நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இங்கிலாந்து அணி. இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை என இரண்டையும் கைவசம் வைத்துள்ள முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. இந்த இரண்டு தருணங்களிலும் இங்கிலாந்து அணிக்கு மேட்ச் வின்னராக ஜொலித்தவர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.
இதே ஸ்டோக்ஸ் தான் கடந்த 2016 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பந்து வீசி இருந்தார். அப்போது இங்கிலாந்து அணி ஆட்டத்தை இழந்தது. அந்த வீழ்ச்சியின் அவர் தான் களத்தில் இருந்தார். இதோ ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அணியின் உலகக் கோப்பை வெற்றிக்கு காரண கர்த்தா ஆகி உள்ளார். 2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனும் இவர்தான்.
31 வயதான ஸ்டோக்ஸ் கடந்த 2011 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இடது கை பேட்ஸ்மேன், வலது கை பந்து வீச்சாளரான இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 8938 ரன்கள் குவித்துள்ளார் மற்றும் 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் உள்ளார். அதே நேரத்தில் கடந்த ஜூலை வாக்கில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அதிரடியாக அறிவித்தார். இடையில் சில காலம் காலவரையின்றி ஓய்வும் எடுத்துக் கொண்டார்.
2016 டி20 உலகக் கோப்பை: இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 155 ரன்களை குவித்தது. 156 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி விரட்டியது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அப்போது இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் வீசி இருந்தார். வரிசையாக நான்கு சிக்சர்களை பறக்க விட்டார் பிராத்வெயிட். அதனால் அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் ஆனது. மறுபக்கம் ஸ்டோக்ஸ் அப்படியே களத்தில் இடிந்து உட்கார்ந்தார்.
2022 டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. ஆனால் 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்தார் ஸ்டோக்ஸ்.
பலமான பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்த்து நிதானமாக விளையாடினார் ஸ்டோக்ஸ். மறுபக்கம் கேப்டன் பட்லர் வெளியேறினார். ஹாரி ப்ரூக் உடன் 39 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். மொயின் அலியுடன் 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதோடு டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இங்கிலாந்து அணிக்கு கோப்பையை உறுதி செய்த வெற்றிக்கான ரன்கள் அவரது பேட்டில் இருந்து வந்தது. இதன் மூலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இழந்ததை வென்று கொடுத்துள்ளார். இந்த போட்டியில் மொத்தம் 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார் அவர்.
“இறுதிப் போட்டியில் சேஸிங் செய்யும் போது அதற்கு முன்பு களத்தில் மேற்கொண்ட கடின உழைப்பை மறந்து விடுகிறோம். ரஷீத் மற்றும் சாம் கர்ரன் என இருவரும் அற்புதமாக பந்து வீசி இருந்தனர். இந்த ட்ரிக்கி விக்கெட்டில் எதிரணியை 130 ரன்களுக்குள் கட்டுப்படுத்த விரும்பினோம். அதை செய்யவும் முடிந்தது. மறுபக்கம் அயர்லாந்து எங்களை வெற்றி பெற்ற போது நாங்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். அதை சரி செய்தோம். அவ்வளவுதான்” என வெற்றிக்கு பிறகு ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார்.