இந்தியாவிலிருந்து 90% நிதி ஐசிசிக்குக் கிடைத்தால் பாகிஸ்தான் வாரியம் சீரிழிந்துவிடும்: ரமீஸ் ராஜா கருத்து

By ஏஎன்ஐ

இந்தியாவிலிருந்து 90 சதவீத நிதியை ஐசிசிக்கு வழங்குவதாக இருந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சீரழிந்துவிடும். ஐசிசி என்பது இந்தியத் தொழிலதிபர்கள் நடத்தும் வர்த்தக மையமாக மாறிவிடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

கராச்சி நகரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செனட் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா பேசியதாவது:

''சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து பணம் பெற்று, அதைச் சார்ந்திருப்பதை பாகிஸ்தான் வாரியம் குறைத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. உள்ளூர் போட்டிகளை நடத்தி அதில் வருமானம் பார்க்க வேண்டும். ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பிரித்தாளும் அரசியல் அமைப்பாக ஐசிசி இருக்கிறது. ஏனென்றால், ஐசிசிக்கு 90 சதவீதம் நிதி இந்தியாவிலிருந்துதான் வருகிறது எனும் செய்தியே அச்சமாக இருக்கிறது.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தப்படுவதற்குத் தேவைப்படும் நிதியில் 50 சதவீதத்தை ஐசிசிதான் வழங்குகிறது. இந்தியத் தொழிலதிபர்கள் சேர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நடத்தினால், இந்தியப் பிரதமர் நாளை பாகிஸ்தானுக்கு எந்தவிதமான நிதியும் செல்ல அனுமதிக்கமாட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காலப்போக்கில் சீரழிந்துவிடும்.

ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கும் மேலாண்மை நிறுவனமாக ஐசிசி மாறிவிட்டது. நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென எங்களுடன் ஒருநாள் தொடரை ரத்து செய்தது ஏற்க முடியாதது. இதுபற்றி ஐசிசி ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. எங்களிடம் முன்கூட்டியே எந்தத் தகவலையும் நியூஸிலாந்து வாரியமும் பகிரவில்லை. ஆனால், தற்போது மீண்டும் தொடரை நடத்தலாம் வேறு தேதி கொடுங்கள் என நியூஸிலாந்து வாரிய அதிகாரிகள் கேட்கிறார்கள். அது தொடர்பாகவும் பேசி வருகிறோம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சரியாக விளையாடாமல், வெற்றிகளைப் பெறாமல் இருந்தால் என்னைப் பொறுத்தவரை வாரியத்தில் உள்ள அலுவலக பியூன் முதல் உயர் அதிகாரி வரை தங்களின் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம்''.

இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE