சென்னை: முழு உடல் தகுதியை எட்டியுள்ளதால், 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் விளையாடத் தயார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரரும், இந்திய கிரிக்கெட் அணி வீரருமான தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் தீபக் சாஹர். இவரை ரூ. 14 கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் விளையாடவில்லை.
அதேபோல் காயம் காரணமாககடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும் தீபக் சாஹர் இடம்பெற முடியாமல் போனது. காயத்தால் அவதிப்பட்டுவந்த தீபக் சாஹர் சிகிச்சைக்கு பின்னர்தற்போது பூரண குணமடைந்துள்ளார். மேலும், அவர் முழு உடல் தகுதியையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2 பெரிய காயங்களில் இருந்துமீண்டு வந்துள்ளேன். உடல் தகுதிக்காக கடந்த 3 மாதங்களாக கடுமையாக உழைத்துள்ளேன். வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்காக முழுமையாகத் தயாராகி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.