டி20 கிரிக்கெட் உருவானது எப்படி?

By செய்திப்பிரிவு

டி 20 கிரிக்கெட் உதயமாகி 20 வருடங்கள் ஆகின்றன. ஒரு இலகுவான பக்க விளையாட்டாக நடத்தப்பட்ட இந்த ஆட்டம் தற்போது உலகளாவிய அளவில் செல்வம் கொழிக்கும் விளையாட்டாக அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.

ரசிகர்களை மகிழ்விக்கும் விளையாட்டாக உருமாறியுள்ள டி 20 கிரிக்கெட் உருவான விதம் சுவாரஸ்யமானது. கடந்த 2002-ம் ஆண்டு புகையிலை விளம்பரங்கள் மீதான தடை காரணமாக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை பெரிய அளவில் சிக்கலை சந்தித்தது.

அப்போதுதான் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் வணிகப்பிரிவு மேலாளர் ஸ்டூவர்ட் ராபர்ட்சன், அமெச்சூர் மற்றும் ஜூனியர் அளவில் நடத்தப்பட்டு வரும் டி 20 கிரிக்கெட் போட்டியை முன்மொழிந்தார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை காணநேரம் இல்லாத இளம் ரசிகர்களை ஈர்ப்பதே டி 20 கிரிக்கெட்டின் நோக்கமாக இருந்தது. முதல் அதிகாரப்பூர்வ டி 20 கவுண்டி கிரிக்கெட் போட்டி 2003-ம் ஆண்டு நடந்தது. பெருவாரியான கூட்டத்தை ஈர்ப்பதில் இந்த ஆட்டம் உடனடி வெற்றியையும் கண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் மிடில்செக்ஸ் - சர்ரே அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை காண 27 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர்.

கிரிக்கெட் தாயகமான இங்கிலாந்தில் கடந்த 1953-ம் ஆண்டு நடைபெற்ற கவுண்டி அளவிலான ஒருநாள் இறுதிப் போட்டியை காண வந்த பெரும் கூட்டத்தை இதைவிட அதிகமாக இருந்தது. வெறித்தனமான வேகம் மற்றும் பேட்ஸ்மேன்களின் சுறுசுறுப்பான தாக்குதல் ஆட்டம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே பிரபலமானது.

இதன் தொடர்ச்சியாக 2005-ம் ஆண்டு ஆக்லாந்தில் முதன்முறையாக சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதைத் தொடர்ந்து டி 20 கிரிக்கெட்டின் வளர்ச்சியை கண்டு பிரம்மித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடத்தியது. இதில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி பரம வைரியான பாகிஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. இதைத் தொடர்ந்து டி 20 கிரிக்கெட் போட்டி பெரும்பாலான சுற்றுப்பயணங்களில் நடத்துவது வாடிக்கையாக மாறியது.

1983-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு பெருவாரியான மக்கள் தொகை கொண்ட நம்நாட்டில் விளையாட்டின் மீதான அணுகுமுறை மாறியது. அதே சமஅளவிலான மாற்றம் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையை கைப்பற்றிய போதும் நிகழ்ந்தது.

2007-ம் ஆண்டு வெற்றியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. இதன் விளைவாகவும், இந்தியாவில் துளிர்விட ஆரம்பித்த ஐசிஎல் போட்டியை உருக்குலையச் செய்யும் விதமாகவும் உருவானதுதான் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர். திட்டமிட்டபடி ஐசிஎல் போட்டியை முடிவுக்கு கொண்டுவந்ததுடன், கிரிக்கெட்டின் உலகளாவிய சூழலை மாற்றியது, 6 வார காலத்தில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர். வீரர்கள் பண மழையில் நனைந்தனர். மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், வங்கதேசத்தில் டி 20 லீக்குகள் உருவெடுத்தன. அடுத்த ஆண்டில் தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்காவிலும் டி 20 கிரிக்கெட் லீக்குகள் பெரிய அளவில் தொடங்கப்பட உள்ளன.

இதுஒருபுறம் இருக்க ஐபிஎல் டி 20 போட்டிகளின் தாக்கம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் காலண்டரையும் அசைத்து பார்க்க தொடங்கிவிட்டது. ஐபிஎல் தொடரில் உலகின் முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு முதல் ஏப்ரல் – மே மாதங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டாம் என்ற முடிவுக்கு ஐசிசி நிர்வாகிகள் வந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்