முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இந்தத் தோல்வியின் மூலம் நடப்பு ஆண்டில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ளது பாகிஸ்தான்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் கடந்த 9-ம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடின. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.
முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 281 ரன்களும், பாகிஸ்தான் 202 ரன்களும் முதல் இன்னிங்ஸில் எடுத்தன. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. அந்த அணி சார்பில் ஹாரி ப்ரூக் 108 ரன்கள் எடுத்திருந்தார்.
355 ரன்களை சேஸ் செய்த பாகிஸ்தான்: அதன் காரணமாக 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி விரட்டியது. இந்த இலக்கை சேஸ் செய்தால் அதன்மூலம் பாகிஸ்தான் அணி வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அந்த அணி. அதிகபட்சமாக ஷகில் 94 ரன்கள் எடுத்திருந்தார்.
இன்றைய ஆட்டம் தொடங்கியபோது பாகிஸ்தான் அணி வெற்றி பெற 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. இரு அணிகளும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. இறுதியில், அந்த முயற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி கிட்டியது.
ராபின்சன், ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் என மூவரும் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து. இந்தத் தொடரில் தோல்வியை தழுவியுள்ளதால் 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது.