அகமதாபாத்தில் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி: 5-வது முறையாக பட்டம் வெல்லுமா சிஎஸ்கே?

By செய்திப்பிரிவு

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், இந்த சீசனில் லீக் சுற்றில் 20 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற தகுதி சுற்று-1 ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கேவிடம் தோல்வி கண்டிருந்தது. எனினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டெழுந்து தகுதி சுற்று-2-ல், லீக்கின் வெற்றிகரமான அணியும் 5 முறை சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸை தனது சொந்த மைதானத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி சுற்றில் வலுவாக கால்பதித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுவது குஜராத் அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐபிஎல் தொடரை முதல் இரு முயற்சிகளில் தொடர்ச்சியாக வென்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கும். கடந்த 4 ஆட்டங்களில் 3 சதங்களை விளாசி உள்ள தொடக்க வீரரான ஷுப்மன் கில், சிஎஸ்கே பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரித்திமான் சாஹா, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், சாய் சுதர்சன் ஆகியோரும் பேட்டிங்கில் தேவையான நேரங்களில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதேவேளையில் பந்து வீச்சிலும் குஜராத் அணி வலுவாக திகழ்கிறது. இந்த சீசனில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் மொகமது ஷமி, ரஷித் கான், மோஹித் சர்மா ஆகியோர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஷமி பவர்பிளேவிலும், ரஷித் கான் நடு ஓவர்களிலும், மோஹித் சர்மா இறுதிக்கட்ட ஓவர்களிலும் விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்துபவர்களாக திகழ்கின்றனர். இவர்களுடன் நூர் அமகது, ஜோஷ்வா லிட்டில் ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இந்த பந்து வீச்சு கூட்டணி சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே 5-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அதிக பட்டங்களை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சிஎஸ்கே சமன் செய்யும். வழக்கம் போன்று இம்முறையும் இளம் வீரர்களின் திறனை தோனி நன்கு பட்டை தீட்டி வைத்துள்ளார்.

பேட்டிங்கில் டேவன் கான்வே நிலையான தொடக்கம் கொடுக்கும் நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மட்டையை சுழற்றுபவராக உள்ளார். ஷிவம் துபேவின், சிக்ஸர்கள் விளாசும் திறனும் அணிக்கு பலம் சேர்க்கிறது. அஜிங்க்ய ரஹானே, மொயின் அலி, அம்பதி ராயுடு ஆகியோருக்கு பேட்டிங்கில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளில் தங்களது பங்களிப்பை வழங்கி உள்ளனர்.

இவர்களுடன் தோனியின் கேமியோவும் இறுதி பகுதியில் வலுசேர்க்கிறது. ரவீந்திர ஜடேஜாவும் பேட்டிங்கில் பார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. பந்து வீச்சை பொறுத்தவரையில் தொடக்க ஓவர்களில் தீபக் சாஹரின் ஸ்விங், எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உள்ளது. நடுஓவர்களில் தீக்சனா, ரவீந்திர ஜடேஜா ரன் குவிப்பை கட்டுப்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இறுதி ஓவர்களில் மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் குஜராத் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யக்கூடும்.

ரூ.20 கோடி பரிசுத் தொகை: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும் வழங்கப்படும். 3-வது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 7 கோடியையும், 4-வது இடம் பிடித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரூ.6.50 கோடியும் பெற உள்ளன.

இசை மழை...: ஐபிஎல் தொடக்க விழாவை போன்று இறுதிப் போட்டிக்கு முன்னதாகவும் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில் அதற்கு முன்னதாக பிரபல பாடகர்கள் கிங், டிஜே நியூக்ளியா, டிவைன், ஜோனிடா காந்தி ஆகியோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்