மின்சாரக் கட்டணம் அல்லது குழந்தையின் கல்விக் கட்டணம் போன்ற முக்கியமான ஒன்றைக் கட்ட வேண்டும் என்பதற்காக உங்கள் திறன்பேசியை (Smart phone) எடுக்கிறீர்கள். அடுத்த அரை மணி நேரம் கழித்துத்தான், அந்த வேலையைச் செய்யாமல் முகநூலில் கோஹ்லியா ரோஹித்தா என்று நீங்கள் சண்டை இட்டுக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிகிறது! அவசரமாக ஒருவரை அழைக்க போனை எடுக்கிறீர்கள்.
கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், இன்ஸ்டகிராமில் ஒட்டகச்சிவிங்கியை மலைப்பாம்பு வளைக் கும் காணொளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அண்ணா சாலை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் ஐந்து விநாடிகளுக்கும் மேல் உங்கள் வாகனம் நின்று கொண்டிருக்கிறது.
மணி என்ன என்று பார்ப்பதற்காக திறன்பேசியை எடுக்கிறீர்கள். கால்மணி நேரம் கழித்துப் பார்த்தால் ‘வெறும் வயிற்றில் வெந்நீருடன் வெந்தயம் கலந்து சாப்பிட்டால் நல்லது’ என்னும் காணொளியை யூடியூபில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதற்கு என்ன அர்த்தம்? - கடையில் ஒரு பொருள் வாங்கிவிட்டு நூறிலிருந்து ஐம்பத்தி மூன்று போக மிச்சம் என்ன எனப் பார்க்க வேண்டும்; உடனே திறன்பேசியை எடுத்துப் பார்க்கிறீர்கள்! வெளியூர் ஒன்றுக்குச் செல்கிறீர்கள். பயணம் தாமதமாகி உங்கள் செல்போன் அணைந்துவிட்டது.
வெளியூரில் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நண்பர் பெயர்/ தொலைபேசி எண் என எதுவுமே உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் ஊரில் உள்ள இன்னொரு நண்பரை அழைத்துக் கேட்கலாம் என்றால், அவரது எண்ணும் உங்கள் நினைவில் இல்லை.
வீடு தீப்பிடிக்கிறது. தீயணைப்புப் படையை அழைக்க செல்போனை எடுக்கிறீர்கள். கொஞ்ச நேரம் கழித்து அதை மறந்துவிட்டு, உக்ரைன் போரினால் எண்ணெய் விலை எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். மேலே சொன்னவற்றை எல்லாம் நீங்கள் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் இவ்வுலகில் இருக்கும் பலரைப் போலவே அதீதத் திறன்பேசி பயன்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அன்றே சொன்ன அறிஞர்: ஒவ்வோர் ஆண்டும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து, அதை அந்த ஆண்டின் வார்த்தையாக அறிவிக்கும். 2024ஆம் ஆண்டுக்கான வார்த்தையாக அது ‘மூளை அழுகல்’ என்று பொருள் தரக்கூடிய ‘Brain Rot’ என்கிற வார்த்தையை அறிவித்தது.
அதீத இணையதளப் பயன்பாட்டால் நமது மூளையின் திறன்களான கவனித்தல், நினைவுத்திறன் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை ‘மூளை அழுகல்’ எனும் வார்த்தை குறிக்கிறது. இதனால் ஏற்படும் நிறைவின்மை, சலிப்பு, எரிச்சல், உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை அதன் இலவச இணைப்புகளாக எடுத்துக்கொள்ளலாம்.
நாகரிக மாற்றம், நுகர்வுக் கலாச்சாரத்தால் விளையக்கூடிய ஏராளமான தூண்டுதல்களால் மூளை பாதிக்கப்பட்டு சிந்திக்கும் திறன் குறைவதை இப்போது புதிதாகக் கண்டறிந்து சொல்லவில்லை. மூளை அழுகல் (Brain rot) என்னும் வார்த்தை புதிதாக உருவாக்கப்பட்டதல்ல. 19ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டது.
அப்போது அமெரிக்காவில் வாழ்ந்துவந்த புகழ்பெற்ற தத்துவ அறிஞர் ஹென்றி தாரோ (Henry David Thoreau). 1845ஆம் ஆண்டுவாக்கில் நகர்ப்புற நாகரிகத்தை வெறுத்து காட்டுப்புறமாக உள்ள ஓரிடத்துக்குச் சென்று சுமார் இரண்டு ஆண்டுகள் தனிமையில் இருந்தார். வால்டன் என்கிற ஏரிக்கரையில் வாழ்ந்த அனுபவங்களை ‘வால்டன்’ என்கிற பெயரிலேயே அவர் ஒரு நூலாக வெளியிட்டார்.
அதில், உருளைக்கிழங்கு அழுகுவதைப் போல் நமது மூளையும் நவீன நாகரிகம் தரும் ஏகப்பட்ட விஷயங்களில் சிக்கி அழுகுகிறது என்று அவர் எழுதினார். தொலைபேசிகூடக் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலத்திலேயே அவர் இதுபோல் எழுதியுள்ளார் என்றால், அதிநவீனத் திறன்பேசிகளைப் பயன்படுத்தும் இந்தக் காலத்தில் அவர் இருந்தால், என்ன சொல்லியிருப்பார்?
சில தரவுகள்: உலகின் மக்கள்தொகை எண்ணூறு கோடிக்கும் அதிகம். இதில் வயதுவந்தோர் முக்கால்வாசி பேருக்கு மேல் கைபேசியைப் பயன்படுத்துகிறார்கள். சுமார் ஐநூறு கோடி திறன்பேசிகள் இந்த உலகில் பயன்படுத்தப்படுகின்றனவாம். அண்மையில் எடுத்த ஓர் ஆய்வின்படி அமெரிக்காவில் மக்கள் தினமும் மூன்றே முக்கால் மணி நேரம் தங்கள் திறன்பேசிகளைப் பார்ப்பதில் செலவிடுகிறார்களாம்.
ஆப்பிரிக்க நாடான கானாவில் ஐந்து மணிநேரம். இது 2013இல் இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகியிருக்கிறது. மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு வேலைக்காக இல்லாமல் தனிப்பட்ட முறையில் சுமார் நூறு முதல் நூற்றைம்பது முறை தனது திறன்பேசியை எடுத்துப் பார்க்கிறார்களாம்.
கணினிப் பயன்பாடு அதிகமாக ஆரம்பித்த காலத்திலேயே மெய்நிகர் சாதனங்களின் பாதிப்புகள் பெரிதும் பேசப்பட்டன. அதிலும் இப்போது நமது உள்ளங்கையிலேயே இருக்கும் கணினியாகத் திறன்பேசிகள் வந்த பிறகு, அது இன்னமும் பலமடங்கு ஆகியிருக்கிறது.
குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் திறன்பேசிகளின் பயன்பாட்டால் மூளையின் திறன்களில், அன்றாடச் செயல்பாடுகளில், சமூக உறவுகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியாமல் போனாலும், எப்படிக் குறைப்பது, எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது என்பதை எல்லாம் வரும் வாரங்களில் பார்க்கலாம். வாருங்கள், நம் உள்ளங்கையில் ஒளிந்திருக்கும் சிறைச்சாலையை அறிவோம்.
(வெளிவருவோம்)
- drgramanujam@gmail.com