உறங்கி எழுந்ததும் வாயில் உண்டாகும் துர்நாற்றம், பல் தேய்த்த பிறகும் நாள் முழுவதும் தொடர்கிறது எனில், உங்கள் உடலை உடனடியாகக் கவனிக்க வேண்டியது அவசியம். நம் வாயிலிருந்து வரும் துர்நாற் றத்தை இன்னொருவர் உணர்ந்து சொல்லும் போதுதான் பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்கிறோம். நம் உடலில் ஏதோ ஒரு விஷயம் சரியில்லை என்பதை உணர்த்தும் குறிப்பே வாய் துர்நாற்றம்.
வாய் துர்நாற்றத்துக்குப் பல்வேறு அடிப்படைக் காரணங்கள் இருப்பி னும், வாய் சுகாதாரமின்மை (Poor oral hygiene) முக்கியக் காரணமாகிறது. கண்ணாடியில் முகத்தைப் பார்த்து ரசிக்கும் நாம், நம் பற்களிலும் வாய்ப் பகுதியிலும் (Oral cavity) ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம்.
சொத்தைப் பல், பல் ஈறு நோய்கள், வாய்ப்புண் போன்றவை ஏற்பட்டு, அதனால் வாய் துர்நாற்றம் உண்டான பிறகுதான், வாய் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். பற்பசை மூலம் பற்களைத் தேய்த்த பிறகு, சரியாக வாய் கொப்பளிக்காவிட்டாலும் வாய்ப் புண்ணும் வாய் துர்நாற்றமும் ஏற்படலாம்.
வேறு காரணங்கள்: எதிர்க்களித்தல் தொந்தரவு (Gastroesophageal reflux disease), வயிற்றுப் புண் (அல்சர்), கல்லீரல் நோய், நுரையீரல் பாதைத் தொற்று, டான்சிலைடிஸ், சைனஸைடிஸ், சில வகையான புற்றுநோய்கள், சிறுநீரகப் பாதிப்பு, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு போன்ற நோய் நிலைகளிலும் வாய் துர்நாற்றம் உண்டாகலாம்.
அதற்காக வாய் துர்நாற்றம் ஏற்பட்டதும் ‘நமக்குப் புற்று நோயாகத்தான் இருக்கும்… கல்லீரல் பாதிப்பாகத்தான் இருக்கும்…’ எனப் பதற்றப்பட வேண்டியதில்லை. முதன்மைக் காரணம் வாய் சுகாதாரம் சார்ந்ததாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.
நீரிழிவு நோயும் வாய் துர்நாற்றமும்: நீரிழிவு நோயாளர்களில் கணையத் திலிருந்து இன்சுலின் சுரப்பு போதுமான அளவு இல்லாதபோது, உடல்செல்களால் குளுகோஸை ஆற்றலாகப் பயன்படுத்த முடியாது. அந்நிலையில் கொழுப்பிலிருந்து உடல்செல்கள் ஆற்றலை உரிமை யோடு எடுத்துக்கொள்ளும். கொழுப்பு உடைபடும்போது, கீட்டோன் அமிலங்கள் ரத்தத்தில் அதிகளவில் கலக்கும். இந்த கீட்டோன்கள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
வாய் துர்நாற்றத்தோடு சேர்ந்த சில அறிகுறிகளை ’கீட்டோ- அசிடோஸிஸ்’ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. குறிப்பாக, டைப்-1 நீரிழிவு நோயாளர்களில் இதைப் பார்க்க முடியும். சில வகையான மருந்துகள் கிருமிநாசினி செய்கையுடைய எச்சில் சுரப்புகளைக் (Salivary secretions) குறைத்து, வாய்ப் பகுதியில் வறட்சியை உண்டாக்கி (Xerostomia), கிருமிகள் மையமிடுவதற்கு வழிவகுக்கும். இதன் காரணமாகவும் வாய் துர்நாற்றம் உண்டாகலாம்.
துர்நாற்றம் நீக்க... வாய் சுகாதாரமின்மை சார்ந்து உண்டாகும் வாய் துர்நாற்றத்தைத் (Intra oral halitosis) தடுக்க, தினமும் இருவேளை பல்துலக்குவது அவசியம். அவ்வப்போது துவர்ப்புச் சுவைமிக்க இயற்கையான பற்பொடி களைப் பயன்படுத்த, வாய்ப்புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் பல்ஈறுகளும் பலம் அடைந்து, ஈறுகளில் ஆரோக்கிய மின்மை காரணமாக ஏற்படும் வாய் துர்நாற்றத்துக்கான சூழலும் மறையும்.
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். உணவுப் பொருள்கள் பற்களுக்கு இடையில் சிக்கி, பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து துர்நாற்றம் உருவெடுக்க நாமே வழி அமைத்துக் கொடுக்கக் கூடாது. பல் துலக்கும்போது, பற்களோடு சேர்த்து, ஈறுகள் மற்றும் நாக்குப் பகுதி களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
வாய்ப் பகுதிக்குள் வேறு ஏதேனும் புண்கள் தென்படுகின்றனவா, ஈறுகளில் இருந்து ரத்தக் கசிவு இருக்கிறதா, கிருமிகளின் தாக்கமின்றி பற்கள் நலமாக இருக்கின்றவா என்பதைத் தினமும் கண்காணிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடித்து, உடலை நீரூட்டத்துடன் வைத்திருப்பதும் அவசியம்.
லவங்கப்பட்டை, கிராம்பு, கடுக்காய்ப் பொடி கலந்த பற்பொடியை அவ்வப்போது பயன்படுத்தலாம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தை, அரைஸ்பூன் எடுத்துக்கொண்டு, மிதமான வெந்நீரில் கலந்து தினமும் இரு வேளை வாய் கொப்பளிக்கலாம். பற்பொடியாகவும் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம். புதினா இலைகளை நன்றாக மென்று சாப்பிடலாம். வேப்பங்குச்சியைக் கொண்டு நாவினைச் சுத்தம் செய்வது அவசியம்.
தாம்பூலம்: ஏலக்காய், சாதி பத்திரி, கிராம்பு, காய்ச்சுக்கட்டி என மூலிகைத் தொகுப் பைத் தாம்பூலமாக அவ்வப்போது தரிக்க, செரிமானம் அதிகரிப்ப தோடு, வாயில் நல்ல வாசனையும் உண்டாகும். எச்சில் சுரப்பை அதிகரித்து நாவறட்சி ஏற்படாமல் இருக்க தாம்பூலம் தரிக்கும் முறை உதவும்.
எச்சில் சுரப்பை அதிகரிக்க மிளகைப் பொடித்து வைத்துக் கொண்டு, ஐந்து சிட்டிகை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். நாவறட்சித் தொந்தரவு இருப்பவர்கள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அக்கரகாரம் எனும் மூலிகைத் துண்டை வாயில் வைத்துக்கொள்ள, எச்சில் சுரப்பு உடனடியாக அதிகரிக்கும்.
சிறிது அதிமதுரத்தையும் வாயில் அடக்கிக்கொள்ள வாய் துர்நாற்றம் மறையும். எகிப்து நாட்டில் ஏலம், லவங்கப்பட்டை, கிராம்பு போன்ற நறுமணமூட்டிகள் ஊறிய நீரை, ‘மவுத்-பிரெஷ்னராகப்’ பயன்படுத்தியதற்கான ஆதாரம் இருக்கிறது. ‘மாசிக்காய் எண் ணெய்’ எனும் சித்த மருந்து வயிற்றுப் புண் காரணமாக ஏற்படும் வாய் துர்நாற்றத்துக் கான அற்புதத் தேர்வு. மாசிக்காயின் துவர்ப்பு புண்களை ஆற்றும். மோரில் அடித்த கற்றாழைக் கூழும் வயிற்றுப் புண்களை மட்டுப்படுத்தி, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.
சீரகம், சப்ஜா விதைகள், சோம்பு ஆகிய வற்றை வாயில் போட்டு மென்று சாப்பிட உடனடி யாக வாய் துர்நாற்றம் மறையும். ஆனால் இது தற்காலிக நிவாரணியே. வாய் துர்நாற்றத்துக்கான காரணம் வாய்ப் பகுதி இல்லை எனில், மருத்துவரைச் சந்தித்து அடிப்படை காரணத்தை அறிவது முக்கியம். நீண்ட நாள்களாக மலக்கட்டு தொந்தரவு இருப்பின், அதை நிவர்த்தி செய்ய முயல வேண்டும்.
எதிர்க்களித்தல் தொந்தரவு இருப்பின், நமது உணவு முறை, வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும். சிறிது நாள்களுக்கு அசைவ உணவு வகைகளுக்குத் தடை விதிக்கலாம். நீரிழிவு நோயாளர்கள் சர்க்கரையின் அளவை முறையாகக் கண்காணிப்பது முக்கியம். எந்தக் காரணத்தைக் கொண்டும் புகையும் மதுவும் கூடாது.
மருந்தகங்களில் கிடைக்கும் மவுத்-வாஷ் தற்காலிகமாக உங்கள் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கலாம். ஆனால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான மூலக் காரணி என்னவென்பதை அறிந்து மருத்துவம் மேற்கொண்டால், உங்கள் வாயிலிருந்து மீண்டும் சுகந்தம் பரவத் தொடங்கும். தினமும் நமது வாய் சுகந்தத்தைச் சோதித்துப் பார்த்து முன்னெச்சரிக்கையாக இருப்பது நமக்கு மட்டுமல்ல, நம்மோடு உரையாடுபவர்களுக்கும் நல்லது.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; drvikramkumarsiddha@gmail.com