கேப்டன் ரோகித் சர்மா. 
விளையாட்டு

“அழுத்தம் காரணமாக அப்படி நடக்கிறது” - ரோகித்தின் கள ஆக்ரோஷம் குறித்து சூர்யகுமார்

செய்திப்பிரிவு

களத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் உணர்ச்சி வெளிப்பாடு ஏன் ஆக்ரோஷமாக இருக்கிறது என்பதற்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் விளக்கம் கொடுத்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ரோகித்தின் முகபாவனை வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மைய நாட்களாக களத்தில் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளார். அது அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அப்பட்டமாக வெளிப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் அது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலும் தொடர்ந்துள்ளது.

மொகாலியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஃபீல்ட் செய்திருந்த போது ரோகித் சிலவிதமான எக்ஸ்ப்ரஷனை வெளிப்படுத்தி இருந்தார். ‘அவன் இவன்’ படத்தின் ஒரு காட்சியில் நடிகர் விஷால் நவரசத்தை மேடையில் பொழிவார். அதுபோல உள்ளது ரோகித்தின் ஆக்ரோஷ பாவனைகள் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

வீரர்கள் கேட்ச்களை நழுவவிட்டால் ஒருவிதம், எதிரணி பேட்ஸ்மேன் அவுட் என்று மூன்றாவது நடுவர் அறிவித்தும் போகாமல் இருந்தால் ஒருவித பாவனை, டிஆர்எஸ் விவகாரத்தில் ரோகித் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே நடந்த அந்த வேடிக்கையான சம்பவம் என வெவ்வேறு விதமான செய்கைகளை ரோகித் செய்து வருகிறது. அதற்கு சூர்யகுமார் யாதவ் விளக்கம் கொடுத்துள்ளார்.

“அழுத்தம் காரணமாக இது மாதிரியான விஷயங்கள் நடைபெறுகின்றன. அவ்வளவுதான். வேறொன்றும் இல்லை. தினேஷ் கார்த்திக்கும், ரோகித்தும் நீண்ட நாட்களாக இணைந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். அதனால் அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள்” என சூர்யகுமார் யாதவ் சொல்லியுள்ளார். இந்திய அணி இன்று நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் விளையாடுகிறது.

SCROLL FOR NEXT