2-வது முறை: நடுவரின் தவறான தீர்ப்பால் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் கிங்ஸ்

By செய்திப்பிரிவு

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மூன்றாவது நடுவரின் தவறான தீர்ப்பால், பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

ஷார்ஜாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.

இதுவரை ஆர்சிபி அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் 3-வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது.

இன்னும் இரு போட்டிகள் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றில் எந்த இடம் என்பது வரும் போட்டிகளில் ஆர்சிபிக்கு முடிவாகும். அதேசமயம், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் 5 வெற்றி, 8 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் உள்ளது.

அடுத்துவரும் ஒரு போட்டியில் வென்றாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது. இதனால் கணித ரீதியாகப் போட்டித் தொடரிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது.

ஒருவேளை நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குக் கடுமையான போட்டியாளராக இருந்திருக்கும். அடுத்த ஒரு போட்டியில் கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ் இரு அணிகளில் எந்த அணி அதிக ரன் ரேட்டில் வெல்கிறதோ அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றில் 4-வது இடத்தை உறுதி செய்திருக்கும்.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் மூன்றாவது நடுவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீனிவாசன் அளித்த தவறான தீர்ப்பால் பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

ஆட்டத்தின் 8-வது ஓவரை பஞ்சாப் வீரர் ரவி பிஸ்னோய் வீச தேவ்தத் படிக்கல் எதிர்கொண்டார். ஓவரின் 3-வது பந்தை படிக்கல் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால், பந்து படிக்கல்லின் கிளவுஸில் பட்டு அதை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் கேட்ச் பிடித்தார்.

இதற்கு ராகுல், பிஸ்னோய் கள நடுவர்கள் கே.என்.அனந்த பத்மநாபனிடம் முறையிட அவர் அவுட் இல்லை என அறிவித்தார். இதையடுத்து, கேப்டன் ராகுல் அப்பீல் செய்ய 3-வது நடுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படிக்கல்லின் கிளவுஸில் பந்து பட்டு வந்தது தெளிவாகத் தெரிந்திருந்தும், அதற்கு அவுட் வழங்க மூன்றாவது நடுவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீனிவாசன் மறுத்து, அவுட் இல்லை என அறிவித்தார்.

இதை மைதானத்தில் உள்ள பெரிய திரையில் பார்த்த கேப்டன் ராகுல் அதிர்ச்சி அடைந்து கள நடுவர் அனந்த பத்மநாபனிடம் கேட்டார். மூன்றாவது நடுவரின் தீர்ப்பு இறுதியானது என்றவுடன் அதிருப்தியுடன் ராகுல் சென்றார். இந்த சர்ச்சை ஏற்பட்டபோது, படிக்கல் 35 ரன்கள் சேர்த்திருந்தார். அதன்பின் கூடுதலாக 5 ரன்கள் சேர்த்து படிக்கல் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 6 ரன்னில் தோல்வி அடைந்தது. ஒருவேளை இந்த 5 ரன்கள் ஆர்சிபி ஸ்கோர் கணக்கில் குறைவாக இருந்திருந்தால், ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றிருக்கும், ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தக்கவைத்திருக்கும்.

நடுவரின் தவறான தீர்ப்பு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 2-வது முறையாக அளிக்கப்படுகிறது. கடந்த சீசனில் இதுபோன்று ஒரு ரன் சரியாக ஓடவில்லை என்று நடுவர் வழங்கிய தீர்ப்பால் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் பஞ்சாப் தோற்றது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 158 ரன்கள் இலக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துரத்தி களமிறங்கியபோது மயங்க் அகர்வால், கிறிஸ் ஜோர்டன் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் கிறிஸ் ஜோர்டன் ரன்களை எடுப்பதற்காக ஓடியபோது, பேட்டை கிறிஸ் கோட்டிற்கு வெளியே வைத்துவிட்டு ஓடினார் என நடுவர் நிதின் கூறி, ஒரு ரன்னைக் குறைத்தார். ஆனால், ஜோர்டன் அந்தத் தவறைச் செய்யவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. நடுவரின் தவறான தீர்ப்பால், சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. நடுவர் சரியான முடிவை அளித்திருந்தால், சூப்பர் ஓவர் வரை வந்திருக்காது, பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த முறையும் ப்ளே ஆஃப் சுற்று சென்றிருக்கும்.

மூன்றாவது நடுவர் ஸ்ரீனிவாசனின் தவறான தீர்ப்பு குறித்து முன்னாள் கேப்டன் கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் ட்விட்டரில், “மோசமான நடுவர் தீர்ப்பு. ஏராளமான தொழில்நுட்பங்கள் உதவி செய்ய இருக்கும் இந்தக் காலத்தில், இதுபோன்ற தவறுகள் மன்னிக்க முடியாதவை” எனப் பதிவிட்டுள்ளார்.

நியூஸிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மூன்றாவது நடுவரை உடனடியாக நீக்குங்கள், என்ன நகைச்சுவை. எவ்வாறு இது நாட் அவுட்டில் சேரும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

43 mins ago

சுற்றுச்சூழல்

53 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

48 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்