கிராண்ட் கார்டோன் 
வணிக வீதி

ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் மிகப் பெரிய ரிஸ்க்

இராம்குமார் சிங்காரம்

உலகின் மிகச் சிறந்த தன்முனைப்புப் பேச்சாளர்களில் ஒருவர், கிராண்ட்கார்டோன் (Grant Cardone). சிறந்த எழுத்தாளர், தொழில் முனைவர், முதலீட்டாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர், இந்த அமெரிக்கர்.

டொயோட்டோ, மார்கன் ஸ்டான்லி, நிசான், கூகுள், ஜி.எம்., உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். SELL OR BE SOLD, IF YOU ARE NOT FIRST, YOU'RE LAST, THE 10X RULE உள்ளிட்ட விற்பனையில் சாதனை படைத்த 8 நூல்களை எழுதி இருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் இதழால் வெளியிடப்படும் - அதிக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இவரது நூல்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மிகச்சிறந்த 20 பொன்மொழிகளை இங்கே உங்களுக்காகத் தொகுத்து தந்துள்ளோம்.

* வெற்றி என்பது யாரோ சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.... அதற்குரிய உழைப்பைக் கொடுத்தால் யார் வேண்டு மானாலும் அதற்கு உரிமை கொண்டாடலாம்.. நீங்கள் உட்பட!
* வாழ்க்கையில் இரண்டே நிலைகள்தான் உள்ளன. சராசரியாக மடிவது.. அல்லது வளர்ச்சி பெற்று வாழ்வது.. இதில் எது உங்களுக்கு சம்மதம்?
* உங்கள் வளர்ச்சிக்காக நேரத்தையும், பணத்தையும் நீங்கள் முதலீடு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் உங்களிடம் பணமும் இருக்காது.. உங்களுக்கான நேரமும் தோன்றாது.
* முதலில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம்.
* ‘இதுவே போதும்' என்ற எண்ணம் கொண்டவர்கள், ஒருபோதும் முன்னேற முடியாது. சிறையில் வாழ்வதை விடக் கொடுமையானது, அந்த முன்னேற்றமற்ற வாழ்க்கை.
* பொருளாதாரம் எப்போதும் பிரச்சினை இல்லை. அப்படி நினைக்கும் உங்கள் மனம்தான் பிரச்சினை.
* பணக்காரர்கள் ஏதோ ஒரு விபத்து போன்று பணக்காரர்கள் ஆகிவிடுவதில்லை. அதுபோல் ஏழைகளும் எதிர்பாராத நிகழ்வால் ஏழைகளாகவே இருந்து விடுவதில்லை. எல்லாவற்றுக்குப் பின்னாலும் கடுமையான உழைப்பும், உழைப்பின் மீதான மறுப்பும் இருக்கிறது.
* உங்கள் மதிப்பு என்பது நீங்கள் உங்கள் மீது செய்த முதலீட்டைப் பொறுத்தே அமைகிறது.
* வெளியேறியவரிடமிருந்து ஆலோசனை கேட்காதீர்கள்.
* பணக்காரர்கள் பணத்துக்காக வேலை பார்ப்பதில்லை. பணத்தை அவர்களுக்காக வேலை பார்க்க வைக்கிறார்கள்.
* முயற்சி என்ற ஒற்றைச் சொல்லே, வெற்றி பெற்றவருக்கும், தோல்வியடைந்தவருக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம்.
* ஊதியம், உங்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்பதற்காகத் தரப்படுவதில்லை. அதை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதற்காகவே தரப்படுகிறது.
* தோல்வி என்பது வெற்றியின் எதிர்மறை நிகழ்வு அல்ல. வெற்றியின் ஒரு பகுதியே. உழைப்பவருக்கு இரண்டும் ஒன்றுதான்.
* நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொடர் உழைப்பாளராக இருந்தால் போதும். வெற்றியை எட்டிப் பிடிக்கலாம்.
* புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கு, உகந்த நேரம் என்று எதுவும் கிடையாது. முதலில் தொடங்கி விடுங்கள். பிறகு உகந்த நேரத்தை உருவாக்குங்கள்.
* உங்கள் பிரச்சினை, ஒரு பிரச்சினையே இல்லை. எப்படி
எதிர்கொள்கிறீர் என்பதில்தான் அடங்கியிருக்கிறது, பிரச்சினை.
* எல்லோரையும் போல், ஒரே நேர்க்கோட்டில் சிந்திப்பதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு.
* வெற்றியாளர்கள், போட்டி போடுவதில்லை. களத்தை ஆளுமை செய்கிறார்கள்.
* 'எங்கே வேண்டுமானாலும் இட்டுச் செல்லட்டும்' என்ற தைரியத்தோடு, ஒவ்வொரு சூழலையும் அணுகுங்கள்.
* ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான், இருப்பதிலேயே மிகப் பெரிய ரிஸ்க்.

- rkcatalyst@gmail.com

SCROLL FOR NEXT