‘கட்டா குஸ்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பு, தயாரிப்பில் தீபாவளி ரிலீஸாக வருகிறது ‘ஆர்யன்’. படத்தை எழுதி, இயக்கியிருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனனின் இணை இயக்குநரான பிரவீன் கே. விஷ்ணு. விஷாலின் பிளாக் பஸ்டர்படங்களில் ஒன்று 2018இல் வெளியான ‘ராட்சசன்’.
“அதைப்போல், ‘ஆர்ய’னும் ஒரு சீரியல் கில்லரைத் தேடிச்செல்லும் காவல் அதிகாரியின் கதைதான். ஆனால், இப்படத்தின் கதையைக் கேட்ட ஆமிர் கான் சார், இதை இந்தியில் தயாரித்து அதில் வில்லனாக நடிக்க முன்வந்தார். இந்தப் படத்தின் கதைதான் அவரது நட்பை எனக்குப் பெற்றுக் கொடுத்தது” என்று பேசத் தொடங்கினார் விஷ்ணு விஷால்.
‘ராட்சசன்’ படத்திலிருந்து ‘ஆர்யன்’ எப்படி வேறுபடுகிறது?
‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் என்னுடன் இணைந்து நடித்தவர்தான் இந்தப் படத்தின் இயக்குநர் பிரவீன். கரோனா ஊரடங்கு காலத்தில் அவரிடம் இக்கதையைக் கேட்டு முடித்ததுமே நானே நடித்து, தயாரிக்கி றேன் என்று முன்பணம் கொடுத்து புக்செய்து கொண்டேன். ‘ராட்சசன்’ படத்துடன்நிச்சயமாக இந்தப் படத்தை ஆடியன்ஸ் ஒப்பிடுவார்கள். ஆனால், அவர்களால் சிறிதும் யோசிக்க முடியாத வேறொரு சூழலில் கதை நடக்கிறது.
‘ராட்சச’னில் வரும் சீரியல் கில்லரின் உளவியல் சிக்கல் பெரிதும் பேசப்பட்டது. ஆனால் ‘ஆர்ய’னில் வரும் கில்லர் எந்த உளவியல் காரணத்துக் குள்ளும் சிக்காதவன். அதேபோல், ‘ராட்சச’னில் நான் ஏற்றிருந்த எஸ்.ஐ. அருணுக்கும் இதில் ஏற்றுள்ள நம்பி ஐபிஎஸ்ஸுக்கும் தோற்றம் உள்பட துளியும் தொடர்பு கிடையாது. அதேநேரம் ‘ராட்சசன்’ மூலம் எனக்குக் கிடைத்த நற்பெயரை இந்தப் படம் உயர்த்துமே தவிர, குறைக்காது.
உங்கள் அப்பா டிஜிபி ஆக இருந்தவர். போலீஸ் வேடங்கள் ஏற்கும்போது அவரிடம் ஆலோசனை கேட்பது உண்டா?
நிச்சயமாக. அவருடைய அனுபவங்களிலிருந்து நிறைய அறிவுரைகளும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள் வேன். இந்தக் கதையில் வரும் வழக்கு போல் ஒன்றைப் பணிக்காலத்தில் சந்திக்க நேர்ந்திருந்தால், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்ன சில விஷயங்கள் ஆச்சரியமாக இருந்தன.
படம் தயாரிப்பது எளிது; வெளியிடு வதுதான் சவால் என்கிற இடத்தில் வந்து தயாரிப்பார்கள் நின்றுகொண்டி ருக்கும் காலக்கட்டம் இது. ஆனால், நீங்கள் நடிக்கும் படங்களை நீங்களே சுயமாகத் தயாரிப்பதில் இருக்கும் நன்மை என்ன?
‘லால் சலாம்’, ‘இரண்டு வானம்’ என்கிற இரண்டு படங்களில் வெளித் தயாரிப்பில் நடித்தேன். எனக்கு அதில் 3 வருடம் ஓடிவிட்டது. ஆனால் என்னுடைய படங்களை நானே தயாரித்தால் அவற்றை உடனுக்குடன் வெளியிட முடிகிறது.
எடுத்துக்காட்டாக, கரோனா காலம் முடிந்த பிறகு ‘கட்டா குஸ்தி’, எஃப்.ஐ.ஆர்’ என ‘பேக் டூ பேக்’ இரண்டு வெற்றிகளைக் கொடுத்தேன். அவை என்னுடைய தயாரிப்புகள். ‘ஆர்யன்’ படத்துக்குக் கடந்த ஆண்டு நவம்பரில் படப் பிடிப்பு தொடங்கி னோம். இதோ தீபாவளி ரிலீஸ். வெளித் தயாரிப்பாளர் என்றால், வெளியீட்டை நான் எப்படி முடிவுசெய்ய முடியும்?
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என நகைச் சுவை கதைக் களங்களில் ஸ்கோர் செய்தீர்கள். ஆனால் அது தொடரவில்லையே?
கோலிவுட்டில் எவ்வளவு தேடினாலும் காமெடி ஸ்கிரிப்ட் கிடைப்பதில்லை. எனக்கு காமெடி நன்றாக வரும் என்பதால்தான் ‘கட்டா குஸ்தி 2’ தயாரித்து, நடித்துக்கொண்டிருக்கிறேன். காமெடிக் கதைக் களங்கள் ‘தின் லைன்’களைக் கொண்டவை, கொஞ்சம் பிசகினாலும் ஏமாற்றிவிடும். அதனால் சரியான மீட்டரில் அமைந்த காமெடிக் கதை கிடைத்தால் விடமாட்டேன். அப்படியொரு மீட்டரில் சிக்கிய முழுநீளக் காமெடித் திருவிழாதான் ‘கட்டா குஸ்தி -2’.
முழு நீள ஆக்ஷன் கதாநாயகனாகும் ஆசை இல்லையா?
ஆக்ஷன் ஹீரோக்கள்தான் கடைசிவரை சினிமாவில் இருக்கிறார்கள். ஒரு நாள் ஆக்ஷன் ஹீரோவாக ஆனால் மகிழ்ச்சி. அது தானாக நடக்கட்டும். ஆனால், நான் வித்தியாசமான கதைக் களங்களும் கதாபாத்திரங்களும் பண்ண விரும்புகிறேன். ஆடியன்ஸுக்கு புதிது புதிதாகக் கொடுத்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன். அதானல்தான் எதற் குள்ளும் உங்களால் என்னை அடைக்க முடியவில்லை.