வாழ்வு இனிது

அன்று ‘போர்’; இன்று ‘திரை’

பெ.சுப்ரமணியன்

வேளாண் தொழிலின் மீது மக்கள் அதீதப் பற்று கொண்டிருந்த போது கால்நடை வளர்ப்பும் அவர்களுக்கு முதன்மைத் தொழிலாக இருந்தது. வேளாண் நிலமற்றவர்கள்கூட கால்நடைகளை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தினர். அதனால் கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல், பிறவற்றை ஆண்டு முழுவதும் பயன் படுத்தும் வகையில் பாதுகாப்பாக வைத்திருக்கும் அமைப்பிற்கு ‘வைக்கோல் போர்’ என்று பெயர்.

உருண்டை வடிவிலாகக் கற்களை வைத்து, அதன் மேல் நீளமான மரம் அல்லது தட்டையைக் குறுக்கும் நெடுக்குமாக வைத்து, அதன்மீது வைக்கோலைக் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்புவர். இவ்வகையில் நெல், வரகு, திணை, சாமை, பயறு வகைப் பயிர்களின் தழை போன்ற பொருட்களைச் சேகரித்து வைத்து, ஆண்டு முழுவதும் பயன்படுத்துவர்.

ஒற்றை எண்ணிக்கையில் கால்நடை வைத்திருந்தாலும் அதற்காகச் சிறிய இடத்தில் இந்தப் பொருட்களைக் கொண்டு போர் வைத்திருந்தனர். முப்பதாண்டுகளுக்கு முன்புவரை பழி தீர்ப்ப தற்காக வைக்கோல் போருக்குத் தீ வைத்து, தங்கள் பழியைத் தீர்த்துக்கொள்வர்.

இவ்வகை போர் அமைப்பின் அடிப்படையில் நீளப் போர் (நீளமான போர்), சுழல் போர் (உருண்டை வடிவப் போர்) என இருவகைப்படும். இந்தப் போர்களை ஒரு குறிப்பிட்ட உயரம் வரை யார் வேண்டுமானாலும் அமைத்து விடலாம். ஆனால், இறுதிக் கட்டத்தை அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே அமைக்க முடியும்.

மழைக் காலத்தின்போது போரின் மேற்பகுதியில் தண்ணீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில் அமைக்கும் இறுதிக் கட்டத்திற்குத் ’தலை கூட்டுதல்’ என்று பெயர். தலை கூட்டுதலைச் செய்வதற்குக் கிராமங்களில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருந்தனர். பெயரளவில் செய்வதற்குப் பலர் இருந்தாலும் ஆண்டு முழுவதும் சேதமின்றி வைக்கோலைப் பயன்படுத்த எண்ணுவோர் தலை கூட்டுதலைப் பக்குவமாகச் செய்வர்.

ஆனால், இன்று இவ்வகை போர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. குறைந்த பரப்பளவாக இருந்தாலும் அறுவடைப் பணிக்கு இயந்திரம்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வரகு, சாமை, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்கள் புழக்கத்தில் சொற்பமாகிவிட்டாலும் நெல் அறுப்பதற்கும், அதனையடுத்து வைக்கோலை உருண்டை வடிவில் சுருட்டுவதற்கும் இயந்திரம்தான் பயன்படுத்தப்படுகிறது.

உருண்டை வடிவிவிலான இவ்வகை வைக்கோல் கட்டுக்குத் ’திரை’ என்று பெயர். அதிகளவில் நெல் பயிரிடும் பகுதிகளில் இருந்து வைக்கோல் திரை கனரக, சிறிய வாகனங்களில் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. கிராமங்களில் வைக்கோல் திரை வியாபாரம் கனஜோராக நடைபெற்றுவருகிறது.

கால்நடைகள் அதிகம் உள்ள கிராமங்களில்கூட இன்று வைக்கோல் போரைக் காண முடிவதில்லை. இவ்வகையான வைக்கோல் திரைதான் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு வேளாண் தொழில் நலிந்துவருவது மட்டுமன்றி, உடலுழைப்பு குறைந்து வருவதும் காரணம்.

SCROLL FOR NEXT