பெண் இன்று

மறுமணத்தை ஏற்கும் மனம் வேண்டும் | உரையாடும் மழைத்துளி 30

தமயந்தி

எனக்குத் தெரிந்த ஒரு பெண் சமீபத்தில் மறுமணம் செய்துகொண்டார். மறுமணத்துக்கு முன்பு வரை அவருடைய உறவினர்களும் நண்பர்களும், “அவ நல்ல பொண்ணு; பாவம் அவளுக்குக் கல்யாண வாழ்க்கை சரியா அமையல” என்றெல்லாம் பரிதாபப்பட்டு, அக்கறைப்பட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், விவாகரத்து ஆன ஒருவரை அந்தப் பெண் திருமணம் செய்துகொண்டார் என்று தெரிந்தவுடன் அவரைப் பற்றி மிக மோசமாக இகழ்ந்து பேசினார்கள். “இந்த வயசுல கல்யாணம் தேவையா? ஒரு வயசுக்கு அப்புறம் எல்லாத்தையும் அடக்கத் தெரியாதா?” என்றெல்லாம் அவரைக் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சொற்கள் அந்தப் பெண்ணின் காதுகளுக்குச் சென்று அவரைக் காயப்படுத்திவிடக் கூடாது என நினைத்துக்கொண்டேன்.

அந்நியமாகும் உறவுகள்: திருமணமான பெண்கள் அந்தத் திருமண உறவில் இருந்து வெளியே வரும்போது சந்திக்கக்கூடிய நூறாயிரம் கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் இந்தச் சமூகத்தில் கண்டெடுக்கப்படவில்லை. பெண்களில் சிலர் தாங்கள் பிறந்த வீட்டிலேயே மிகவும் கேவலப்படுத்தப்பட்ட ஒரு நிலையில்தான் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து ஆகி பிறந்த வீட்டுக்கு வரக்கூடிய தங்களுடைய சகோதரி, குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கற்றவள் என்பதுபோல நேரடியான குற்றச்சாட்டுகளை அவர்களின் உடன் பிறந்தவர்களே வைக்கும் தருணங்களை நான் கண்டிருக்கிறேன். ஒரு பெண் திருமண உறவில் இருந்து விலகுவது என்பது அவளுடைய மனரீதியான பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்வதைப் போல ஆகிவிடுகிறது. திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டின் சொந்தங்கள் என்று தான் கருதிய உறவுகள் எல்லாம் கைவிட்டுப் போன பிறகு, தான் பிறந்து வளர்ந்த வீட்டிலும் தனக்கான எந்த வேரும் இல்லாமல் போகும் மனரீதியான அழுத்தம் அந்தப் பெண்களை வதைக்கும். இதைப் புரிந்துகொள்ளாமல் பல குடும்பங்கள் அந்தப் பெண்ணை ஒதுக்கி வைப்பதன் மூலமாக அவள் இன்னும் தன்னில் இருந்தே அந்நியப்பட்டுக் கொள்கிறாள்.

இதிலிருந்து விடுபடுவதற்காகக்கூட ஒரு பெண் மறுமணம் செய்துகொள்ளும் சாத்தியங்கள் இருக்கின்றன. இன்றைய காலக்கட்டத்தில் நகரங்களில் அதிகரித்துவரும் மறுமணங்கள் குறித்து பெரிதான சலசலப்புகள் வருவதில்லை. ஆனால், சிறு நகரங்கள், கிராமங்களில் பெண்களின் மறுமணம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி விடுகிறது. குறிப்பாக 40 வயதைத் தாண்டிய ஒரு பெண் மறுமணம் செய்துகொண்டால், அதைக் கொச்சைப்படுத்தும் மனநிலை பலருக்கு உண்டு.

சமூக அழுத்தம்: திரையுலகப் பிரபலங்கள் மறுமணம் செய்துகொள்ளும்போது, அதை மணிக்கணக்கில் வியந்து பேசுபவர்கள், தங்கள் குடும்பத்தில் அது போல ஒன்று நிகழும்போது அந்தப் பெண்ணை மிகவும் மோசமாக நடத்துவதும் உண்டு. இவர்களது அணுகுமுறை அந்தப் பெண்ணை மறுமணம் புரிந்துகொண்ட கணவருக்கு அந்தப் பெண் குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பக்கூடும். இப்படித் திரும்ப ஆரம்பிக்கும் உறவுகளும் நீர்த்துப்போகும் அளவுக்கு வெளி உலகத்தின் அழுத்தங்கள் அதிகமாவதையும் மறுக்க இயலாது.

குழந்தையுடன் இருக்கும் ஆண்கள் மறுமணம் செய்துகொள்ளும் சதவீதத்தை விடவும் குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் சதவீதம் குறைவு. இதற்கு முக்கியக் காரணம் அத்தகைய அர்ப்பணிப்பை ஓர் உறவின் மூலமாகக் கொடுப்பதற்கு பல ஆண்களுக்கு மனமில்லை. திருமணம் முடிந்து குழந்தையுடன் இருக்கும் ஓர் ஆணைத் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு மணம் முடிக்கக்கூடப் பல குடும்பங்கள் முன்வருகின்றன. ஆனால், திருமணம் முடிந்து குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்ணை மணம் பேசி முடிக்கக் குடும்பங்கள் ஒப்புக்கொள்வது மிக மிகக் குறைவு.

மாற்றம் தேவை: இவையெல்லாம் எத்தகைய மாற்றங்களைச் சமூகத்தில் ஏற்படுத்திவிட முடியும் என்று விதண்டாவாதமாகப் பலர் பேசுகிற ஒரு சூழலில், மாற்றங்கள் என்பவை ஒரு நாளில் மலர்பவை அல்ல என்பதை மிகத் தெளிவாக அடிக்கோடிட்டு வாதிட வேண்டும். தொடர்ந்து அவர்களுடன் வாதிடுவதும் உரையாடுவதும்தான் இத்தகைய மனநிலை மாற்றங்களை உருவாக்கும். மனநிலையில் மாற்றங்கள் உருவாகும்போதுதான் சமூகத்தில் மாற்றங்கள் நிகழும். இருவர் சேர்ந்து வாழ்வது என்பது அவர்கள் வாழ்வு சார்ந்து அவர்கள் எடுத்த முடிவு என்கிற மதிப்பையும் மரியாதையையும் இந்தச் சமூகம் தனிப்பட்ட நபர்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் கௌரவக் கொலைகள்கூடக் காலாவதியாகும்.

(உரையாடுவோம்)

SCROLL FOR NEXT