விளையாட்டு

2007 டி20 உலகக் கோப்பை இந்திய அணி கேப்டனாக தோனி ‘டிக்’ ஆனது எப்படி? - என்.சீனிவாசன் பகிர்ந்த நிஜக் கதை

செய்திப்பிரிவு

சென்னை: 2007 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பதை முன்னாள் ஐசிசி தலைவர் என்.சீனிவாசன் விவரித்துள்ளார். ஸ்போர்ட் ஸ்டார் சார்பில் நடைபெற்ற வரும் South Sports Conclave நிகழ்வில் இதனை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை திறம்பட வழி நடத்தி, பல வெற்றிகளை பெற்று கொடுத்த கேப்டன்களில் முதன்மையானவர் மகேந்திர சிங் தோனி. இது உலகறிந்த செய்தி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டிலும் அணியை சாம்பியனாக வலம் வரச் செய்தவர். அவரது கேப்டன்சி காலத்தை ஒரு சகாப்தம் எனவும் சொல்லலாம். தனக்கு பிறகு அணியை வழிநடத்தும் கேப்டன் யார் என்பதையும் அடையாளம் காட்டியவர்.

இந்நிலையில், தோனி எப்படி கடந்த 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பதை தெரிவித்துள்ளார் என். சீனிவாசன். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் கூட.

"ஐபிஎல் குறித்த அறிவிப்பு வெளியாக இருந்த சமயம் அது. உலகக் கோப்பை டி20 தொடரில் பங்கேற்க இந்திய அணி, தென்னாப்பிரிக்கா செல்ல தயார் நிலையில் இருந்தது. கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ராகுல் டிராவிட் முடிவு செய்திருந்தார். தனக்கு அந்தப் பணியில் திருப்தி இல்லை என அவர் சொல்லிவிட்டார். அதற்கான கடிதத்தையும் அவர் கொடுத்துவிட்டார்.

தொடர்ந்து அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவார் தலைமையில் ஆலோசனை நடந்தது. சச்சின் டெண்டுல்கர், பேராசிரியர் ரத்னாகர் ஷெட்டி மற்றும் திலீப் வெங்சர்க்கார் உடன் கூடி பேசினார். நான் அதை கவனித்துக் கொண்டிருந்தேன். சச்சின், கேப்டன் பொறுப்பு வேண்டாம் என சொல்லிவிட்டார்.

பின்னர் பவார் நீண்ட முடி கொண்ட ஒரு வீரரை சுட்டிக்காட்டினார். அவர் அந்த பணிக்கு சரி வருவாரா என்றெல்லாம் நாங்கள் எண்ணவில்லை. சரத் பவார் சுட்டிக்காட்டிய அந்த வீரர்தான் தோனி. தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார் கோப்பையுடன் நாடு திரும்பினார்" என என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார் .

SCROLL FOR NEXT