சரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு

By செய்திப்பிரிவு

நாம் சரியாக விளையாடாவிட்டாலும் கூட தொடர்ந்து வெற்றிபெற்று வருவது என்பதே மகிழ்ச்சிக்குரியதுதான் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கலகலப்பாகத் தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஒரு கட்டத்தில் கடைசி இரு ஓவர்களில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா லாங் லெக்கில் ஒரு சிக்ஸர், ஸ்ட்ரெய்ட்டில் ஒரு சிக்ஸர், ஸ்குயர் டிரைவ், தேர்ட் மேனில் ஒரு பவுண்டரி என விளாசி ஆட்டத்தைப் பரபரப்பாக்கினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை சுனில் நரேன் வீசினார். முதல் பந்தில் சாம் கரன் (4) ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூர் 2-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 3-வது பந்தில் 3 ரன் எடுக்க ஆட்டம் பரபரப்பானது. சிஎஸ்கே வெற்றிக்கு 3 பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஆனால், 4-வது பந்தில் ஜடேஜா ரன் எடுக்காமல் 5-வது பந்தில் கால்காப்பில் வாங்கி (22) ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் தீபக் சஹர் ஒரு ரன் அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தார்.

சிஎஸ்கே அணியின் வெற்றிக்குக் காரணமாகவும், திருப்புமுனை ஏற்படுத்தவும் காரணமாக இருந்தவர் ஜடேஜாதான். 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்ளிட்ட 22 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ந்து பெறும் 6-வது வெற்றியாகும். கடைசிப் பந்தில் இலக்கை எட்டி சிஎஸ்கே அணி வெற்றி பெறுவது இது 7-வது முறையாகும். மும்பை இந்தியன்ஸ் அணி 6-முறை கடைசிப் பந்தில் வெற்றி பெற்றுள்ளது.

19-வது ஓவரை பிரசித் கிருஷ்ணாவுக்குக் கொடுக்கப்பட்டது தவறு என்று வாதம் வைக்கப்பட்டாலும், பிரசித் கிருஷ்ணா தன்னுடைய முதல் 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வழங்கினார், கடைசி ஓவரில்தான் 22 ரன்கள் வழங்கினார்.

ஆனால், சுனில் நரேன் தனது முதல் 3 ஓவர்களில் 37 ரன்களும், கடைசி ஓவரில் 4 ரன்களையும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல் 19-வது ஓவரை ரஸல்தான் வீசுவதாக இருந்தது.ஆனால், அவருக்குக் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் பிரசித் கிருஷ்ணா வீசவேண்டிய நிலை ஏற்பட்டது.

மிகச்சிறந்த ஃபினிஷர் எனப் புகழப்பட்ட சிஎஸ்கே கேப்டன் தோனி தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்த ஆட்டத்திலும் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஒரு ரன்னில் தோனி ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் இருந்து தொடர்ந்து 3-வது முறையாக வருண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா என்பது சந்தேகத்தை எழுப்பிய நிலையில் பிரமிப்பான, நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியதாவது:

''இது மிகவும் அழகான வெற்றி. சில நேரங்களில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவீர்கள், ஆனால் தோற்றுவிடுவீர்கள். ஆனால், சரியாக விளையாடாதபோதிலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிக்குரியது. இரு அணிகளுமே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர், பார்வையாளர்களுக்குச் சிறந்த விருந்தாக அமைந்தது.

எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினர், இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீசுவது எளிதானது இல்லை. 170 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். கொல்கத்தா அணி ஆட்டத்தைத் தொடங்கிய விதமும் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து இந்த ஆடுகளத்தில் விளையாட வேண்டுமென்றால், ஆடுகளப் பராமரிப்பாளர்கள் சிறிது தண்ணீர் விட்டு புற்கள் வளருமாறு செய்ய வேண்டும். நாங்கள் கடந்த காலங்களில் என்ன கற்றுக்கொண்டோமோ அதன் மூலம் வலிமையாக திரும்பி வந்துள்ளோம்''.

இவ்வாறு தோனி தெரிவி்த்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்