உயிர் மூச்சு

அந்தியில் வரும் வானவில் துண்டுகள்

ஆதி வள்ளியப்பன்

பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி என்கிறோம். உண்மையில் Butterflyயை வண்ணத்துப்பூச்சி என்றே சொல்ல வேண்டும். பட்டுக்கூட்டை உருவாக்குபவை அந்திப்பூச்சி வகையே. பட்டுக்கூட்டை உருவாக்க உதவும் Domestic silk moth எனப்படும் அந்திப்பூச்சியைப் பட்டாம்பூச்சி என்று கூறலாம். வண்ணத்துப்பூச்சிகளும் அந்திப்பூச்சிகளும் உறவினர்கள்தான் என்றாலும், இரண்டும் ஒன்றல்ல.

இறக்கையுள்ள பூச்சி வகைகளில் Lepidoptera குடும்பக் குழுவின்கீழ் வண்ணத்துப்பூச்சிகளும் அந்திப்பூச்சிகளும் வருகின்றன. 1,60,000 லெபிடாப்டெரா சிற்றினங்கள் இதுவரை வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் வாழும் உயிரினங்களில் 10 சதவீதம் லெபிடாப்டெராவே. பீட்டில்ஸ் எனப்படும் பொறிவண்டுகளே உலகில் மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களைக் கொண்டுள்ளன.

அறிமுகக் கையேடு: இப்படி நம்மைச் சுற்றி நிறைந்திருக்கும் வண்ணத்துப்பூச்சிகளுடன் அந்திப்பூச்சி களையும் சேர்த்தே பார்த்திருப்போம் என்றாலும், இரண்டையும் வேறுவேறு என உணர்ந்திருக்க மாட்டோம். இந்த நிலையில், சுற்றுச்சூழல் கல்வியாளர் ஆர்.பானுமதி ‘Moths of Agastya’ என்கிற வண்ண அறிமுகக் கையேட்டை உருவாக்கியுள்ளார்.

ஏற்கெனவே வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள்-ஊசித்தட்டான்கள் (ப.ஜெகநாதனுடன் இணைந்து) ஆகியவற்றுக்கான அறிமுகக் கையேடுகளை உருவாக்கிய அனுபவம் கொண்டவர் இவர். உலக இயற்கை நிதியத்திலும் (WWF), மற்ற நிறுவனங்களிலும் சுற்றுச்சூழல் கல்வியாளராக 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டம் குப்பம் நகரில், அகஸ்த்யா சர்வதேச அறக்கட்டளை 172 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பதிவுசெய்யப்பட்ட 43 குடும்பங்களைச் சேர்ந்த 653 அந்திப்பூச்சி வகைகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்த நூலை உருவாக்க நான்கு ஆண்டுகளை அவர் செலவிட்டுள்ளார். இந்த நூலில் உள்ள ஒளிப்படங்கள் அனைத்தும் அவரே எடுத்தவை. தன்னால் அடையாளம் காண முடியாத அந்திப்பூச்சி வகைகளையும் படங்களுடன் அவர் கொடுத்துள்ளார்.

இந்திய அந்திப்பூச்சிகளைப் பற்றி ஏற்கெனவே சில நூல்கள் வந்துள்ளன என்றாலும், அறிமுகக் கையேடாக இதுபோல் விரிவாகவும் வண்ணப்படங் களுடனும் வெளியான நூல்கள் மிகக் குறைவு. அந்திப்பூச்சி வகைகளின் படங்கள், உருவ அமைப்பு, அந்திப்பூச்சிகளின் வாழ்க்கை முறை, ஓய்வெடுக்கும் போது அவற்றின் தோற்றம் ஆகியவற்றை இந்த நூல் விவரிக்கிறது.

ஏன் இந்தப் பெயர்? - Mothsயை அந்துப்பூச்சிகள் என்று கூறும் வழக்கம் உண்டு. பொதுவாக, உணவு தானியங்களில் வரும் சிறிய Micro Mothsயை இப்படிச் சுட்டுகிறார்கள். அதேநேரம், இவை மட்டுமே அந்திப்பூச்சிகள் என நினைத்துவிடக் கூடாது. வண்ணத்துப்பூச்சிகளைப் போன்ற அளவுடைய Macro Moths வகைகளும் உண்டு. வண்ணத்துப்பூச்சிகளைப் போலவே அந்திப்பூச்சிகளும் எண்ணிக்கையிலும் வகையிலும் பெருமளவு இருக் கின்றன.

வண்ணத்துப்பூச்சிகள் பகலாடிகள் என்றால், அந்திப்பூச்சிகள் இரவாடிகள். இரவில் மட்டுமே இவை சுறுசுறுப்பாக இருக்கும். இதன் காரணமாக அந்துப்பூச்சி என்கிற பெயர் சமீபகாலமாக அந்திப்பூச்சி என வழங்கப்பட்டுவருகிறது. காரணம், அந்தி எனப்படும் மாலை நேரத்தில்தான் பொதுவாக இவை இயங்கத் தொடங்குகின்றன.

வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளைத் தொட்டால் வண்ணங்கள் ஒட்டாது. இவற்றின் இறக்கையைத் தொட்டால், மாவுபோல் ஒட்டும். அந்திப்பூச்சிகள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. குளிர்கால இரவு நேரங்களில் உங்கள் வீடுகளிலும் இது போன்ற சில அந்திப்பூச்சி வகைகளைப் பார்த்திருக்கலாம்.

இயற்கையின் பங்கு: சிறியதோ, பெரியதோ உலகை வாழ வைப்பதில் எல்லா உயிரினங்களுக்கும் பங்கு உண்டு. அந்த வகையில் இரவில் மலரும் தாவரங்களில் அந்திப்பூச்சிகள் மகரந்தச் சேர்க்கை புரிகின்றன. அதிலும் குறிப்பாக, Coffee Bee Hawkmoth காபி தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகிறது. Owl moth, Tasar silk moth, Indian moon moth, Golden emperor moth போன்றவை இந்தியாவில் பார்க்கக்கூடிய சில குறிப்பிடத்தக்க அந்திப்பூச்சி வகைகள்.

பறவை நோக்குபவர்கள், ஊர்வன வற்றைப் பின்தொடர்பவர்களைப்போல, வெளிநாடுகளில் வண்ணத்துப்பூச்சி நோக்குவோர், அந்திப்பூச்சி நோக்கு பவர்கள் அதிகம். நம் நாட்டில் இதுபோன்ற அறிவார்ந்த பொழுதுபோக்குகள் மிகத் தாமதமாகவே பிரபலமடைந்துவருகின்றன. ஜூலை கடைசி வாரத்தில் ‘அந்திப்பூச்சி வாரம்’ நாடு முழுக்கக் கொண்டாடப்படுகிறது.

வாழிட அழிப்பு, கட்டுப்பாடற்ற பூச்சிக்கொல்லிப் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் அந்திப்பூச்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பூச்சிகளையும் மோசமாகப் பாதித்துவருகின்றன. பூச்சிகள் போன்ற சிற்றுயிர்களை அவற்றுக்கு உரிய முக்கியத்துவத்துடன் சமூகம் அணுகுவதில்லை. அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு, இவற்றுக்கு உரிய முக்கியத்துவத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்பதை மேற்கண்டதைப் போன்ற நூல்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

Moths of Agastya, Dr. R.Bhanumathi,
Agastya international foundation,
தொடர்புக்கு: elaibhanu@gmail.com

- valliappan.k@hindutamil.co.in

SCROLL FOR NEXT