ஒலிம்பிக்கில் வெண்கலம்: பஞ்சாப்பைச் சேர்ந்த இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி ரொக்கப்பரிசு: அமைச்சர் அறிவிப்பு

By ஏஎன்ஐ

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, இந்திய அணியில் இடம் பெற்ற பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

டோக்கியோவில் இன்று நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுவரும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியால் ஒரு பதக்கத்தைக் கூட வெல்ல முடியவில்லை.

ஆனால், தற்போது 41 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக வெண்கலத்தை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

இந்திய அணி தரப்பில் சிம்ரன்ஜித்சிங் 2 கோல்கள் அடித்தார், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபேந்திர பால்சிங் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணிக்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பல்துறை விளையாட்டு வீரர்கள் என அனைவரும் சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதில் இந்திய அணியில் இடம் பெற்ற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு அந்த மாநில அரசு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநில விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ராணா குருமித் சோதி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்திய ஹாக்கி அணிக்கு இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். ஆதலால், இந்திய அணியில் இடம்பெற்ற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

உண்மையில் ஜெர்மனிக்கு எதிரான இந்திய அணியின் ஆட்டம் அமர்க்களமானது. நம்முடைய வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாகச் செயல்பட்டு 41 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்திலிருந்து சிம்ரன்ஜித் சிங், ரூபேந்திர சிங் பால், ஹர்மன்பிரித் சிங், ஹர்திக் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE