விராலிமலையில் ஒரு சிறிய வீட்டில் வெளியுலகத்தால் அறியப்படாத இந்தியாவின் கடைசி சதிராட்ட கலைஞர் முத்து கண்ணம்மாள் வசித்து வருகிறார். வயது 88. கலைத்துறையில் முத்து கண்ணம்மாள் ஆற்றிய பங்களிப்புக்காக 2022-ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.
விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவை செய்த 38 தேவரடியார்களில் இவர் ஒருவர்தான் கடைசி தலைமுறையில் உயிரோடு இருப்பவர். இந்திய அரசின் ஃபிலிம் டிவிஷன் முத்துக்கண்ணம்மாளின் முழுநீள வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குநர் சண்முகநாதன் மற்றும் எடிட்டர் பி.லெனின் ஆகியோரைக் கொண்டு வெளியிட்டுள்ளது.
அண்மையில் இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது அளித்து சிறப்பித்துள்ளது. தேவரடியார்கள் சதிர் ஆட்டத்தை கிருஷ்ணய்யர் என்பவர் மாற்றியமைத்து பரதநாட்டியம் என்ற பெயரில் பலரும் பயில வழி வகுத்தார்.
பாலசரஸ்வதி, ருக்மணி தேவி அருண்டேல் ஆகியோரால் பரதநாட்டியம் மெரு கூட்டப்பட்டு மேன்மையுற்றது. ஆனால் சதிராட்டத்தை முத்துக்கண்ணம்மாள் அதன் தனித் தன்மையோடு காப்பாற்றி வருவதோடு இளம் தலைமுறை யினருக்கும் சதிர் நடனப் பயிற்சியும் அளித்து வருகிறார்.
சென்னையிலிருந்து பிரபல நடன கலைஞர்கள் இவரைத் தேடிவந்து சதிராட்டத்தின் நுட்பங்களை கற்றுக் கொண்டு சென்றிருக்கிறார்கள். “பரதநாட்டியத்துக்கும் சதிர் நடனத்துக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டபோது, “பரதநாட்டியத்தை நட்டுவனார் பாடும்போதுதான் ஆட முடியும்.
ஆனால் சதிர் என்பது பாடிக் கொண்டே ஆடுவது!” என்றார். வயது முதிர்வின் காரணமாக ஆடுவதற்கு உடல் இடம் தராவிட்டாலும், உட்கார்ந்தபடியே குறவஞ்சிப் பாடல்களைப் பாடி அபிநயங்களையும் அடவுகளையும் செய்து காட்டினார். “என் தந்தை ராமச்சந்திர நட்டுவனார்தான் என் குருநாதர். அவர்தான் சதிர் நடனத்தை எனக்கு கற்றுக் கொடுத்தார். ஏழு வயதிலேயே தஞ்சாவூர் பெரிய கோயிலில் என் நடன அரங்கேற்றம் நடந்திருக்கிறது. ஏழுவயதில் விராலிமலை முருகன் கோயிலில் எனக்கு பொட்டு கட்டினர்.
எங்கள் குடும்பத்தை புதுக்கோட்டை மன்னர்கள் ஆதரித்தனர். புதுக்கோட்டை சமஸ்தான கடைசி மன்னராக இருந்த ராஜகோபால தொண்டைமான் மறைவுக்குப் பிறகு இக்கலையை ஆதரிப்பார் இல்லை. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தால் எங்களை வறுமை சூழ்ந்தது. முன்பெல்லாம் கோயில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பார்கள். இப்போது யாரும் அழைப்பதில்லை. வீடு வாசல், நகைகள், ஆபரணங்கள் எல்லாவற்றையும் விற்று சாப்பிட்டாகி விட்டது.
இதோ இந்த சலங்கைதான் மிச்சம்” என்று ஆடிய சலங்கையைகையில் அள்ளிக் காட்டுகிறார். 88 வயதிலும் மஞ்சள் பூசிய முகம் புன்னகையில் சுடர் விடுகிறது. கண்களில் கலையின் பிரகாசம். “விராலிமலை முருகன் கோயிலில் 4 கால பூஜைக்கும் படிகளில் ஏறி இறங்க வேண்டும். மொத்தம் 200 படிகள். எங்க ஐயா தினசரி புதிதாக நலங்கு பாடல்கள் இயற்றி பாடுவார்” என்று பழைய சம்பவங்களை நினைவு கூர்கிறார்.
- thanjavurkavirayar@gmail.com