மக்களின் உயிராதாரம் என்பதால், இராமாயணக் கதை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு; அனைத்து மொழிகளிலும் உண்டு; அனைத்து வடிவங்களிலும் அனைத்து மரபுகளிலும் உண்டு.
கதைப்போக்கில் சிறு சிறு மாற்றங்களும், வேறுபாடுகளும் இருந்தாலும், இராமாயணம் என்னும் உணர்வும், இராமகாதை என்னும் நம்பிக்கையும், இராமபக்தி என்னும் ஊக்கமும், இந்தியர்கள் யாவருக்கும் ஒன்றே! சிம்மாசனத்தில் அமர்ந்து தன்னுடைய கைவிரல்களை நீட்டியும் மடக்கியும் விளையாடிக் கொண்டிருந்தான் இராமன்.
கைவிரலில் அணிந்திருந்த மோதிரம் கழன்று விழுந்து விட்டது. எங்கேயோ கீழே விழுந்து….விழுந்த இடம் பள்ளமாகி…. அப்போதுதான், இராம இராம என்று ஜெபித்துக் கொண்டே உள்ளே நுழைந்த அனுமனிடம், "என் மோதிரத்தை எடு, அனுமா" என்று பணித்தான்.
மோதிரம் விழுவதைக் கண்ணுற்ற அனுமனும், அதை நோக்கிப் பாய, அதற்குள் பள்ளம் ஓட்டையாகிவிட, அந்த மோதிரமோ, அப்படியே உருண்டு, ஓட்டைக்குள் புரண்டு….. விடுவானா அனுமன்? அதுவும் இராம மோதிரம்…. மஹதோர் மஹீயனாகவும் அணோர் அணீயனாகவும் ஆகக்கூடிய வல்லமை கொண்ட அனுமன், தானும் அந்த ஓட்டைக்குள் புகுந்தான். மோதிரம் கீழே கீழே கீழே…… போய்க்கொண்டிருக்க... அனுமனும் பின் செல்ல… பாதாள உலகில் போய் மோதிரமும் விழுந்தது; அனுமனும் விழுந்தான்.
அங்கிருந்த நாகலோகப் பெண்கள், அனுமனை அப்படியே அள்ளித் தூக்கினர். ‘சின்னஞ்சிறு மிருகம் இது; கொண்டு போய் நம்முடைய அரசரிடம் கொடுக்கலாம்’ என்று பொன் தட்டில் வைத்து, எடுத்துச் சென்றனர். ‘இராம இராம’ என்று இடைவிடாமல் ஓதிக்
கொண்டு, தட்டோடு தட்டாக ஒட்டிக் கிடந்த அந்த வானரத்தைக் கண்டவுடன், பூதாகாரமாக இருந்த பாதாள லோக அரசருக்கு ஒரு பக்கம் வியப்பு; இன்னொரு பக்கம் சிரிப்பு. சிரித்துக் கொண்டே, “யார் நீ? என்ன வேண்டும்?” என்றார்.
“நான் இராம சேவகன்; அனுமன் என் பெயர்; என் தலைவனின் மோதிரம் இங்கே வந்துவிட்டது; எடுத்துப் போக வந்தேன்” என்று அனுமன் விடை கூறினான். அகிலமே ஆடிப் போகும்படியாகச் சிரித் தார்; பொன் தட்டிலிருந்து அவனை அப்படியே தூக்கி, இன்னொரு மாபெரும் தாம்பாளத்தில் இட்டார். அந்தத் தாம்பாளம் நிறைய மோதிரங்கள்; நிறைய நிறைய மோதிரங்கள். ஆயிரமாயிரம் மோதிரங்கள்.
“உன் இராம மோதிரத்தை எடுத்துக் கொள், அனுமா!” “எப்படி எடுப்பேன்? எல்லாம் ஒரேபோல் இருக்கின்றனவே. என்னுடைய இராமனின் மோதிரம் எது?” மேலும் நகைத்தார். “எத்தனை இராமன்கள் உண்டோ, எத்தனையெத்தனை இராமா வதாரங்கள் உண்டோ, அத்தனையத்தனை மோதிரங்கள் இங்கு உண்டு. நீ பூலோகத்துக்குத் திரும்பிச் செல்லும்போது, உன்னுடைய இராமன் அங்கிருக்கமாட்டான்.
ஒவ்வொரு இராமாவதாரம் நிறையும்போதும், இராம மோதிரம் கீழே விழும். அல்லது அவனே நழுவவிடுவான். மோதிரங்களைச் சேகரித்து இங்கே வைத்துக் கொள்வேன். போய்வா அனுமா” என்று நீளமாகப் பேசி விடை கொடுத்தார். உண்மைதான். அனுமன் பூலோகம் திரும்பி, அயோத்திக்குச் சென்றபோது, இராமன் அங்கில்லை. குசன் ஆட்சியில் இருந்தான். அருகில் லவன் அமர்ந்திருந்தான். இராம அவதாரம் முற்றுப் பெற்றிருந்தது. இலக்குவனும் இராமனும் பரதனும் சத்ருக்னனும் பூலோகத்திலிருந்து அகன்றிருந்தனர்.
இந்தக் கதையின் உட்பொருள்? இராமா வதாரங்கள் பலப்பல என்பதினும், இராமாயணங்கள் பலப்பல என்பதேயாகும். இராமாயணத்தைக் கதை என்பதைவிட, பாரதத்தின் ஆன்ம இழை எனலாம். இந்திய மக்களின் ஆன்மாக்களையெல்லாம் ஒன்றிணைக்கும் உயிர்மாலை. உள்ளங்களின் நம்பிக்கை, எண்ணங்களின் எழுச்சி, சிந்தனையின் செறிவு. சங்கப்பாடல்களிலேயே, இராமாயணச் சங்கதிகள் உண்டு.
வென்வேள் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல் போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம்போல,
ஒலி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே
மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூற்றின் 70-வது பாடல் வரிகள் இவை. இராமனும் பிற வானர வீரர்களும், ஆலமரம் ஒன்றின்கீழ் அமர்ந்து இலங்கைமீது போரெடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்கின்றனர். மரக்கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள், விவாதத் துக்கு இடையூறு செய்யாவண்ணம், தங்களின் ஒலியை அடக்கிக் கொள்கின்றன.
தலைவிக்குத் தோழி உரைக்கும் வகையில் அமைந்த இப்பாடலில், பறவைகளின் ஒலி அடங்கியதுபோல், ஊராரின் வம்பு வளர்க்கும் வாய் அடங்கியது என்றே தோழி கூறுகிறாள். இராமகாதை நிகழ்ச்சி ஒன்றை, நிகழ்கால நிகழ்ச்சிக்கு மேற்கோளாகக் காட்ட வேண்டுமெனில், இப்படிப்பட்ட கதைச் சம்பவங்கள் பலகாலமாக மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
சீதையை இராவணன் தூக்கிச் சென்றான். தான் அணிந்திருந்த அணிகலன்களைச் சீதை தூக்கியெறிந்தாள். அவை, காட்டுப் பகுதியிலும் மலைப் பகுதியிலும் விழுந்தன. இரலைமலைப் பகுதியில் வாழ்ந்த குரங்குகள் இவ்வணிகலன்களைக் கண்டன.
மனிதர்கள் அணியும் நகைகளைப் பற்றிக் குரங்குகளுக்கு என்ன தெரியும்? கழுத்தில் இடுவதைக் காதிலும், காதில் இடுவதைக் கையிலும், இன்னும் பலப்பல வகைகளிலும் மாற்றி மாற்றி மாட்டிக் கொண்டு அழகு பார்த்தன. இந்தத் தகவலை உரைக்கும் பாடல் ஒன்று, புறநானூற்றில் காணப்படுகிறது.
எஞ்சா மரபின் வஞ்சி பாட, எமக்கென வகுத்த
அல்ல, மிகப்பல,
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை,
தாங்காது பொழி தந்தோனே,
அது கண்டு,
இலம்பாடு உழந்த, என் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவி தொடக்குநரும், செவித்
தொடர் மரபின விரல் செறிக்குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக்குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்,
செம்முகப் பெருங்கிளை இழைப்
பொலிந்தாஅங்கு …………………..
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்னும் அரசன், ஊன்பதி பசுங்குடையார் என்னும் புலவருக்குப் பரிசுப் பொருட்கள் பலவற்றை அளித்தான். அப்பரிசுப் பொருட்களில் பற்பல அணிகலன்கள் இருந்தன. அவை, அரசர்கள் அணியக் கூடியவை.
அவற்றை எவ்வாறு அணிவது என்று அறியாத பசுங்குடையாரின் உறவினர்கள், சீதையெறிந்த நகைகளை மாற்றி மாற்றி அணிந்து கொண்ட குரங்குகளைப் போல், விரலில் இடவேண்டியதைச் செவிகளில் இட்டனர்; செவிகளில் அணியவேண்டியவற்றை விரல்களிலும், இடுப்பில் அணிபவற்றைக் கழுத்திலும் அணிந்து கொண்டனர்.
பரிசுப் பொருட்களை வரையிலாது கொடுத்த அரசனைப் பற்றியும், உறவினர்களின் மகிழ்ச்சி கண்டும் பசுங்குடையார் பாடிய இப்பாடலில் (புறம் 378), இராமாயணக் கதைப் போக்கின் நுணுக்கமான நிகழ்வு ஒன்று ஒப்பிடப் பெறுகிறது என்றால், எந்த அளவுக்கு மக்கள் வழக்கில் இராமகாதை புழங்கியிருக்க வேண்டும்!
(தொடரும்)