்கு என்ன தெரியும்? நகையைப் பற்றிப் பேசத் தெரியும், சாப்பாட்டைப் பற்றிப் பேசத் தெரியும், இல்லை யென்றால் வம்படிக்கத் தெரியும்' என்று அந்தக் காலத்தில் மிக சகஜமாகச் சொல்வார்கள். ஒரு வாதத்துக்கு இது உண்மையென்றே வைத்துக்கொள்வோம். சில பெண்கள் இப்படித்தான் இருந்தார்கள். ஏன் இப்படி இருந்தார்கள்? அவர்களைச் சமையலறையைவிட்டு, படியைத் தாண்டி வாசல் வெளியே அனுப்பவே இல்லை. கல்வி அவளுக்கு மறுக்கப்பட்டது. பொது விஷயங்களைப் பற்றிப் பேசுவது தவறு என்று சொன்னார்கள். தங்கக்கூண்டோ, இரும்புக்கூண்டோ ஏதோவொன்று... வீட்டின் நான்கு சுவர்கள் மட்டுமே உலகம் என்று சொல்லி அதற்குள் அவள் அடைத்துவைக்கப் பட்டபோது, தனக்குத் தெரிந்ததைத்தானே அவள் பேச முடியும்?

இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. கல்வியறிவு வந்தபிறகு பெண்கள் அரசியல், பொருளாதாரம், அறிவியல் எனப் பலவற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். இந்த நாட்டில் 16 ஆண்டுகளாக ஒரு பெண் பிரதமராக இருந்திருக்கிறார் என்றால், பெண்கள் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பது புரியும். நம் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண் விடுதலை, பெண்ணுரிமை - குறித்து நிறையப் பேசிவருகிறோம். ஆண்களை மதிக்காமல் இருப்பது. திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது. ஆண்கள் எதையெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் தாங்களும் செய்வது என இதை யெல்லாம்தான் பெண்
விடுதலை என்று சிலர் நினைத்திருக்கிறார்கள். ஆனால், என்னைக் கேட்டால் ஒரு பெண் என்றைக்குச் சுய விருப்பு, வெறுப்புள்ள ஒரு நபராக உண்மையாக மதிக்கப் படுகிறாளோ அன்றைக்குத்தான் பெண் விடுதலையும் சமத்துவமும் கிடைத்தது என்று சொல்வேன். நீங்கள் ஒரு உயரதிகாரியாக இருக்கலாம், உங்கள் முன் கூழைக்கும்பிடு போடும் ஒருவர் உங்களுக்குப் பின்னால் சென்று, 'அந்தம்மா மனுஷியா? சரியான ராட்சசி' என்று சொன்னால், அவர் மனதில் நிஜமான மரியாதை இல்லை என்றுதானே அர்த்தம்?

சுயமரியாதை வேண்டும்: அடுத்தவர் நம்மை மதிக்க வேண்டும் என்றால் முதலில் நமக்குச் சுயமரியாதை இருக்க வேண்டும். நம் நாட்டில் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிற பிரச்சினையே சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பதுதான். பாரதியாரும் தந்தை பெரியாரும் வாழ்ந்த, சுயமரியாதை சுயமரியாதை குறித்துப்பல குறித்துப்பல்ல ஆண்டுகளுக்கு முன்பே குரல்கள் எழுப்பப்பட்ட இந்தத் தமிழ்நாட்டில், பல பெண்களுக்கு சுயமரியாதை குறித்துத் தெரியவில்லை. சுயமரியாதை என்பது அகம்பாவமும் திமிரும் அல்ல

'எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. யார் தயவும் எனக்கு வேண்டாம்' என்று சொன்னால் அது திமிர். அது கூடாது. நம் வாழ்க்கை என்பது டீம் வொர்க். காலையில் எழுந்தது முதல் உடை, உணவு, அணிகலன்கள், வாகனங்கள் என நாம் பயன்படுத்தும் நூற்றுக் கணக்கான பொருட்கள் நமக்குக் கிடைக்க லட்சக்கணக்கான மனிதர்களின் உதவி தேவை. அவர்கள் இல்லையென்றால் நாம் இப்படி இருக்க முடியாதல்லவா? அதனால், நமக்கு எவ்வளவோ தருகிற இந்தச் சமுதாயத்துக்கு, நாம் திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு வாழும் அதேநேரம், சுயமரியாதையோடும் வாழ வேண்டும்.

யாருடைய வாழ்க்கையில் பிரச்சினை இல்லை? மேடு, பள்ளங்கள் இல்லாத ஒரே ஒருவரின் வாழ்க்கையையாவது நம்மால் சொல்ல முடியுமா? ம்ஹும் முடியாது. இந்த மாதிரி ஒரு பயணத்தை நாம் மேற்கொள்ளும்போது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் ஏன், ஒட்டுமொத்த சமுதாயமே சுயமரியாதையோடும் தன்னம்பிக்கையோடும் வாழவேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்கும் கட்டாயம் நமக்கு இருக்கிறது. பெண்கள் எப்படி சுயமரியாதையோடு வாழ்வது என்று தெரிந்துகொள்வதற்கு முன், அந்தக் காலத்தில் பெண்கள் எப்படி இருந்தார்கள் என்று தெரிந்துகொள்வோம்.

இருவரும் ஒன்றுதான்: மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவின் தொழில் என்ன? படைப்பது. படைப்பாளிக்குத் துணையாக அறிவு நிறைந்த ஒருவர் வேண்டும்தானே. அதனால்தான் சரஸ்வதியை அவருக்குத் துணையாக வைத்தார்கள். விஷ்ணுவுக்குக் காக்கும் தொழில். அதற்குச் செல்வம் வேண்டும். அதனால்தான் லக்ஷ்மியை அவருக்குத் துணையாக வைத்திருக்கிறார்கள். சிவனின் தொழில் சம்ஹாரம். அதற்குச் சக்தி வேண்டும். அதனால்தான் பார்வதியை, காளியை அவருக்குத் துணையாக வைத்திருக்கிறார்கள்.

இந்த மும்மூர்த்திகள், தங்களுடைய துணை இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்கிற நிலையில் அந்தக் காலத்தில் பெண்களை உயர்வாக வைத்திருந்தார்கள். ஆனால், காலப்போக்கில் பெண்களின் நிலை மிதியடிபோல், ஒரு போகப்பொருள் போல ஆகிவிட்டது. இரண்டாம்தர பிரஜையாக்கப்பட்டார்கள். இப்படிப் பேசுவதால் நான் ஒரு பெண்ணியவாதி, பெண்களுக்காக மட்டும் ஓரவஞ்சனையோடு பேசுவதாக நினைத்துவிடக் கூடாது. நான் எப்போதுமே ஆண் - பெண் என்கிற வேறுபாடு இல்லாமல் மனிதநேயத்தையே ஆதரிக்கிறேன். இந்தத் தொடரில்கூடப் பெண்களுக்கான பிரச்சினைகளை மட்டுமல்லாது ஆண்களின் பிரச்சினைகளையும் சமுதாயத்தில் பரவலாக உள்ள பிரச்சினைகள் குறித்தும் நாம் ஒன்றாகச் சிந்திக்கப் போகிறோம்.

சில உறுப்புகளில் உள்ள மாற்றங்கள் தவிர, ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை. பசி, தூக்கம், உணர்வு, வலி, வேதனை, மகிழ்ச்சி, சிலிர்ப்பு அனைத்தும் இருவருக்கும் ஒன்றுதானே. ஆனாலும், காலப்போக்கில் பெண்ணின் நிலை மாறியது எப்படி? அடுத்த வாரம் பார்க்கலாம்

(சிந்திப்போம்)

சிவசங்கரி: 83 வயதாகும் சிவசங்கரி, எழுத்துலகில் 57 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறார். இவரது படைப்புகள் அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. களத்துக்கே சென்று ஆய்வுசெய்து எழுதுவது இவரது தனிச் சிறப்பு. குடிநோய், கருணைக்கொலை, கண்தானம் எனப் புதுப்புது விஷயங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி இவர்.

SCROLL FOR NEXT