உயிர் மூச்சு

புலி - மனிதர்கள்: ஏன் இந்த உரசல்? | என்ன நடக்கிறது காட்டில்?

செந்தில்குமரன்

சுற்றுலாப் பயணிகளும் ஒளிப்படக் கலைஞர்களும் இந்தியக் காடுகளை நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் போகிறார்கள். எதற்கு, உலகிலேயே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கம்பீர வங்கப் புலிகளைப் பார்ப்பதற்கா? இல்லை, அந்தப் புலிகளைப் படமெடுப்பதற்கு.

இங்கே நீங்கள் பார்க்கும் படத்தில் மகாராஷ்டிரத்தின் தடோபா புலிகள் காப்பகத்தின் நடுவில் காட்டை ஊடறுத்துச் செல்லும் சாலையைக் கடந்து செல்கிறது ஒரு புலி. எப்படியாவது அதைப் படமெடுத்துவிட வேண்டும் என்கிற ஆவலுடன் வாகனங்களில் காத்திருந்த ஒளிப்படக் கலைஞர்களுக்கு மகிழ்ச்சி. நானோ அந்தப் புலிக்குப் பதிலாக, புலியைப் படமெடுப்பவர்கள் மீதே கவனம் செலுத்தினேன்.

ஆப்ரிக்காவில் புலிகள் கிடையாது. ஆசியாவில் புலிகள் இருக்கின்றன என்றாலும், இந்தியாவில்தான் புலிகள் சற்று குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எஞ்சியுள்ளன. இப்படிப் புலிகளைத் தேடிச்செல்லும் ஒளிப்படக் கலைஞர்கள், சுற்றுலாப் பயணிகள் அவற்றின் பின்னால் உள்ள விஷயங்களை மிகச் சாதாரணமாகக் கடந்துவிடுகிறார்கள். இப்படிச் செய்வது புலிகளைப் புரிந்துகொள்ள உதவாது.

இந்தியாவில் வாழும் புலிகளில் மூன்றில் ஒரு பங்கு, சரணாலயங்கள்-காப்பகப் பகுதிகளைத் தாண்டி காட்டின் எல்லையோரமும், அதை ஒட்டியும் இருக்கும் கிராமங்களுக்குள் தங்கள் வாழ்விடப் பகுதிகளை விரிவுபடுத்திவருகின்றன. புலிகள் ஏன் இப்படித் தங்கள் வாழ்விடப் பரப்பை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்? தொடர் காடழிப்பு, சாலை அமைத்தல் போன்ற வளர்ச்சி நடவடிக்கைகளால் வாழ்விட இழப்பு, இரை பற்றாக்குறை, புலிகள் செல்லும் தடங்களில் ஆக்கிரமிப்புகள் போன்றவையே இந்த எல்லை விரிவாக்கத்திற்கு முக்கியக் காரணம். கிராமங்களையும், மேய்ச்சல் நிலங்களையும் புலிகள் பகிர்ந்துகொள்ள முற்படும்போதுதான் புலி - மனித எதிர்கொள்ளல் தொடங்க ஆரம்பிக்கிறது.

இரை பற்றாக்குறையின் காரணமாகக் கிராமங்களில் உள்ள ஆடு மாடுகளைப் புலிகள் சில நேரம் குறிவைக்கின்றன. இதனால் அவற்றை வளர்க்கும் கிராம மக்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. அரிதாகச் சில நேரம் புலிகளின் தாக்குதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகள், காயமடைதல் போன்றவை கிராமப்புறச் சமூகங்களிடையே பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.

இந்த எதிர்கொள்ளலின் சில சந்தர்ப்பங்களில், புலிகளால் கால்நடைகள் வேட்டையாடப்பட்ட பிறகு உள்ளூர் மக்கள் விஷம் வைத்துப் புலிகளைக் கொல்வதும், உள்ளூர்க் கும்பல்களால் புலிகள் தாக்குதலுக்கு உள்ளாவதும் நடைபெறுகிறது. இது இந்தியாவின் இயற்கை வளமான புலிகளின் பாதுகாப்புக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காடுகளின் எல்லையோரக் கிராமங்களில் புலிகளின் கதை வெறும் மனித - புலிகள் எதிர்கொள்ளல் பற்றியது மட்டுமல்ல - அதிகரித்துவரும் நெருக்கடியான நிலப்பரப்பில் மனிதர்களும் காட்டுயிர்களும் ஒரு நிலப்பரப்பைப் பகிர்ந்துகொள்வதற்கான வழிகளைக் கண்டறிவது சார்ந்த மிகவும் சவாலான சூழலியல் பிரச்சினையாகும்.

(இன்னும் சொல்லும்)

- artsenthil@gmail.com

SCROLL FOR NEXT