அர்ஜென்டினா அணியினர் | கோப்புப்படம் 
விளையாட்டு

ஃபிஃபா WC | நட்சத்திர விடுதிக்கு பதிலாக கத்தார் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள மெஸ்ஸி & அர்ஜென்டினா அணியினர்

Ellusamy Karthik

நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வகையில் கத்தார் நாட்டில் லேண்ட் ஆகியுள்ளது அர்ஜென்டினா அணி. பெரும்பாலும் முக்கிய தொடர்களில் விளையாடும் அணிகள் நட்சத்திர விடுதியை தான் வீரர்கள் தங்க தேர்வு செய்யும். ஆனால், அர்ஜென்டினா அணி கத்தார் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.

1930, 1978, 1986, 1990 மற்றும் 2014 என 5 முறை உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா விளையாடி உள்ளது. அதில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த முறை அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும் என தெரிகிறது. அதனால் இந்த முறை கோப்பையை உறுதி செய்வதில் அர்ஜென்டினா உறுதியாக இருக்கும் என்றே தெரிகிறது.

அதற்காக அந்த அணி வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கத்தார் பல்கலைக்கழகத்தில் தங்கும் இந்த ஏற்பாடும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் இடம் மற்றும் தங்கும் இடம் என இரண்டுக்கும் வெறும் 100 மீட்டர் தான் தூரமாம்.

ஏன் கத்தார் பல்கலைக்கழகத்தில் அர்ஜென்டினா அணி முகாமிட்டுள்ளது?

  • முதல் தரமான இன்டோர் மற்றும் அவுட்டோர் பயிற்சி வசதிகள் இங்கு அமைந்துள்ளதாம்.
  • முக்கியமாக இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொள்ள விளக்கு வசதிகள் உள்ளதாம். அதோடு உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள மைதானத்தில் இருக்கும் புல் தரையை போலவே இங்கு புற்கள் உள்ளதாம்.
  • 10 ஆயிரம் பார்வையாளர்கள் இந்த பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறும் போட்டியை பார்க்க முடியுமாம்.
  • மசாஜ் செய்து கொள்ள அறைகள், வழிபாட்டு அறை, சமையல் அறை, உடற்பயிற்சி கூடம், வீடியோ ரூம்ஸ், மருத்துவ வசதி, நிர்வாக அலுவலகங்கள், நீச்சல் குளம் போன்ற ஏற்பாடுகள் வீரர்களுக்காக தயாராக உள்ளதாம்.
  • பெரிய படுக்கைகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் கொண்ட அறைகளும் வீரர்கள் தங்க தயாராக உள்ளதாம்.
  • முக்கியமாக அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி பார்பிக்யூ சமைக்கும் வசதிகளும் உள்ளதாம். அதற்கான சமையல் கலைஞர் அங்கு ஏற்கனவே சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அந்த பார்பிக்யூ கூட மாட்டிறைச்சியை கொண்டுதான் அவர்கள் நாட்டில் அதிகம் சமைப்பார்களாம்.
  • இந்த பல்கலைக்கழக வளாகம் சுமார் 8.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதே இடத்தில் ஸ்பெயின் அணி தங்குவதாகவும் தகவல்.
SCROLL FOR NEXT