எனக்கு வயது 47, நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது? - பி. மாரிமுத்து, திருச்சி.
நடுஇரவில் விழிப்பு வந்து அதன் பிறகு உறக்கமில்லை என்று சொல்கிறீர்கள். எப்போது முதல் இப்படியிருக்கிறது என்று தெரியவில்லை. ஒரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை. ஆனால், தொடர் பிரச்சினையாக இருந்தால் கண்டிப்பாகக் கவனிக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற நேரத்தில் படுக்கையில் தொடர்ந்து இருக்காமல் அருகிலுள்ள அறைக்குச் சென்று, மீண்டும் உறக்கத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தூக்கம்தான் வரவில்லையே என்று வேறு ஏதாவது பணியில் ஈடுபடக் கூடாது. அப்போது மனதை வருடும் இனிய இசையைக் கேட்கலாம்.
பிடித்த புத்தகம் ஒன்றை எடுத்து, சிறிது நேரம் வாசிக்கலாம். இவை மனதைச் சாந்தப்படுத்தி, உறக்கத்தை உருவாக்க உதவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியிடும் பயிற்சி, தியானம் செய்வது பயன் தரும். கண்டகண்ட நேரத்தில் உணவு உண்பது, உறங்கச் செல்லும் நேரத்தை மாற்றுவது ஆகியவற்றைச் செய்யாதீர்கள்.
குறித்த நேரத்தில் உணவு உண்ணுதல், உறக்கம் கொள்ளுதல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். மதிய வேளையில் நீண்ட நேரம் உறங்காதீர்கள். தொடர்ந்து உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், உறங்குவதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்பாகச் செய்யக் கூடாது.
இரவு நேரத்தில் காபி அருந்தாதீர்கள். புகை, மதுப்பழக்கம் இருந்தால் கைவிடுங்கள். எந்த வேலை இருந்தாலும் தினமும் 7-8 மணி நேரத்தைத் தூக்கத்துக்கு ஒதுக்குங்கள். சிலருக்குச் சில உடல் நோய்களும் மனக் கவலைகளும் தூக்கத்தைக் கெடுக்கலாம். அவற்றை மருத்துவ ஆலோசனை பெற்று சரிசெய்யுங்கள். மன உளைச்சல் இருந்தால், அதை மறந்து மகிழ்வான நிகழ்வுகளைக் கண்முன்னே கொண்டுவாருங்கள்.
படுக்கை அறையில் வெளிச்சம் இல்லாமல் அல்லது மங்கலான வெளிச்சமே இருக்க வேண்டும். உடனடியாகத் தூங்க தூக்க மாத்திரைகளைத் தேடிப் போகாதீர்கள். முக்கியமாக, திறன்பேசி எனும் கைக்குழந்தையை நீங்கள் தூங்கும் முன்பாகத் தூங்க வைத்துவிடுங்கள். இல்லையென்றால், இரவெல்லாம் அது உங்களைத் தூங்கவிடாமல் நச்சரித்துக் கொண்டிருக்கும்.