டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது குறித்து தனது வருத்தத்தை தமிழக வீராங்கனை பவானி தேவி பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து பவானி தேவி தனது ட்விட்டர் பக்கத்தில், “ இது மிகப் பெரிய நாள் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். ஒலிம்பிக் வாள்வீச்சு முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் வென்றேன். இதன் மூலம் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் வென்ற முதல் இந்தியா வீராங்கனையானேன். எனது இரண்டாவது போட்டியில், வாள்வீச்சு போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
எல்லா முடிவுகளுக்கு ஒரு ஆரம்பம் இருக்கிறது. நான் தொடர்ந்து பயிற்சி எடுத்து பிரான்ஸில் நடக்கும் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன். அடுத்த ஒலிம்பிக்கில் கூடுதல் வலியுடன் வருவேன். எனது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் 1896 ஆம் ஆண்டு வாள்வீச்சு அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில் இந்த விளையாட்டில் இந்த ஆண்டுதான் முதன்முறையாக இந்தியாவில் இருந்து பங்கேற்க தகுதி பெற்றார் சென்னையைச் சேர்ந்த சி.ஏ.பவானி தேவி.
கோயில் பூசாரி ஆனந்த சுந்தரராமன், இல்லத்தரசி ரமணி ஆகியோருக்கு மகளாக பிறந்த சடலவாடா ஆனந்த சுந்தரராமன் பவானிதேவி, அனைவராலும் சிஏ பவானிதேவி என அறியப்படுகிறார்.