பொழுதுபோக்குப் பூங்காக்களில் குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சறுக்கு விளையாடிப் பார்த்திருப்போம். இப்படி ஒரு சறுக்கு விளையாட்டை ஒரு பூச்சியானது தனது இரையை வேட்டையாடப் பயன்படுத்துகிறது தெரியுமா? எங்கள் ஊரில் அதன் பெயர் குள்ளாம்பூச்சி. குழிநரி (Ant lion) என்றும் இது அழைக்கப்படுகிறது. இப்பூச்சியானது எறும்புகளை வேட்டையாடும் உத்திக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் விதி உண்மையிலேயே ஆச்சரியப்பட வைக்கும்.
மரத்தடிகளில், மணற்பாங்கான இடங்களில் தலைகீழ் கூம்பு வடிவிலான சிறு குழியைப் பார்த்திருப்போம். இக்குழியைத் தோண்டுவது இந்தக் குள்ளாம்பூச்சிதான். இந்தக் குழியின் அடியில் - மையத்தில் இப்பூச்சி மறைந்திருக்கும்.
அவ்வழியாக வருகின்ற எறும்புகள், சிறு பூச்சிகள் இக்குழியின் மேல்விளிம்பில் கால் வைத்தால் சர்ரென்று சறுக்கிக்கொண்டே குழியின் மையத்தில் போய் விழுந்துவிடும். அவற்றால் திரும்ப ஏறி வர முடியாது. மறைந்திருக்கிற குள்ளாம்பூச்சி தனது வளைவுக் கொடுக்கால் கவ்விப்பிடித்து உணவாக்கிக்கொள்ளும்.
பூங்காவில் நாம் பார்க்கும் சறுக்கு விளையாட்டில் உள்ள சாய்ந்த பரப்பு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்ந்திருந்தால்தான் குழந்தைகள் ஏறி அமர்ந்தவுடன் சறுக்கிக்கொண்டே கீழே செல்ல முடியும். இதை இயற்பியலில் ‘சறுக்குக்கோணம்’ என்கிறோம். இந்த சறுக்குக்கோணம் குறிப்பிட்ட மதிப்புக்கு அதிகமாக இருந்தால்தான் சறுக்க முடியும்.
அதற்குக் குறைவாக இருந்தால் குழந்தைகள் ஏறி அமர்ந்தாலும் சறுக்கிக் கீழே வர முடியாது. இந்தச் சறுக்குக்கோணம் அந்தச் சாய்தளப் பரப்பின் உராய்வுத்தன்மை குணகத்தை (coefficient of friction) பொறுத்தது. சாய்தளம் கண்ணாடியாக இருந்தால் குறைவான சறுக்குக்கோணத்திலேயே பொருட்கள் சறுக்க ஆரம்பித்துவிடும். சொரசொரப்பான பரப்பாக இருந்தால் சறுக்குக்கோணம் அதிகமாகத் தேவை.
குள்ளாம்பூச்சிகள் பரிணாம வளர்ச்சியில் அது சார்ந்து வாழும் மண்தரைக்கு ஏற்றாற்போல் கூம்பு வடிவக் குழியைத் தோண்டும்போது கூம்பின் சறுக்குக்கோணத்தைவிட அதிகமாக இருக்கும் அளவுக்குச் சாய்வுக்கோணத்தை அமைக்கிறது. அதனால், அக்குழியின் விளிம்புக்கு வரும் எறும்புகள், சிறு பூச்சிகள் தானாகச் சறுக்கிக்கொண்டே குழிக்குள் சென்று குள்ளாம்பூச்சிக்கு உணவாகின்றன.
சறுக்கு விளையாட்டுக் கருவியின் சாய்தளத்தை எந்தக் கோணத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்வது அறிவியல், பொறியியல் அறிஞர்களின் பணி. இந்த இரண்டையும் குள்ளாம்பூச்சி தனது பரிணாம அனுபவத்தால் ஒருசேரப் பெற்றுச் செய்வது ஆச்சரியம்தான்.
குள்ளாம்பூச்சியின் இந்த வேட்டையாடும் உத்தி குறித்துப் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் நடை பெற்றிருக்கின்றன. பிரான்ஸில் உள்ள ரென்னே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், தோராயமாக 2 மில்லி கிராம் நிறையுள்ள எறும்புகளும் பூச்சிகளும்தான் அதிக அளவில் இரையாகின்றன என்று கண்டறியப்பட்டது.
காரணம் சறுக்கும்போது இந்த எறும்புகளால் கீழ்நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசையைச் சமன் செய்யக்கூடிய அளவுக்கான எதிர் விசையை உருவாக்க முடிவதில்லை. இதைவிட அதிக எடையுள்ள எறும்புகள் வரும்போது, அதன் அதிக நிறையால் அம்மணல் கூம்பின் இடையிலேயே பள்ளம் உருவாவதால் சறுக்குதல் நின்றுவிடுகிறது.
2 மி.கிக்கும் குறைவான எடையுள்ள எறும்புகள் அல்லது சிறுபூச்சிகள் உணரும் ஈர்ப்புவிசை மிகக்குறைவாக இருப்பதால் சறுக்குதல் நடப்பது சற்றுக் கடினம். இந்த ஆய்வு முடிவுகள் புகழ்பெற்ற ‘பிசிக்கல் ரிவ்யு லெட்ட’ரில் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் பல்வேறு வகைகளில் நமக்குப் பயனளிக்கும்.
எடுத்துக்காட்டாக, செவ்வாய் போன்ற கோள்களில் ரோபாட் எந்திரங்களை அனுப்பும்போது அங்கிருக்கும் குழிகளில், பள்ளங்களில் சிக்கல் இல்லாமல் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்ற வகையில் ரோபாட்களை வடிவமைப்பதற்கு உதவிபுரியும். அதேபோல் மண்சரிவு, நிலநடுக்கம் போன்ற பேரிடர் நடைபெறும் பகுதிகளில் பயன்படும் ரோபாட் ஆராய்ச்சிகளுக்கும் உதவி புரியும்.
இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் குள்ளாம்பூச்சியையும், அதன் வாழ்க்கைக்கும் நாம் வகுப்பறையில் கற்கும் அறிவியலுக்கும் இருக்கும் தொடர்பை அறிவது அவசியம். குள்ளாம்பூச்சியும் நமக்கு ஒரு அறிவியல் ஆசிரியரே.
- கட்டுரையாளர், இயற்பியல் விரிவுரையாளர்; josephprabagar@gmail.com