இளமை புதுமை

நான்கு நாள்களில் பாட்டெல்லாம் ரெடி! - காபி வித் சந்தோஷ் தயாநிதி

கார்த்திகா ராஜேந்திரன்

‘இனிமே இப்படித்தான்’ (2015) திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர், சந்தோஷ் தயாநிதி. ‘ராட்டி’, ‘குட்டி பட்டாஸ்’ போன்று தமிழில் சுயாதீன ‘ஹிட்’ பாடல்களுக்கும் இவர்தான் இசை. அண்மையில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படப் பாடல்களுக்கு இசையமைத்த சந்தோஷோடு ஓர் உரையாடல்.

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானோடு பணியாற்றிய அனுபவத்தால் பொதுவாக மதிய வேளையில் வேலையைத் தொடங்குவேன். தனிப்பட்ட வேலைகளை இரவில் பார்த்துவிட்டு, காலையில் தூங்கிவிடுவேன். அதனால், ‘லஞ்ச் டைம்’தான் நமக்கு ‘வேக்-அப் டைம்’.

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - கண்டிப்பாக ‘டயட்’ ஃபாலோ பண்ணுறேன். ஆனால், நேரம் கிடைக்கும்போது ‘ஒர்க்-அவுட்’டும் உண்டு.

தனித்துவமான பழக்கம்? - வேலைன்னு வந்துட்டா அவ்வளவு ‘ஈஸி’யாகச் சோர்வடைய மாட்டேன். நேரத்துக்கு வேலையை முடிச்சிடுவேன். இதுவே என்னைத் தனித்துவமா காட்டும்னு நினைக்கிறேன்.

இந்த வேலை இல்லையென்றால்? - சிறு வயதில் ‘பைலட்’டாக வேண்டுமென்கிற ஆசை இருந்தது. ஆனால், பள்ளியில் படித்தபோதே இசையைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து, இந்தப் பக்கம் வந்துவிட்டேன்.

புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - முன்பு நிறைய சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், ராம் சாரின் வட்டத்துக்குள் வந்ததற்குப் பிறகு புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். அவர் அலுவலகம் புத்தகங்களால் நிரம்பி கிடக்கும்.

பொழுதுபோக்கு? - வண்டியில் ‘டிரைவ்’ செல்வதும், ‘பிளே ஸ்டேஷன்’ ஆடுவதும்.

பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்? - சக இசையமையாளர்கள், பாடகர்களின் படைப்புகளைப் பார்க்கவும், ‘நெட்வொர்க்’கில் இருக்கவும், ஆடியன்ஸோடு உரையாடவும் ‘இன்ஸ்டகிராம்’ பயன்படுத்தத் தொடங்கி விட்டேன்.

பிடித்த பாடல் வரி? - பாப் டிலனின் ‘புளோயிங் இன் தி விண்ட்’ என்கிற பாடலை எப்போது கேட்டாலும் ஏதாவது ஒரு விஷயத்தை அது எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.

பின்பற்றக்கூடிய ‘பாலிசி’? - நம் வேலையைச் சரியாகச் செய்யணும். அப்புறம், ‘Trust the process’.

திரும்பத்திரும்பப் போக விரும்பும் இடம்? - மனதை ‘ரிலாக்ஸ்’ செய்ய சென்னையிலுள்ள பல்வேறு ‘காபி ஷாப்’களுக்கு அவ்வப்போது ‘விசிட்’ அடிப்பேன்.

மறக்க முடியாத தருணம்? - என் ஆதர்ச நாயகன் ஏ.ஆர். ரஹ்மானை முதல் முறை சந்திச்ச தருணமும், ‘பறந்து போ’ படத்துக்காக ‘ராட்டர்டாம்’ திரைப்பட நிகழ்வுக்கு இயக்குநர் ராம் என்னை நெதர்லாந்து அழைத்துச்சென்றதும்.

தமிழ் சுயாதீன இசையைப் பற்றி? - கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சுயாதீன இசை வேறொரு பரிமாணத்தை எட்டியுள்ளது. பாடல் வரிகள், ஒரு பாடலை அணுகும் விதம் போன்றவை மாறுபட்டிருக்கின்றன. தமிழ் ராப் இசைக் கலைஞர்கள் நிறைய அறிமுகமாகியுள்ளனர்.

‘பறந்து போ’ இசையில் என்ன சிறப்பு? - விருது விழாவுக்குப் ‘பறந்து போ’ திரைப்படத்தை அனுப்ப வேண்டி இருந்ததால், பாடல் வரிகள் கைக்குக் கிடைத்த நான்கே நாள்களில் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகளை முடித்து விட்டோம். பட வேலை முடியும்வரை எந்த ஒரு அழுத்தமும் தராமல் எனக்கு ஆதரவாக இருந்தார் இயக்குநர்.

SCROLL FOR NEXT