IND vs SA | தெறிக்கவிட்ட இஷான் கிஷன்: இந்திய அணி 211 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இஷான் கிஷன் அதிரடியின் துணையுடன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி இன்று தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியை ரிஷப் பந்த் கேப்டனாக வழிநடத்துகிறார்.

இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் குவித்தனர். ருதுராஜ் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயருடன் 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் இஷான் கிஷன். 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார் கிஷன். 3 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரி அவரது இன்னிங்ஸில் அடங்கும்.

15-வது ஐபிஎல் சீசன் முழுவதும் மோசமான ஃபார்மில் ஆடி வந்த அவர், இந்திய அணிக்கு திரும்பிய கையோடு ஃபார்முக்கும் திரும்பியுள்ளார். ஷ்ரேயஸ் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பின்னர் கேப்டன் பந்த் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இணைந்தனர். இருவரும் அதிவேகமாக ரன் குவிப்பதில் மும்முரமாக இருந்தனர். அதன் மூலம் 18 பந்துகளில் 46 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பந்த் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாண்ட்யா 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு இந்தியா 211 ரன்களை எடுத்தது. இப்போது தென்னாப்பிரிக்க அணி 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE