'மீண்டும் செய்வார் என கணித்தே நகர்ந்து ஆடினேன்' - கடைசி சிக்ஸர்கள் குறித்து ராகுல் தெவாட்டியா

By செய்திப்பிரிவு

மும்பை: 'முதல் பந்தை கணித்தே கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முடிந்தது' என ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றிபெற உதவிய ராகுல் தெவாட்டியா தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 189 ரன்கள் குவித்தது. 190 என்ற இமாலய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் 96 ரன்கள் உதவியுடன் வெற்றி இலக்கை வெகுவாக நெருங்கியது. எனினும், 19வது ஓவரில் அவர் அவுட் ஆக ஆட்டத்தில் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதன்பின் குஜராத் அணி வெற்றிபெற 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீச வந்த ஓடியன் ஸ்மித், முதல் பந்தையே வொயிடாக வீசினார். இதனால் மீண்டும் முதல் பந்தை வீசியவர் டாட் பாலாக வீசினார். எனினும், கீப்பரிடம் சென்ற அந்த பந்தில் ரன் எடுக்க முயன்றார் கிரீஸில் இருந்த டேவிட் மில்லர். அவர் நினைத்ததுக்கு மாறாக கீப்பர் பேர்ஸ்டோவ் பந்தை தடுத்து ஸ்டம்பை நோக்கி எறிந்தார். இதில், ஹர்திக் பாண்டியா ரன் அவுட் ஆனார். கோபத்துடன் மில்லரை திட்டிக்கொண்டே ஹர்திக் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அடுத்து களம் புகுந்தார் ராகுல் தெவாட்டியா. இந்த சீசனில் பெரிதாக இன்னும் சோபிக்காத வீரராக உள்ளார் ராகுல் தெவாட்டியா. இதனால் அனைத்து நம்பிக்கையும் மில்லர் மீதே இருந்தது. அதற்கேற்ப தான் சந்தித்த முதல் பந்தை தெவாட்டியா சிங்கிள் எடுத்து மில்லரிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார்.

ஓடியன் ஸ்மித்தின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த மில்லர் நான்காவது பந்தில் ஒரு சிங்கிள் எடுத்தார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. ராஜஸ்தான் அணிக்காக விளையாட்டின்போது இதற்கு முன் கடைசி ஓவர்களில் சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றிபெறவைத்து அதன்மூலமாக ஐபிஎல்லில் ஸ்டாராக உயர்ந்தவர் ராகுல் தெவாட்டியா. இதனால் இந்த முறையும் அந்த மேஜிக் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு உருவானது.

அதற்கேற்ப, 5வது பந்தில் சிக்ஸர் அடித்து அனைவரையும் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்த தெவாட்டியா, கடைசி பந்தையும் சிக்ஸ் அடித்து மீண்டும் அந்த மேஜிக்கை நிகழ்த்திக் காட்டினார். இவரின் உதவியால் குஜராத் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

வெற்றிக்கு பிறகு பேசிய ராகுல் தெவாட்டியா, "கடைசி நேரத்தில் யோசிக்க முடியவில்லை. ஆனால், சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்று நானும் டேவிட் மில்லரும் பேசிக் கொண்டோம். அந்த பிளானுக்கு ஏற்பவே விளையாடினேன். கடைசி பந்து பேட்டின் நடுவில்பட்டது. பட்டதுமே தெரிந்துவிட்டது அது சிக்ஸ்தான் என்பது. கடைசி பந்து எப்படி வரும் என்பதை முன்கூட்டியே பிளான் செய்தேன். எப்படி என்றால், ஓடியன் ஸ்மித் எனக்கு வீசிய முதல் பந்தை ஆஃப் சைடில் வொயிட் போல் வீசினார். அப்படி தான் மீண்டும் செய்வார் என கணித்தேன். அதற்கேற்ப நகர்ந்து ஆடி சிக்ஸ் அடித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளையும் வென்ற ஒரே அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. இந்த மூன்று வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்