விளையாட்டு

'விரக்தியில் ஓட்டல் ரிமோட்டுகளை உடைத்தேன்' - நோ பால் சர்ச்சை குறித்து பான்டிங்

செய்திப்பிரிவு

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான தோல்விக்கு பிறகு விரக்தியில் ஓட்டல் அறையில் இருந்த ரிமோட்டுகளை உடைத்ததாக தெரிவித்துள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இதில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 223 ரன்களை விரட்டிய டெல்லி அணி விளையாடிய கடைசி ஓவர் சர்ச்சையாக வெடித்தது. அந்த ஓவரின் மூன்றாவது பந்து பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலே பவுன்ஸ் ஆனது போல இருந்தது. அதனால் நோ-பால் என அறிவிக்க வேண்டுமென டெல்லி அணியினர் நடுவர்களுடன் வாதாடினர். ஆனாலும் நடுவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.

டெல்லி அணியின் கேப்டன் பந்த், கள நடுவர்களுடன் பேச துணை பயிற்சியாளரை அனுப்பி இருந்தார். அதன் காரணமாக கேப்டன் பந்துக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதமும், டெல்லி வீரர் தாக்கூருக்கு 50 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. துணை பயிற்சியாளருக்கு 100 சதவீத அபராதமும், ஒரு போட்டியில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது குடும்பத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று இருந்த காரணத்தால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பான்டிங், மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார். அவர் அந்த போட்டியின்போது தனது மனநிலை என்னவென சொல்லியுள்ளார்.

"விரக்தியில் நான் எனது அறையில் இருந்த ரிமோட்டுகளை உடைத்தேன். எப்படியும் மூன்று அல்லது நான்கு ரிமோட்டுகளை உடைத்திருப்பேன் என நினைக்கிறேன். தண்ணீர் பாட்டில்களையும் சுவற்றில் வீசி எறிந்தேன். பயிற்சியாளராக நாம் மைதானத்தில் இருக்கும்போது களத்தில் அரங்கேறும் சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மைதானத்தில் இல்லாதபோது இப்படி நடத்தால் கொஞ்சம் விரக்தியாகத்தான் இருக்கும்.

லீக் போட்டிகளின் முதல் பாதி முடிந்துள்ளன. இரண்டாவது பாதியில் எங்களது அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்" என அவர் தெரிவித்துள்ளார். டெல்லி அணி நாளை கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

SCROLL FOR NEXT